Published:Updated:

`இந்தியாவும், சீனாவும் வளரும் நாடு என்றால், நாங்கள்...?!’- டாவோஸ் கூட்டத்தில் கொதித்த ட்ரம்ப்

உலகத் தலைவர்கள்
உலகத் தலைவர்கள்

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளை வளரும் நாடுகளாகக் கருதக் கூடாது, அவர்கள் வளரும் நாடு என்றால் நாங்களும் வளரும் நாடுதான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

`உலகப் பொருளாதார மன்றம்’ ஜெனீவா நகரை மையமாகக் கொண்ட ஒரு பொதுநல சேவை அமைப்பாகும். இதன் வருடாந்திரக் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெறும். உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சுற்றுப்புறச்சூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் பல உலகப் பிரச்னைகளைப் பற்றிக் கலந்துரையாடுவார்கள். உலகப் பொருளாதார மன்றத்தின் ஐம்பதாவது ஆண்டு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

உலகப் பொருளாதார மன்றம்
உலகப் பொருளாதார மன்றம்
AP

இதில் அமெரிக்க அதிபர் கலந்துகொண்டுள்ளார். அவர் ஒவ்வொரு நாளும் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிப்பது, சுற்றுச்சூழல், உலக அளவில் பிரபலமானவர்கள், நாடுகளுக்கு இடையேயான பிரச்னை, அமெரிக்காவின் நிலைப்பாடு போன்ற பலவற்றைப் பற்றிப் பேசி வருகிறார். நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், `இந்தியா, சீனா போலவே அமெரிக்காவும் வளரும் நாடுதான்' எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப், உலக வர்த்தக அமைப்பு (WTO) தலைவர் ராபர்டோ அஸெவெடோவுடன் (Roberto Azevedo) கலந்துரையாடினார். அப்போது ``உலக வர்த்தக அமைப்பு எங்கள் நாட்டை நியாயமாக நடத்தாததால் சில வருடங்களாகவே நாங்கள் அவர்களுடன் மனக்கசப்பில் இருந்து வருகிறோம். சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பில் வளரும் நாடுகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா மட்டும் வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

எங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவும் வளரும் நாடுதான். நாங்களும் வளர்ந்துகொண்டுதான் வருகிறோம். வளரும் நாடு என்ற அடையாளத்தால் உலக வர்த்தகத்தில் இந்தியா, சீனாவுக்கு நிறைய சலுகைகள், நன்மைகள் கிடைக்கின்றன. அது எங்களுக்குக் கிடைப்பதில்லை. இந்தியாவும், சீனாவும் வளரும் நாடாக கருதப்படக் கூடாது ஆனால், அவர்கள் அப்படிதான் பார்க்கப்படுகிறார்கள். அந்த இரு நாடுகளும் வளரும், நாடுகளாக உள்ளபோது அமெரிக்காவையும் அப்படியே கருத வேண்டும்” எனக் கூறினார்.

`என் தந்தை மீண்டும் அதிபரானால் வெள்ளை மாளிகையில் இருக்க மாட்டேன்!’ - இவான்கா ட்ரம்ப்

உடனடியாக உலக வர்த்தக அமைப்புத் தலைவர் ராபர்டோ, தனது தரப்பு கருத்துகளைக் கூறினார். பின்னர் பேசிய ட்ரம்ப், ``பல ஆண்டுகளாக உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவுக்கு நியாயமற்றதாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு இல்லையென்றால் சீனா, சீனாவாக இருக்காது. தற்போது இருக்கும் நிலையை அவர்களாக அடைந்திருக்க முடியாது. சீனா பயணிக்க வர்த்தக அமைப்பைத்தான் வாகனமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

ராபர்டோவுக்கும் எனக்கும் இடையே சிறந்த நட்பு உள்ளது. சர்வதேச வர்த்தகம் தொடர்பாக நாங்கள் இருவரும் விரைவில் கலந்தாலோசிக்க உள்ளோம். நாங்கள் இணைந்து அதில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவருவோம். ராபர்டோ வரும் வாரங்களில் தனது பிரதிநிதிகளுடன் தாராளமாக வாஷிங்டனுக்கு வரலாம். நாங்கள் மாற்றத்துக்கான வேலைகளைத் தொடங்குவோம்” என்று பேசியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி ட்ரம்ப் பேசியிருப்பது பெரும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

பின் செல்ல