Published:Updated:

மதுவைத் தொட்டதில்லை... ஒரே நாளில் 12 டயட் கோக்... ட்ரம்ப்பின் சுவாரஸ்ய உணவுப் பழக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

குடியரசுத் தலைவர் மாளிகையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டு மக்கள் சார்பில், ட்ரம்ப் தம்பதிக்கு மிகப் பெரிய விருந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியாவுடன் வரும் 24-ம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், மிகமுக்கிய நகரமான அகமதாபாத்துக்கு வருகை தர உள்ளார். விமான நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்துக்கு காரில் அழைத்துச்செல்லப்படுவார். வழி நெடுகிலும் 70 லட்சம் மக்கள் திரண்டு நின்று அமெரிக்காவின் முதல் தம்பதிக்கு வரவேற்பு அளிப்பார்கள். ட்ரம்ப் கார் செல்லும் வழியில் 28 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் காந்தி வாழ்ந்தபோது, அவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டு, சாலை நெடுகிலும் வைக்கப்பட உள்ளன. வல்லபபாய் படேல் மைதானத்தை டொனால்டு ட்ரம்ப் திறந்துவைத்த பிறகு, மதியம் 12.30 மணியளவில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி தொடங்கும். மாலை 3.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி நிறைவுபெறும்.

ட்ரம்ப் குடும்பம்
ட்ரம்ப் குடும்பம்

பின்பு, ட்ரம்ப் தம்பதியினர் டெல்லிக்குப் புறப்படுவார்கள். முன்னதாக தாஜ்மகால் சென்று, அங்கு ஒரு மணி நேரம் செலவிடுவர். பின்னர், இரவு 8 மணியளவில் டெல்லியில் தரையிறங்கும் அமெரிக்க முதல் தம்பதியினர், ஐ.டி.சி மௌரியா சாணக்யாபுரி ஹோட்டலில் தங்குவார்கள். அடுத்த நாள், அதாவது 25-ம் தேதி காலை, அரசியல்ரீதியான நிகழ்ச்சிகள் தொடங்கும். அன்றைய தினம் காலையில், குடியரசுத்தலைவர் மாளிகையில், ட்ரம்ப் தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு, ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள். டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி மதிய விருந்தளிப்பார்.

பின்னர், இருவரும் கூட்டாகச் சேர்ந்து ஊடகங்களைச் சந்திக்கின்றனர். அப்போது, செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அனுமதியில்லை. மதியம் 3 மணியளவில் அமெரிக்கத் தூதரகம் செல்லும் டொனால்டு ட்ரம்ப், சில தொழிலதிபர்களைச் சந்திக்கஉள்ளார். தூதரக அதிகாரிகளுடனும் உரையாடுவார். இரவு 7.15 மணிக்கு, மீண்டும் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு ட்ரம்ப் தம்பதி வருவார்கள். குடியரசுத்தலைவர் மாளிகையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டு மக்கள் சார்பில், ட்ரம்ப் தம்பதிக்கு மிகப்பெரிய விருந்தளிக்கப்படும்.

மனைவியுடன் ட்ரம்ப்
மனைவியுடன் ட்ரம்ப்
போயிங் 757 கதவுகள், செல்லப் பெயர் கப்பல்.. ஆனால் இது ட்ரம்ப்பின் பீஸ்ட் கார்! #VikatanInfographics

விருந்துக்குப் பிறகு, இரவு 10 மணியளவில் ஜெர்மனி வழியாக அமெரிக்காவுக்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் புறப்படுகிறது. இதுதான் இந்தியாவில் ட்ரம்ப் தங்கியிருக்கையில் அவரின் நிகழ்ச்சி நிரல்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காலை உணவு எடுத்துக் கொள்வதில்லை. வெண்பன்றி இறைச்சியை முட்டையுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் அவருக்கு உண்டு. அதனால், விருந்தில் பன்றி இறைச்சி இடம்பெறலாம். பால் மற்றும் தானியங்களும் விருந்தில் இடம்பிடிக்கலாம். டொனால்டு ட்ரம்ப்பிடம் டீ, காபி அருந்தும் பழக்கமும் கிடையாது. அமெரிக்கராக இருந்தாலும் மருந்துக்கும்கூட மது அருந்தும் பழக்கமும் ட்ரம்ப்பிடம் இல்லை. 'தன் வாழ்க்கையில் ஒரு கிளாஸ் ஆல்கஹால்கூட அருந்தியதில்லை' என்று அடிக்கடி ட்ரம்ப் கூறுவார். 'மது அருந்துபவர்களையும் தனக்குப் பிடிக்காது' என்பார்.

இது விமானமல்ல, பறக்கும் வெள்ளை மாளிகை... இந்தியா வரும் ட்ரம்ப்பின் 3 மாடி போயிங்747 #VikatanInfographics

ஆனால், 'ட்ரம்ப் வோட்கா' என்ற பெயரில் இவரது நிறுவனம் மது தயாரித்துவருகிறது. தற்போது, அமெரிக்காவில் ட்ரம்ப் வோட்கா விற்கப்படுவதில்லை என்றாலும், இஸ்ரேல் போன்ற நாடுகளில் அமோகமாக விற்பனையாகிறது. மது அருந்தும் பழக்கம் இல்லாத ட்ரம்ப், டயட் கோக்கை விரும்பிக் குடிப்பார். ஒரே நாளில் 12 டயட் கோக் பாட்டில்களைக்கூட காலி செய்வதுண்டு. சில சமயங்களில், எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், 14 முதல் 16 மணி நேரம் வரை இருப்பார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர்.

சர்ச்சை கிளப்புவதில் மட்டுமில்லை. சாப்பாட்டிலும் வித்தியாசமானவர்தான் ட்ரம்ப்.

அடுத்த கட்டுரைக்கு