Published:Updated:

``வெட்கப்படுங்கள், இந்தியாவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!''-சீனாவில் குமுறும் பாகிஸ்தான் மாணவர்கள்!

இம்ரான் கான்
இம்ரான் கான்

கொரோனா வைரஸ் பாதித்த சீனாவிலிருந்து தங்கள் நாட்டு மாணவர்களை அப்புறப்படுத்த பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

சீனாவின் வுகான் நகரம் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் சொர்க்கபூமி. வுகான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மட்டும் 45 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதனால், இதர ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த நகரில் மருத்துவம் படிக்க விரும்புவார்கள். இங்கே, ஆங்கிலத்தில் மருத்துவம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல். அதோடு, கல்விக் கட்டணமும் குறைவு. இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் மருத்துவம் படிக்க வுகான் நகரை விரும்பித் தேர்வு செய்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

அழகிய வுகான் பல்கலை
அழகிய வுகான் பல்கலை

ஆனால், இந்த மருத்துவ நகரத்தை கொரோனா வைரஸ் சின்னா பின்னமாக்கி உள்ளது. இதனால், நகரம் மயானம் போல வெறிச்சோடிக் கிடக்கிறது. மக்கள் வெளியே நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவர் மட்டுமே தகுந்த பாதுகாப்புடன் வெளியே வந்து தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு, மீண்டும் வீட்டுக்குள் சென்று விட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வுகான் நகரத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டன. இந்தியா துரிதமாகச் செயல்பட்டு, வுகானிலிருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை அழைத்து வந்துவிட்டது. இதற்காக, ஏர் இந்தியாவின் ஜம்போ விமானம் இரு முறை தகுந்த பாதுகாப்புடன் வுகான் சென்று திரும்பியது. அதே வேளையில், பாகிஸ்தான் சீனாவின் நெருங்கிய நட்பு நாடு என்பதால், தங்கள் மாணவ- மாணவிகளை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஒரு தரப்பினர் விமர்சனம் வைக்கின்றனர்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இதனால், பாகிஸ்தான் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தங்களை எப்போது கொரோனா வைரஸ் தாக்குமோ என்ற அச்சத்தில் தங்குமிடங்களில் அடைந்து கிடக்கின்றனர். சீனாவின் நட்புக்காக தங்கள் நாட்டு மாணவர்களின் உயிர்களை பாகிஸ்தான் பணயம் வைப்பதாக விமர்சனம் எழுந்த பிறகும், இம்ரான் கான் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. 'சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்!' என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார்.

மற்ற நாடுகள் தங்கள் மாணவர்களை கருணையுடன் பத்திரமாக மீட்டுச் செல்கின்றன. பாகிஸ்தான் தூதரகமோ எந்தப் பதிலும் சொல்ல மறுக்கிறது.
பாக். மாணவர்கள் குமுறல்

இதையடுத்து, வுகான் வாழ் பாகிஸ்தான் மாணவர்கள் கொதித்து எழுந்துள்ளனர். இந்திய மாணவர்களை இந்திய அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் மாணவர்கள், "வுகானிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், வங்கதேசவாசிகள் வெளியேறுகின்றனர். ஆனால், நாங்கள் செத்தாலும் கவலையில்லை என்று பாகிஸ்தான் அரசு நினைக்கிறது. உயிரோடு எங்களைக் கொல்லும் வேலையில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது. இத்தகைய செயலுக்காக பாகிஸ்தான் அரசு வெட்கப்பட வேண்டும். இந்தியர்களிடமிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

பிரதமருக்காகத் தயாராகும் `வான்வெளி வீடு'... ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானங்கள்!

இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த மாணவர் முகமது ரால்ஃப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "கடந்த 10 நாள்களாக டார்மென்டரி அறையை மூடிக்கொண்டு உள்ளேயே அடைந்து கிடக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், எங்களை அப்புறப்படுத்த இம்ரான் கான் அரசு முன்வரவில்லை. மற்ற நாடுகள் தங்கள் மக்களை பத்திரமாக அழைத்துப் போய் விட்டன. மற்ற நாடுகள் செய்யும் போது, பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை. எங்கள் நாட்டுத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டால் முறையான பதிலும் இல்லை. பாகிஸ்தான் அரசின் இத்தகைய செயல் எங்கள் குடும்பத்தினரை வேதனையடையச் செய்துள்ளது" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

வுகானில் இதுவரை 4 பாகிஸ்தான் மாணவர்களை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் தற்போது 800 பாகிஸ்தான் மாணவர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மருத்துவப் பிரிவு ஆலோசகர் டாக்டர். சஃபர் மிர்ஷா, "ஆபத்து காலத்தில் நட்பு நாட்டுக்குத் துணை நிற்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். அதற்காக, மாணவர்கள் மீது எங்களுக்கு அக்கறை இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்று பதிலளித்துள்ளார்.

வுகானில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை
வுகானில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை
Chinatopix, via Associated Press

சீனாவில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 479 பேர் இதுவரை இறந்துள்ளனர். கொரோனா வைரஸால் 16,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வுகானில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை இயங்கத் தொடங்கியுள்ளது. சீன ராணுவ மருத்துவக்குழுவினர் ஆலோசனையுடன் இங்கே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பின் செல்ல