2017-ம் ஆண்டு அயர்லாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராகப் பொறுப்பெற்றார் (Leo Varadkar ) 'லியோ வரத்கர்'. அயர்லாந்தில் முதல் இளம் வயது பிரதமர் இவரே. தான் ஒரு 'தன்பால் ஈர்ப்பாளர்' என்பதை வெளிப்படையாக அறிவித்த முதல் பிரதமரும் இவர்தான். வரத்கர் தலைவராக இருக்கும் 'ஃபைன் கேயல் கட்சி' (Fine Gael party), ஃபையன்னா ஃபெயில் கட்சி (Fianna Fail party) மற்றும் க்ரீன் பார்ட்டி (Green Party ) ஆகிய மூன்று கட்சிகள், 2020-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்தன .ஏற்கெனவே, போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி, 'ஃபையன்னா பெயில் கட்சி' தலைவர் 'மைக்கேல் மார்ட்டின்' வரும் ஆண்டு டிசம்பர் வரை, பிரதமராகப் பொறுப்பு வகிப்பார். பின்னர் இரண்டரை ஆண்டுக்காலம் ஆட்சி முடியும் வரை ஃபைன் கேயல் கட்சித் தலைவர் 'வரத்கர்' பிரதமராகப் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, லியோ வரத்கருக்கு தன் வாழ்த்தைப் போனில் தெரிவித்திருக்கிறார். மேலும் `இனி இந்திய-அயர்லாந்து நாட்டுக்கு இடையே நட்புறவு மேலும் வலுப்படும்' என தன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இவரின் தந்தை மகாராஷ்டிரா மாநிலத்தையும், தாய் அயர்லாந்தையும் சேர்ந்தவர்கள். 1979-ம் ஆண்டு டப்லினில் பிறந்தார். மருத்துவம் பயின்ற இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2007-ம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அந்த ஆட்சிக்காலத்தில் வர்த்தகப் பிரிவுக்கான செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு வகித்தார். 2011-ம் ஆண்டு ஃபைன் கேயல் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆட்சிப் பணியில் இருந்தார். பிறகு, சுற்றுலா, விளையாட்டு, நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஃபைன் கேயல் கட்சித் தலைவரான 'என்டா கென்னி' (Enda Kenny ) கட்சியிலிருந்து விலக, 60% உறுப்பினர்கள் ஆதரவுடன் லியோ வரத்கர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று அயர்லாந்தின் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது, தன் முன்னோர்கள் வாழ்ந்த இடமான மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வருகைப் புரிந்திருந்தார்.
2020-ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஃபைன் கேயல், பையன்னா பெயில், க்ரீன் பார்ட்டி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு லியோ வரத்கர் அயர்லாந்தின் பிரதமராகப் பொறுப்பு வகிக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது.
தன் கடந்த கால ஆட்சியில் லியோ வரத்கர் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். குறிப்பாக, அயர்லாந்தில் சட்டபூர்வமாக தன் பாலின ஈர்ப்பாளருக்குச் சட்டம் இயற்றாமல் இருந்த நிலையில், தன்னை ஒரு 'தன்பாலின ஈர்ப்பாளர்' என்பதை வெளிப்படையாக அறிவித்தது, கருக்கலைப்பு செய்வதைச் சட்டமாக்கியது, மதச்சார்பற்ற அயர்லாந்தை உருவாக்கியது என இவர் குறிப்பிடத்தக்க திட்டங்களை அறிமுகம் செய்தார்.

லியோ ஆட்சியில் அமரும்போது, அவரின் ஃபைன் கேயல் கட்சி அயர்லாந்தை 6 ஆண்டுகளாக ஆட்சி செய்திருந்தது. ஆனால், அப்போது நடந்த ஆட்சியில் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் நெருக்கடி நிலையில் இருந்தன. அதைக் கையாள்வதில் தடுமாற்றம் அடைந்தார். இதனால் 2020-ம் ஆண்டு, வரலாற்றில் முதன்முறையாக ஃபைன் கேயல் கட்சித் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தன் கட்சியைச் சரிவிலிருந்து மீட்க வேறு வழியில்லாமல் கூட்டணியில் இணைந்தார். கட்சியின் நெருக்கடியால் துணைப் பிரதமர் பதவியே தரப்பட்டது. தற்போது கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் அவர் மீட்டெடுப்பார் என்பதே அவருடைய ஆதாரவாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகியப் பிறகு, அயர்லாந்து மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, 2030-ம் ஆண்டுக்குள் 3-7 சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திக் குறையும் நிலை உருவாகும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். எனவே, இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு லியோவுக்கு இருக்கிறது. ஆனால், பிரிட்டன் பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இது சுமுகமாக தீர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.