Published:Updated:

அதானி கோ ஹோம், சுற்றுச்சூழல் பிரச்னை, ஈழத்தமிழர் விசா... ஆஸ்திரேலிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி!

ஆஸ்திரேலியா

எட்டாண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது தொழிலாளர் கட்சி. அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கான காரணம் என்ன?

அதானி கோ ஹோம், சுற்றுச்சூழல் பிரச்னை, ஈழத்தமிழர் விசா... ஆஸ்திரேலிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி!

எட்டாண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது தொழிலாளர் கட்சி. அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கான காரணம் என்ன?

Published:Updated:
ஆஸ்திரேலியா

எட்டாண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது தொழிலாளர் கட்சி. எளிய பின்புலத்திருந்து, மிகச் சிறிய வயதில் அரசியலுக்கு வந்து, அமைச்சர், அவைத்தலைவர், துணைப் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் எனப் படிப்படியாக வளர்ந்த அந்தோணி அல்பனீஸ், தற்போது ஆஸ்திரேலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது எப்படிச் சாத்தியமானது... யார் இந்த அந்தோணி அல்பனீஸ்... எதனால் லிபரல் கட்சி ஆட்சியை தவறவிட்டது என்பதன் பின்னணியைப் பார்ப்போம்.

சிட்னி, ஆஸ்திரேலியா
சிட்னி, ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியப் பிரதமர் தேர்தல்:

ஆஸ்திரேலியாவில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக லிபரல் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்தது. அந்த நிலையில், லிபரல் கட்சியின் பிரதமர் ஸ்காட் மோரிசனின் பதவிக் காலம் இந்த ஆண்டோடு முடிவடைந்த நிலையில், கடந்த மே 21-ம் தேதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அந்தோணி அல்பனீஸுக்கும், பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவந்த சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது, தொழிலாளர் கட்சியே பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. அந்த நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151 இடங்களில் 76 இடங்களில் வெற்றிபெற்றால்தான் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து அபார வெற்றிபெற்றது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய பிரதமரான அந்தோணி அல்பனீஸ்:

லிபரல் கட்சியின் ஸ்காட் மோரிசன் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, ``அரசியலில் எப்போதும் குழப்பநிலை ஏற்படக் கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே, தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். நாடு இனி அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும்" என வெளிப்படையாகத் தோல்வியை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, 23-05-2022 அன்று காலை கான்பெர்ரா நகரில் உள்ள அரசு இல்லத்தில், ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக அந்தோணி அல்பனீஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹார்லி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மேலும் அவருடன் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வில், அந்தோணி அல்பனீஸின் மகன், மனைவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அந்தோனி அல்பனீஸ்
அந்தோனி அல்பனீஸ்

அந்தோணி அல்பனீஸ் வாழ்க்கைப் பின்னணி:

அந்தோணி அல்பனீஸ் 1963-ம் ஆண்டு சிட்னியில் பிறந்தார். பள்ளிப்படிப்பை சிட்னியில் முடித்த இவர், மிக இளம் வயதிலேயே அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு, தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். தொடக்க காலத்தில் தொழிலாளர் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிப் பிரிவில் இணைந்து பணியாற்றியவர், படிப்படியாக உயர்ந்து கட்சியின் உதவிச் செயலாளரானார். அதன் பிறகு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிரேண்ட்லர் தொகுதியில் போட்டியிட்ட அந்தோணி அல்பனீஸ், வெற்றிபெற்று, முதன்முறையாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரானார். அடுத்தடுத்து கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த அல்பனீஸ், 2013-ம் ஆண்டு கெவின் ரூட் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகவும் இருந்தார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு லேபர் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். சுமார், 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவராகவும் இருந்துவந்த அந்தோணி அல்பனீஸ், தற்போது ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லிபரல் கட்சியின் தோல்வி மற்றும் லேபர் கட்சியின் வெற்றிக்கான காரணம்:

கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த லிபரல் கட்சி முதலாளித்துவ, வலதுசாரி ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டுவந்தது. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், மக்கள் எதிர்க்கும் திட்டங்களைக் கொண்டுவந்து அதை ஆஸ்திரேலிய மண்ணில் அமல்படுத்த முயன்றது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் அதானிக்குச் சொந்தமான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தை (Carmichael coal mine) எதிர்த்து அந்நாட்டின் பூர்வகுடி மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். ஆனால், ஆளும் தரப்பு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், போராடும் பழங்குடிகளுக்கு எதிராகவும் செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 ஸ்காட் மோரிசன்
ஸ்காட் மோரிசன்

அதேபோல, வெளிநாட்டவர்கள், ஆப்பிரிக்கர்கள் என அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் மீதான வெறுப்பு அரசியலும், பாரபட்சமும் தலைவிரித்தாடின. குறிப்பாக, இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த நடேசலிங்கம் முருகப்பன் குடும்பத்தினரை அகதிகளாக அங்கீகரிக்க மறுத்து, ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான நிரந்தர விசா வழங்கவும் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் அரசாங்கம் மறுத்தது. அதேசமயம், இந்தக் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய மக்கள் `ஹோம் டு பிலோ' என்ற பிரசாரத்தையும் மேற்கொண்டனர்.

நடேசலிங்கம் முருகப்பன் குடும்பம்
நடேசலிங்கம் முருகப்பன் குடும்பம்
ட்விட்டர்

அதேபோல தொழிலாளர் கட்சியும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடேசலிங்கம் முருகப்பன் குடும்பத்தினருக்கு விசா வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த பின் தற்போது நிறைவேற்றவும் உறுதியளித்திருக்கிறது.

மேலும், மிக முக்கியமாக ஆஸ்திரேலிய மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு தவறிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆளும் லிபரல் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை அதிகரிக்க, தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்து, பெருவாரியாக வெற்றிபெறச் செய்திருக்கின்றனர்.

அதானிக்கு எதிரான போராட்டம்
அதானிக்கு எதிரான போராட்டம்

இந்தச் சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ``ஆஸ்திரேலியாவைப் புதுப்பிக்க எரிபொருள்துறையில் வல்லரசாக்கவும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும்" உறுதியளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

மேலும், பதவியேற்ற கையோடு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism