Published:Updated:

பொதுமன்னிப்பு....45,000 இந்தியர்களை திருப்பி அனுப்பும் குவைத்!

Airport
Airport ( AP | Sunday Alamba )

குவைத்தில் சூழலைச் சமாளிக்க 2 டன் மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள்கள் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்க முன்வந்திருப்பதை சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான குவைத் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகச் சிறிய நாடாகும். தெற்கே சவுதி அரேபிய நாட்டுடனும் மேற்கே ஈராக்குடனும் தனது எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் குவைத், பல இயற்கை வளங்களையும் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட செல்வ செழிப்பான நாடாகும்.

உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் குவைத், முன்னதாக தனது எல்லை நாடுகளின் ஆதிக்கத்தில் சிக்கி தனது பொருளாதார மதிப்பை இழந்தது. ஆனால் அதன் பின் மீண்டெழுந்த குவைத் இன்று உலகளவில் பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. உலகின் அதிக மதிப்புடைய கரன்சியாக இன்றளவும் குவைத்தின் தினார் தான் இருந்து வருகிறது. அதன் காரணமாகவே குவைத்துக்குப் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வேலைக்குச் செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

குவைத்
குவைத்
Twitter

குறிப்பாக குவைத் இந்தியாவின் நட்பு நாடாகும். இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் குவைத்துக்கு வேலை காரணங்களுக்காகச் சென்று அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். குவைத்தில் நல்ல சம்பளம் பெற்றுக்கொண்டு அங்கிருந்து இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி வருகின்றனர்.

பொதுவாக இந்தியாவில் இருந்து வேலை காரணங்களுக்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத்துக்குச் செல்வோர் அங்கு சில வருட காலங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒப்பந்த காலம் முடிந்து விட்டால் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பி விட வேண்டும் இல்லையென்றால் மீண்டும் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க குவைத் அரசிடம் உரிய விளக்கத்தை அளித்து கோரிக்கை வைத்து முறையாகப் புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்து வசிக்கலாம்.

ஆனால், பெரும்பாலானவர்கள் அப்படி செய்யாமல் சட்ட விரோதமான முறையில் குவைத்தில் இருந்துகொண்டு பல துறைகளில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி சட்ட விரோதமாக குவைத்தில் வசித்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று! - ஹாட்ஸ்பாட் ஆகிறதா கோயம்பேடு சந்தை?

இந்த நிலையில் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியில் குவைத்தும் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறது. குவைத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்துள்ளனர். அதேபோல் 4,300 க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பார்ப்பவர்களுக்கு இந்தப் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் மிகக் குறைவாக தோன்றினாலும் மக்கள் தொகை குறைவான மற்றும் பரப்பளவில் இறுக்கமான குவைத்துக்கு இது அதிகம்தான்.

குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் இந்தியர்கள் தான் மிக அதிகம். கடந்த சில வாரங்களாகவே குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றன. அதைத் தொடர்ந்து குவைத்தில் சட்ட விரோதமாக வசித்து வரும் இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களையும் அந்நாட்டு அரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளது. குவைத்தை பொறுத்தவரையில் அந்நாட்டு அரசு அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து சட்ட விரோதமாக வசிப்பவர்களுக்குக் கடுமையான அபராதங்களும் தண்டனைகளும் வழங்கப்படுவது வழக்கம்.

இந்தியாவில் ஊரடங்கு
இந்தியாவில் ஊரடங்கு
AP | Rajesh Kumar Singh

ஆனால், குவைத்தில் சமீபகாலமாக வேகம் எடுத்து வரும் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக குவைத் அரசு இந்தியர்கள் உட்பட குவைத்தில் சட்ட விரோதமாக வசிக்கும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் சிறப்புப் பொது மன்னிப்பு அளித்து குவைத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் குவைத்தை விட்டு 45,000 இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதுகுறித்து பேசிய குவைத் தூதர் ஜஸ்ஸெம் அல்-நஜெம், ``குவைத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குவைத்தில் சட்டவிரோதமான முறையில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். மேலும், அவர்கள் பாதுகாப்புக்கு நாங்களே பொறுப்பேற்று எங்களின் தனி விமானங்களில் அவர்களை, அவர்கள் நாடுகளுக்குக் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக இங்கிருந்து இந்தியாவிற்குச் செல்ல விரும்புவோரின் பட்டியலையும் இந்திய அரசிற்கு அனுப்பியிருக்கிறோம். அவர்களின் ஒத்துழைப்போடு மேலும் குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களையும் எங்கள் விமானங்கள் மூலமாக இந்தியா சேர்க்க முடிவெடுத்துள்ளோம். இந்த வெளியேற்றத்திற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பும் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இந்தியாவில் மே3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முழுமையாக நிறைவடைந்த உடன் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக குவைத் அறிவித்திருந்தது. இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் குவைத் அரசு இதை அறிவித்திருந்தது.

குவைத்தில் பொதுமன்னிப்பு திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அங்கிருந்து சுமார் 45,000 இந்தியர்கள் வரை வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் -19 தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் உலகளவில் விதிக்கப்பட்ட பின்னர் குவைத்தில் விசா காலாவதியாகியும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களையும் வெளியேற்ற கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று அந்நாட்டு அரசு பொது மன்னிப்பு வழங்கியது. மேலும் அபராதங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை என்றும் கூறியிருந்தது.

வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்
வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்

குவைத்தில் இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து இந்திய வெளியுறவு துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியர்களைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளில் குவைத் அரசு களம் இறங்கி வருகிறது. குவைத் நாட்டின் டாப் 10 வர்த்தகக் கூட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த வாரம் இந்தியாவில் சிக்கித் தவித்து வந்த குவைத் மக்களை குவைத் ஏர்வேஸ் விமானங்களில் பத்திரமாக இந்தியாவில் இருந்து வெளியேற்ற உதவியதற்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த இந்தியாவுக்கான குவைத் தூதர்

அல்-நஜெம், இந்திய அரசு குவைத்தில் சூழலைச் சமாளிக்க 2 டன் மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள்கள் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்க முன்வந்திருப்பதை சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து குவைத் அரசு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு விட்டு பின்னர் குவைத்தில் வசிக்கும் 45,000 இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு