சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

இடதுசாரி பக்கம் திரும்பும் லத்தீன் அமெரிக்க நாடுகள்... மீண்டும் துளிர்க்கிறதா சிவப்பு?

கஸ்டாவோ பெட்ரோ
பிரீமியம் ஸ்டோரி
News
கஸ்டாவோ பெட்ரோ

1886-ம் ஆண்டு குடியரசு நாடான கொலம்பியாவில் கன்சர்வேடிவ், லிபரல், நேஷனல் போன்ற கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்துவந்தன.

வறுமை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, கொரோனா தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வலதுசாரி அரசுகள் ஆட்டம்காணத் தொடங்கியிருக்கின்றன. இன்னொரு பக்கம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பது கவனத்தை ஈர்க்கிறது!

கடந்த அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலில், தீவிர இடதுசாரித் தலைவரான லுலா டா சில்வா வெற்றிபெற்றிருக்கிறார். அமேசான் காடழிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் படுகொலை, பொருளாதாரச் சரிவுகள் உள்ளிட்ட காரணங்களால் முன்னாள் வலதுசாரி அதிபர் ஜெயிர் போல்சனாரோவை பிரேசில் மக்கள் தோற்கடித்திருக்கின்றனர். இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளில் இடதுசாரிகள் பக்கம் திரும்பிய லத்தீன் அமெரிக்க நாடுகளும் அதன் அதிபர்களும் இங்கே...

கஸ்டாவோ பெட்ரோ
கஸ்டாவோ பெட்ரோ

கொலம்பியா: கஸ்டாவோ பெட்ரோ (2022)

1886-ம் ஆண்டு குடியரசு நாடான கொலம்பியாவில் கன்சர்வேடிவ், லிபரல், நேஷனல் போன்ற கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்துவந்தன. இடையில் சில ஆண்டுகள் ராணுவ ஆட்சி. உலகின் போதைப்பொருள்கள் உற்பத்தி கேந்திரமாக அறியப்படும் கொலம்பியாவில் தொடர்ந்து வன்முறையும் வறுமையும் தாண்டவமாடிவருகின்றன. இதனால் ஆட்சியிலிருந்த வலதுசாரிக் கட்சிகள்மீதான மக்களின் அதிருப்தியும் நாளுக்கு நாள் அதிகரித்தது. விளைவு, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில், இடதுசாரித் தலைவரான கஸ்டாவோ பெட்ரோ வெற்றிபெற்று அதிபரானார். கொலம்பிய வரலாற்றில் ஒரு தீவிர இடதுசாரித் தலைவர் அதிபரானது இதுவே முதன்முறை.

கேப்ரியல் போரிக்
கேப்ரியல் போரிக்

சிலி: கேப்ரியல் போரிக் (2021)

அரசின் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, ஏற்றத்தாழ்வு, தொழிற்சங்கங்கள் மீதான தடை போன்ற காரணங்களால் ஆளும் வலதுசாரி ஆட்சியை எதிர்த்து சிலி மக்கள் நீண்டகாலம் போராட்டம் நடத்தினர். இந்தச் சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வலதுசாரி அதிபர் ஜோஸ் அன்டோனியோ தோற்கடிக்கப்பட்டு, மிக இளம் வயது இடதுசாரி அதிபராக கேப்ரியல் போரிக் வெற்றிபெற்றார்.

டேனியல் ஓர்டேகா
டேனியல் ஓர்டேகா

நிகரகுவா: டேனியல் ஓர்டேகா (2021)

அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துவந்த நிகரகுவாவின் இடதுசாரி அதிபர் டேனியல் ஓர்டேகா, கடந்த 2021, நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 76% வாக்குகளுடன் அபார வெற்றிபெற்று நான்காவது முறையாக அதிபரானார். அவரின் பதவியேற்பு விழாவில் இந்தியா உட்பட 350 நாடுகளிலிருந்து சுமார் 250 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சியோமாரா கேஸ்ட்ரோ
சியோமாரா கேஸ்ட்ரோ

ஹோண்டுராஸ்: சியோமாரா கேஸ்ட்ரோ (2021)

ஹோண்டுராஸ் நாட்டை 12 ஆண்டுகளுக்கும் மேலாக வலதுசாரி கட்சியான ‘நேஷனல் பார்ட்டி ஆஃப் ஹோண்டுராஸ்’ எனும் தேசிய கட்சியே ஆட்சி செய்துவந்தது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட நஸ்ரி அஸ்ஃபுராவை, பெரும்வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து இடதுசாரி வேட்பாளரான சியோமாரா கேஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

பெட்ரோ காஸ்டில்லோ
பெட்ரோ காஸ்டில்லோ

பெரு: பெட்ரோ காஸ்டில்லோ (2021)

பெரு நாட்டு அதிபர் தேர்தல் கடந்த 2021, ஜூலையில் நடைபெற்றது. இதில் தீவிர இடதுசாரி தொழிற்சங்கவாதியும், ஆசிரியருமான பெட்ரோ காஸ்டில்லோ, மார்க்சிய லெனினியக் கட்சியான ‘பெரு விடுதலை’ கட்சியின் சார்பில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளர் கெய்க்கோ புஜிமோரி மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை வைத்தார். ஆனால், அதிலும் பெட்ரோ காஸ்டில்லோவுக்கே வெற்றி கிடைத்தது.

லூயிஸ் ஆர்ஸ்
லூயிஸ் ஆர்ஸ்

பொலிவியா: லூயிஸ் ஆர்ஸ் (2020)

பொலிவியாவின் முன்னாள் இடதுசாரி அதிபரான, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஈவோ மாரல்ஸுக்கு அமெரிக்க அரசுகளின் கூட்டமைப்பும், பொலிவிய ராணுவமும் கடும் நெருக்கடி கொடுத்தன. இதனால், 2019-ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, நாட்டைவிட்டே வெளியேறினார். இதையடுத்து, 2020-ம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், வலதுசாரி வேட்பாளரான கார்லோஸ் மெஸாவைத் தோற்கடித்து, ஈவோ மாரல்ஸின் ஆதரவுபெற்ற இடதுசாரி வேட்பாளர் லூயிஸ் ஆர்ஸ் அதிபரானார்.

இடதுசாரி பக்கம் திரும்பும் லத்தீன் அமெரிக்க நாடுகள்... மீண்டும் துளிர்க்கிறதா சிவப்பு?

வெனிசுலா: நிக்கோலஸ் மதுரோ (2019)

`என்னைக் கொன்று, எங்களது நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நினைக்கிறது அமெரிக்கா’ என அமெரிக்காமீது குற்றம் சுமத்திவருபவர் வெனிசுலாவின் இடதுசாரி அதிபர் நிக்கோலஸ் மதுரோ. அதேபோல இரண்டு முறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பி, கடந்த 2019-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று மீண்டும் வெனிசுலாவின் அதிபராகியிருக்கிறார் மதுரோ.

ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ்
ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ்

அர்ஜென்டினா: ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ் (2019)

கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பங்குப் பேர் வறுமையில் வாடிக்கொண்டிருக்க 2019-ம் ஆண்டில் அர்ஜென்டினாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் வலதுசாரி வேட்பாளரான மௌரிசியோ மாக்ரி தோற்கடிக்கப்பட்டு, இடதுசாரிக் கூட்டணி வேட்பாளரான ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ் வெற்றிபெற்று அதிபரானார்.

லௌரன்டினோ கோர்ட்டிஸோ
லௌரன்டினோ கோர்ட்டிஸோ

பனாமா: லௌரன்டினோ கோர்ட்டிஸோ (2019)

2019 மே மாதம் நடைபெற்ற பனாமா அதிபர் தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டன. அதில் இடதுசாரி தலைவரான லௌரன்டினோ கோர்ட்டிஸோ அதிபரானார்.

ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோர்
ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோர்

மெக்ஸிகோ: ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோர் (2018)

மெக்ஸிகோ வரலாற்றிலேயே இல்லாதவகையில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், 54% வாக்குகள்பெற்று வெற்றிபெற்றார் இடதுசாரி தலைவரான மானுவேல் லோபஸ். இப்போதும் மக்கள் செல்வாக்குடன் பதவியில் தொடர்கிறார்!