தங்கள் உரிமைகளை போராடி வாங்கும்படிதான் தன்பாலின ஈர்ப்பாளர்களின் நிலை இன்றும் உள்ளது. உக்ரைனில் பல போராட்டங்களுக்குப் பிறகு தன்பாலின ஈர்ப்பு என்பது சட்டவிரோதமானது இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்கு சட்டபூர்வமாக அனுமதி இல்லை.

இந்தப் பிரச்னையின் தாக்கம் ரஷ்ய படையெடுப்பின் போதே LGBTQ சமூகத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. அதாவது போரின்போது தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவரை மணந்த மற்றொரு தன்பாலின ஈர்ப்பாளரிடம் அவரின் உடல் ஒப்படைக்கப்படாது என்பது உக்ரைனின் சட்டம். ஆனால் இதுவே தன்பாலின ஈர்ப்பாளர்களாக இல்லாத ஓர் ஆண் அல்லது பெண் போரில் இறக்கும்போது அவருடைய துணையிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் பாகுபாடு களையப்பட வேண்டும் என LGBTQ சமூக மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து சுமார் 28,000 கையொப்பமிட்டு, மனுவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் சமர்ப்பித்துள்ளனர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்குவதோடு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது குறித்து இன்னும் 10 நாள்களில் ஜெலன்ஸ்கி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ திருமணமான அனைத்து ஜோடிகளுக்கும் இந்த உரிமை உண்டு. அதேபோல் LGBTQ மக்களும் தங்கள் துணையைப் பார்க்கவும், பிணவறையில் இருந்து உடலை வாங்கவும், தேவைப்படும் பட்சத்தில் இழப்பீடு பெறவும் உரிமை உண்டு” என கீவ் சுயமரியாதைப் பேரணியின் (Kyiv pride) செய்தி தொடர்பு மேலாளர் ஒக்சனா சோலோன்ஸ்கா கூறி உள்ளார்.