Published:Updated:

Lebanon: பெய்ரூட்டை சிதைத்த விபத்து; வீதிகளில் இறங்கிய மக்கள்!- பணிந்த அரசு; கூண்டோடு ராஜினாமா

பெய்ரூட் வெடிவிபத்து
பெய்ரூட் வெடிவிபத்து ( AP | Hussein Malla )

பெய்ரூட் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக மக்கள் போராட்டம் நீடித்த நிலையில், அரசு மொத்தமாக ராஜினாமா செய்திருப்பதாக லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் ஹமாத் ஹசன் தெரிவித்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ம் தேதி வெடித்துச் சிதறியது. இதில், 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 6,000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இதனால், 10 பில்லியன் முதல் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 3,00,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

பெய்ரூட் வெடிவிபத்து
பெய்ரூட் வெடிவிபத்து
AP |Hussein Malla

வெடிவிபத்து தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் அம்மோனியம் நைட்ரேட் முறையான பாதுகாப்பு எதுவுமின்றி வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏன்... எப்படி... எதனால் வெடித்தது லெபனான்?   #BeirutBlast

இந்தசூழலில், அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். பெய்ரூட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 8ம் தேதி தொடங்கிய போராட்டம் 2 நாள்களாக நீடித்தது. ஆளும் டியாப் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தும் நிலைக்கு போலீஸார் வந்தனர். பல இடங்களில் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் திணறினர். ஆளும் அரசில் புரையோடியுள்ள ஊழல், தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசு பதவி விலகாமல் போராட்டம் ஓயாது என்றும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பெய்ரூட் போராட்டம்
பெய்ரூட் போராட்டம்
AP |Hussein Malla

அதேபோல், வெடிவிபத்து மற்றும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், நீதித்துறை அமைச்சர் மேரி-கிளவுடி நாஜமும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவர்களைப் போலவே பல்வேறு துறை அமைச்சர்கள், ராஜினாமா செய்ய இருப்பதாகத் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

Lebanon:`போராட்டக்களமான வீதிகள்; வன்முறை!’- என்ன நடக்கிறது லெபனானில்?

இந்தநிலையில், பிரதமர் டியாப் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் ஹமாத் ஹசன், அரசு மொத்தமாக பதவி விலகிக் கொள்வதாகவும் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

பெய்ரூட் போராட்டம்
பெய்ரூட் போராட்டம்
AP

அமைச்சரவை மொத்தமாக பதவி விலகிக் கொள்வது தொடர்பான கடிதத்தை அதிபரிடம் அளிக்க பிரதமர் டியாப், அதிபர் மாளிகைக்குச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் டியாப், லெபனான் மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு