Published:Updated:

`குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் கிடையாது!’ - சர்ச்சையில் சிக்கிய டொனால்டு ட்ரம்ப்

சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்தும் பகுதி எங்கள் எல்லைக்கு உட்பட்டது இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

சிரியா தாக்குதல்
சிரியா தாக்குதல் ( AP )

ரத்த பூமியான சிரியாவில் சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் பின் கலவரமாக மாறி, பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த 9 ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப் படைக்கு ரஷ்யாவும் கிளர்ச்சி படைக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியா தாக்குதல்
சிரியா தாக்குதல்
AP

சமீபத்தில், சிரியாவில் இருந்த தன் நாட்டு ராணுவப்படைகளைத் திரும்பப் பெற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். `முடிவே இல்லாமல் பல வருடங்களாக நடக்கும் போருக்கு எங்கள் நாட்டுப் படைகளை அனுப்ப முடியாது’ என அவர் விளக்கமளித்திருந்தார். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட துருக்கி, கடந்த சில நாள்களாக சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவில் உள்ள குர்திஷ் அமைப்பும் அமெரிக்கப் படைகளும் இணைந்து அரசுக்கு எதிராகவும், ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வந்தனர். குர்திஷ் மக்கள் சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென தனி நாடு கோரி போராடி வருகின்றனர். முன்னதாக நடந்த உள்நாட்டுப் போரின்போது சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளைக் கைது செய்து தங்கள் சிறையில் அடைத்திருந்தனர் குர்திஷ் அமைப்பினர்.

குர்திஷ் மக்கள்
குர்திஷ் மக்கள்
AP

தற்போது துருக்கி, குர்திஷ் மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவதால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அமெரிக்கப் படை இல்லாமல் துருக்கியை எதிர்கொள்ளச் சற்று திணறி வருகிறது குர்திஷ் படை. இந்தத் தாக்குதலால் குர்திஷ் வசம் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பித்து வருகின்றனர். `அமைதி வசந்தம்’ என்ற பெயரில் துருக்கி நடத்தி வரும் போரால் இதுவரை 500-க்கும் அதிகமான குர்திஷ் மற்றும் சிரியா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

துருக்கிக்கு எதிராகப் போரிட சிரியா அரசுப் படையின் உதவியை நாடியுள்ளது குர்திஷ். சிரியா படைக்கு ரஷ்யாவின் ஆதரவு இருப்பதால் இரு படையைச் சேர்ந்த வீரர்களும் சிரியாவின் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்நாட்டுப் போர், இரு நாடுகளுக்கும் இடையேயான போராக மாறும் அபாயம் நிலவுகிறது.

துருக்கி அதிபர் தயீப் எர்டோகன்
துருக்கி அதிபர் தயீப் எர்டோகன்
AP

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், ``குர்திஷ் படைகள் தங்கள் சிறையில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளை அவர்களே விடுதலை செய்து வருகின்றனர். சிரியாவில் துருக்கியின் பாதுகாப்பு வளையத்தை அமைக்கும்வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றி எந்தக் கவலையும் இல்லை” என்று பேசியுள்ளார்.

முன்னதாக குர்திஷ்களின் உற்ற நண்பனாக இருந்த அமெரிக்கா தற்போது அவர்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றதால் உலக நாடுகளின் கண்டனங்களைப் பெற்றுள்ளார் அதிபர் ட்ரம்ப். இவரின் நடவடிக்கையைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அனைவரும் ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

குர்திஷ் பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள அதிபர் ட்ரம்ப், ``அமெரிக்க வெள்ளை மாளிகை ஒன்றும் காவலர் கிடையாது, சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் நேரம் இது. நம்முடன் சேர்ந்து போரிட்டபோது குர்திஷ்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், தற்போது தனியாகப் போரிடும்போது அவர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது என் எல்லைக்கு உட்பட்டதல்ல, அதேபோல் குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் இல்லை. துருக்கியில் குர்திஷ் தன்னாட்சிக்காகப் போராடி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி, பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பைவிட மிகவும் மோசமானது” எனக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.