Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஓர் அகதி முகாமின் பின்கதவு புன்னகைகள்! | பகுதி - 14

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

``உன்னைப் பற்றிக் கேட்ட கேள்வி எதுக்குமே நான் தெரியாது எண்டுதான் சொன்னனான் ராதா. நீ பயப்படாத. நீ கட்டாயம் வெளியில போயிருவாய். குழந்தையோட தனியா உள்ளுக்க வெச்சிருக்க மாட்டங்கள்.”

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஓர் அகதி முகாமின் பின்கதவு புன்னகைகள்! | பகுதி - 14

``உன்னைப் பற்றிக் கேட்ட கேள்வி எதுக்குமே நான் தெரியாது எண்டுதான் சொன்னனான் ராதா. நீ பயப்படாத. நீ கட்டாயம் வெளியில போயிருவாய். குழந்தையோட தனியா உள்ளுக்க வெச்சிருக்க மாட்டங்கள்.”

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

மெல்போர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் வந்திருந்த நீதனைப் பற்றி மாத்திரமன்றி, சகல அகதிகளினதும் தலையில் புள்ளிவைத்து சித்திரம் வரைந்து, அவர்களின் பூர்வீகம், நட்சத்திரம் முதற்கொண்டு அனைத்தையும் தகவல்களாகச் சேகரித்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறை. வெவ்வேறு முகாம்களில் வந்திருந்தவர்களின் படங்களைக் காண்பித்து, `இவரைத் தெரியுமா?’ – என்ற கணக்கில் ஏராளம் கேள்விகளைக் கொட்டி விசாரணைகளை ஆரம்பித்தார்கள்.

போரிலிருந்து உயிர்தப்பி தஞ்சம் கேட்டு வந்தவர்கள் என்ற எந்த தாட்சண்யமும் இல்லாமல், வந்தவர்களிலிருந்து கிரிமினல்களை வடிகட்டி எடுக்க வேண்டும் என்ற அதீத அவதானத்துடன் புலனாய்வுப் பிரிவினர் நாடெங்குமுள்ள அகதி முகாம்களில், பதி கருவிகளோடு பாசிபோல ஒட்டிக்கிடந்தார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இஸ்லாமிய தேசங்களிலிருந்து வருகிற அகதிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள், மைக் நீட்டிய ஊடகங்கள் அனைத்திடமும் மந்திரம்போல உச்சாடனம் செய்துகொண்டிருந்தார்கள். பெரிய பெரிய இராச்சியங்களின் சரிவுதான் பல உதிரிப் போராளிக்குழுக்களை உருவாக்குவது வழக்கம் என்றும், தனியாக இயங்கும் பயங்கரவாதிகளைப் பிரசவிப்பது வரலாறு என்றும் ஆவணங்களை முகத்துக்கு முன்னால் ஆட்டியபடி `ஆய்வாளர்கள்’ என்ற பெயரில் பலர் ஆஸ்திரேலிய மக்களை பயம் காட்டினார்கள்.

ஆஸ்திரேலியாவை நோக்கி வருகிற அகதிப்படகுகள் அனைத்தையும், தற்கொலைத் தாக்குதலுக்குக் குண்டு நிரப்பிக்கொண்டு வருகின்ற படகுகள்போலவே கண்டு, தேசம் அச்சம்கொள்ள வேண்டும் என்று அரசின் கொள்கைகளுக்கு சாம்பிராணி தூவுகிற ஊடகங்களில், ஆஸ்தான ஆய்வாளர்கள் பலர் அறைகூவிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு அரசால் உருவாக்கப்பட்ட கடுமையான அகதி எதிர்ப்புக் கொள்கையை ஊடகங்கள் மக்கள் மத்தியில் நியாயப்படுத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில், கரை சேர்ந்த அகதிகள் ஆஸ்திரேலியா முழுவதுமிருந்த முகாம்களில் கடும் விசாரணைகளுக்குள் தோய்த்து எடுக்கப்பட்டார்கள்.

ஆள் கடத்தல்காரர்கள், சொந்த நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஆயுதங்களைப் புழங்கியவர்கள் ஆகியோர் முதற்கொண்டு, தாங்களும் புரட்சிவாதிகள் என்று படம் காண்பித்த பலரும்கூட இந்த வலையில் வீழ்ந்தார்கள்.

இவ்வாறு ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினரால் கவனமாகக் கழுவி எடுக்கப்பட்ட அகதிகளில், இந்தோனேசியாவிலிருந்து படகேறிய கானகன் அகப்பட்டான்.

இவ்வாறு ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினரால் கவனமாகக் கழுவி எடுக்கப்பட்ட அகதிகளில், இந்தோனேசியாவிலிருந்து படகேறிய கானகன் அகப்பட்டான்.

கொழும்பில் நீதனுக்கு வலமும் இடமுமாக நின்று பணியாற்றியவன் கானகன்.

கொழும்பு நடவடிக்கைகளுக்கும், கிளிநொச்சிக்குமான குருவியாக யார் கண்ணிலும் தெரிந்துவிடாமல், பறந்து நுழைந்து வந்து போய்க்கொண்டிருந்தவன் அவன். ராதாவைக் கொழும்புக்கு அழைத்து வந்தது முதல், நீதனுக்கும் கிளிநொச்சிக்குமான இறுதிக்கட்டத் தொடர்புகள் வரை கூடவே கரைந்துகிடந்தவன்.

டார்வின் அகதிகள் முகாமில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது, நீதனைப் பற்றியும் ராதாவைப் பற்றியும் முழுமையாக எதுவும் சொல்லிவிடாவிட்டாலும், அவர்களது கொழும்பு நடவடிக்கைகள் பற்றிப் போதிய அளவு தகவலை ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்புவித்தான்.

கடலிலிருந்து கழுவியெடுத்த மீன்போல ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினர் முன்பாக, நீதன் துடித்தான். எல்லாக் கேள்விகளையும் சுழற்றிச் சுழற்றி வீசினார்கள் விசாரணையாளர்கள். நீதன் இயன்ற அளவு எல்லாவற்றையும் சமாளித்தான். கொழும்பில் விடுதலைப் புலிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட உணவகம் ஒன்றில் பணிபுரிந்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை புலிகளுக்கு வரியாகச் செலுத்தியதாகவும், தான் முன்வைத்த கதையில் உறுதியாக நின்றான் நீதன். அதன் பிறகு, பயத்தில் இந்தோனேசியாவுக்கு வந்து, அங்கேயும் உணவகத்தை ஆரம்பித்ததாகத் தனது கதைக்கு அலங்கரமான ஆணிவேரைப் பொருத்தினான்.

ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறை விசாரணையாளர்கள் எவ்வளவுதான் முயன்றும், அவர்களால் ஆதாரத்துடன் நீதனை நிரூபிக்க முடியவில்லை. ஆனால், நீதன் நிச்சம் பொய் சொல்கிறான் என்ற தங்களது சந்தேகத்தை அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

அந்தச் சந்திப்புக்குப் பின்னர், நீதன் தனக்கு முகாமிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்தான். தனது வாழ்வின் முழுமையான உண்மை ஆஸ்திரேலிய அரசின் கைகளில் உள்ளது என்ற அச்சம், பெரும் தோல்வியை அவனுக்குள் விதைத்தது.

கானகன் மீது எழுந்த வெறுப்பும், ஒரு பெரும் போர் நிலத்தில் பெருக்கெடுத்துப் பாய்ந்த துரோக நதி கடைசியில் ஆஸ்திரேலியா வரை வந்து, தன் மீதும் ஒரு துளியை விடமாக வீசிச் சென்றிருக்கிறது என்ற சீற்றமும் அவனுக்குள் கொந்தளித்தபடியிருந்தன.

ராகவன் மாஸ்டருடன் பேசப் போகிறபோதெல்லாம், அவர் புலனாய்வுத் திட்டங்களை விளங்கச் சொல்லும்போது, அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்... ``பரிணாமத்தின் அடிப்படையே, தக்கன பிழைத்தல்” என்பதுதான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

அகதிகளின் பரிசுத்த வாக்கியமும் அதுதான். அந்தப் பிழைத்தலின் அடிப்படையே துரோகம்தான்.

ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினரின் சந்திப்பு நிறைவடைந்த பிறகு, `சார்ளி கம்பவுண்ட்’ பக்கம் நீதன் போகவில்லை. `அல்பா கம்பவுண்ட்’ பக்கம் அவ்வப்போது எட்டிப் பார்த்துவிட்டுச் சென்ற ராதா, வெளித்திடலில் பந்து விளையாடிக்கொண்டிருந்த பெடியன்களிடம் நீதனைப் பற்றி விசாரித்தாள். நீதன் இரண்டு மூன்று நாள்களாகப் பகல் வேளையிலும் நன்றாக நித்திரைகொண்டான்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அன்று மாலைதான் சார்ளி கம்பவுண்டுக்குப் போனான். காரணம், அன்று முகாமே குதூகலித்துக்கொண்டிருந்தது.

கடலில் குழந்தையை இழந்த குயிலனையும் மனைவியையும் பார்த்து ஆறுதல் சொல்லி ஆசீர்வதிப்பதற்கென்று, ஆஸ்திரேலிய அரசு சார்பற்ற அமைப்பொன்று கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரையும் அழைத்துக்கொண்டு அன்று மாலை முகாமுக்கு வந்திருந்தது. குயிலனும் மனைவியும் அவர்களுடன் விருந்தினர் மண்டபத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, இருவரையும் உடனடியாக அழைத்துவருமாறு, குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகள் வானொலியில் அறிவித்தார்கள். சந்திப்பு அறைக்கு ஓடிச் சென்ற குயிலன் தம்பதியருக்கு உடனடியாகவே தற்காலிக விசா விண்ணப்பங்களைக் கொடுத்து, கையெழுத்திடச் சொன்னார்கள் அதிகாரிகள். ஆஸ்திரேலியா நோக்கிப் படகேறிய பிறகு, முதன்முதலாக நல்ல செய்தியொன்று அன்று அவர்களின் முன்னால் பொழிந்தது.

குயிலனும் மனைவியும் உடனடியாகவே முகாமிலிருந்து விடுதலையாகிறார்கள் என்ற செய்தி முகாமெங்கும் பரந்தோடியது.

`சார்ளி கம்பவுண்ட்’ குடும்பங்கள் குயிலனின் அறைக்கு ஓடிச் சென்றார்கள். அறைக்கு வெளியில் எல்லோரும், தமக்கு விசா கிடைத்தது போன்ற குதூகலத்தில் துள்ளிக்குதித்தார்கள். தமிழ்ப் பெண்கள் சிலர் குயிலன் தம்பதியரின் அறைக்குள் சென்று, அவர்களது பொருள்களைப் பொதிசெய்வதற்கு உதவி செய்தார்கள். தங்களுக்கும் ஒருநாள் இப்படி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அவர்களது முகம் முழுவதும் பொங்கி ஓடின.

குயிலன் தம்பதியரின் அறைக்கு அருகிலிருந்து ஆப்கன் மூதாட்டியொருவர் நடைத்தடியை ஊன்றி வந்து, குயிலனின் மனைவியைக் கட்டியணைத்து முத்தமிட்டார். குயிலனின் மனைவி அறையிலிருந்த சிறிய வானொலியை அவளது கைகளில் கொடுத்து, தனது ஞாபகமாக இருக்கட்டும் என்று பதிலுக்கு அணைத்துக்கொண்டாள். குழந்தையை இழந்த குயிலனின் குடும்பத்துக்கு மன ஆறுதலாக இருக்கட்டும் என்றும் விருந்தினர் ஒருவர் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போன வானொலி அது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

குயிலனுக்கு வெளியிலிருந்து ஒருவர் கொண்டுவந்து பரிசளித்த உடற்பயிற்சிப் பலகையை, பங்களாதேஷ் அகதி இளைஞனிடம் அவன் தூக்கிக்கொடுத்தான். பரஸ்பரம் அன்பு பெருக்கெடுத்தது. வெவ்வேறு தேசங்களிலிருந்து ஒற்றை நம்பிக்கையோடு ஓடிவந்த, அகதி என்ற சொல்லினால் இணைந்துகொண்டவர்கள், தங்கள் மத்தியில் இவ்வளவு காலத்தில், ஆழ வேரூன்றியிருந்த பிணைப்பை ஆச்சர்யத்தோடு உணர்ந்தார்கள்.

இரான் குடும்பமொன்று குயிலனும் மனைவியும் முகாமுக்கு வந்தநாள் முதல் அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்கள். இரானிலுள்ள தங்களது அக்காவின் குழந்தையும் நீச்சல் குளத்தில் வீழ்ந்து இறந்துபோனதாக, அடிக்கடி குயிலனின் மனைவியோடு பேசி ஆறுதல் கூறியவர்கள். குயிலனுக்கும் மனைவிக்கும் விசா கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், தங்களது கைகளால் கடைசியாக ஒரு தேநீர் அருந்திவிட்டுப்போகவேண்டும் என்று சமையலறைக்குச் சென்று, அவசர அவசரமாக தேநீர் போட்டுக்கொண்டு நடு மைதானத்தினால் ஓடிவந்தாள்.

அப்போது அந்தக் கூட்டதோடு நீதனும் வந்து இணைந்துகொண்டான். அறைவாசலில் நின்று பொருள்களைப் பொதி செய்துகொண்டிருந்த குயிலன், கூட்டத்தை விலத்தி ஓடிச் சென்று நீதனைக் கட்டியணைத்தான். கண்ணீர் மல்கினான். நீதனின் தாடைகளை இரண்டு கைகளாலும் ஏந்தி, ``அண்ணே…’’ என்று வார்த்தைகளற்ற வரண்ட ஒலியில் தேம்பி அழுதான். குயிலனுக்கும் அவன் மனைவிக்கும் நீதன் மீதிருந்த அன்பு அளவற்றது. தங்களது குழந்தையை எந்திய கடைசி மனிதன் நீதன் என்ற அந்தப் பிணைப்பு, ஆயுளுக்கும் பிரிக்க முடியாதது.

நீதனுக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த துயரப் பெருங்கடலில், தவறுதலாகப் பூத்த மலர் போல குயிலன் தம்பதியினரின் அன்பு நறுமணமாய் பரவும். அவர்களுக்கு விசா கிடைத்து விடுதலையாகப்போகிறார்கள் என்ற செய்தி, அவன் இதயத்தின் ஒவ்வொரு நரம்பிலும் குளிர் நதியாகப் பரவியோடியது.

பொதிகளைச் சக அகதிகள் சுமந்து செல்ல, நட்சத்திர அகதிகள்போல பெருங்கூட்டத்தோடு, குயிலனும் அவனது மனைவியும் முகாமின் பின்னாலுள்ள பெரிய வாசலுக்குப் போனார்கள். அங்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கான வாகனமும், குடிவரவு அதிகாரிகளும் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தார்கள்.

வாகனத்தில் ஏறுவதற்கு முன்னர், ஓடி வந்து நீதனைக் கட்டியணைத்த குயிலன்

``நீங்கள் கெதியா வெளியில வருவீங்கள் அண்ணே”
– என்று நம்பிக்கையோடு தோளில் குத்தினான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று நீதனுக்குத் தெரியவில்லை. பொதுவானதொரு புன்னகையை பதிலாகக் கொடுத்தான்.

முகாம் மீது விழுந்துகொண்டிருந்த சூரியனால், அந்த மாலை நேரம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டது. பின் படலையடியில் வைத்து, மீண்டும் குயிலனதும் மனைவியினதும் விண்ணப்பப் படிவங்களை சரிபார்த்த குடிவரவு அதிகாரிகள், வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.

ஒரு தொகை அகதிகளின் கொத்தான புன்னகையை நினைவுகளாக அள்ளிக்கொண்டு, முகாமின் பெருவீதியின் அந்தத்தில், அந்த வாகனம் ஒரு புள்ளியாகத் தெரிந்து மறைந்தது.

திரும்பிப் பார்த்தபோது, தனது அருகில் ராதா நின்றுகொண்டிருப்பதைக் கண்டான் நீதன்.

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வந்தபோது ராதாவின் கண்களில் தெரிந்த படபடப்பு இன்றும் அவளில் அப்படியே தெரிந்தது. நீதனை முகாமில் கண்டது முதல், அவளுக்குள் ஏற்பட்ட எத்தனையோ மாற்றங்களின் ஒரு பகுதியாக அவள் அங்கு நின்றுகொண்டிருந்தாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

``இரண்டு கிழமையாகக் காணேல்ல, ஏதாவது சுகமில்லையா?”

உரிமையோடு நீதன் மீது கேள்விகளைக் கொழுவத் தொடங்கியவள், தனது குழந்தையை நீதன் கேட்காமலேயே அவனிடம் கொடுத்தாள்.

அன்றைய தினம், அவர்கள் வழக்கமாகப் பேசுகின்ற தகரக்கொட்டகையிலிருந்து நீதன் தனது இந்தோனேசிய வரலாற்றை மேலும் விரிவாக ஒப்புவித்தான். அனீஸாவின் மீதான காதல், இரண்டு குழந்தைகள் பற்றியெல்லாம் நீதன் கூறியபோது, ``அம்மா ஏன் அழுகிறீங்கள்?” – என்று ராதாவின் மகள் தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

அங்கிருந்து தான் கடத்தப்பட்டதையும் பிறகு படகேறியதையும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினர் கேட்ட கேள்விகளையும் நீதன் சொல்லி முடித்தபோது, ராதா முற்றிலுமாக விறைத்துப்போயிருந்தாள்.

கடைசியில், தன்னையும் நீதனையும் சரியான இடத்தில்தான் கொண்டுவந்து அமுக்கியிருக்கிறார்கள் என்பதுபோல, அவளது கண்களில் எத்தனையோ பதற்றங்கள், ரேகைகளாகத் தெரிந்தன.

தனது விடுதலையும் கிட்டத்தட்ட இனிச் சாத்தியமில்லை என்பதை ராதா நிச்சயமாக நம்பினாள். மகளை அணைத்து இழப்பின் பெருமூச்செறிந்தபடி முத்தமிட்டாள்.

``உன்னைப் பற்றிக் கேட்ட கேள்வி எதுக்குமே நான் தெரியாது எண்டுதான் சொன்னனான் ராதா. நீ பயப்படாத. நீ கட்டாயம் வெளியில போயிருவாய். குழந்தையோட தனியா உள்ளுக்க வெச்சிருக்க மாட்டங்கள்.”

``இப்படி எத்தனை நம்பிக்கையள கட்டிக் கட்டி தோத்துப்போனம் நீதன்,”

அடுத்தவாரம், முகாம் இன்னொரு தடவை விழாக்கோலம் பூண்டது. `சார்ளி கம்பவுண்ட்’ அகதிகள் எல்லோரும் புடை சூழ, ராதாவும் குழந்தையும் முகாமின் பின்வாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். விண்ணப்பப் படிவங்களின் கடைசி வரியில் கையெழுத்திட்ட ராதா, புதிர் அடங்காத அந்த முகாமின் வேலிகளை ஊடுவருவிய பார்வையில், நீதனை ஒரு சுடர்போல ஏற்றிக்கொண்டு, கையசைத்தபடி குழந்தையோடு விடுதலையாகிப் போனாள்.

(தொடரும்...)