Published:Updated:

``குழந்தைகள் ஆசைப்படுற சிக்கன் எல்லாம் கண்ணுலகூட காட்டமுடியாது!'' - இலங்கையிலிருந்து லைவ் ரிப்போர்ட்

இலங்கை போராட்டம்

இலங்கையின் கால் ஃபேஸ் போராட்டக் களத்திலிருந்து, நேரடி களநிலவரத் தகவல்கள் இங்கே..!

``குழந்தைகள் ஆசைப்படுற சிக்கன் எல்லாம் கண்ணுலகூட காட்டமுடியாது!'' - இலங்கையிலிருந்து லைவ் ரிப்போர்ட்

இலங்கையின் கால் ஃபேஸ் போராட்டக் களத்திலிருந்து, நேரடி களநிலவரத் தகவல்கள் இங்கே..!

Published:Updated:
இலங்கை போராட்டம்
அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார நெருக்கடியின் தீவிரம் குறித்துத் தெரிந்துகொள்ள, நேரடியாக இலங்கைக்கு விசிட் அடித்தோம். அங்கு நமக்குக் கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள், பேட்டிகளை இங்கே பார்க்கலாம்.

இலங்கைத் தலைநகர் கொழும்புவிலுள்ள கால் ஃபேஸ் என்ற இடத்தில், லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ராஜபக்சே அரசுக்கு எதிராகப் போராடிவருகின்றனர். நாம் தங்கியிருந்த அறையிலிருந்து 6 கி.மீ தூரத்திலிருந்த அந்த இடத்துக்குச் செல்ல ஒரு டாக்ஸி எடுத்தோம். டாக்ஸி ஓட்டுநர் ராஜா நம்மிடம், ``சார் பெட்ரோல் போட்டுட்டுதான் போகணும். குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்'' என்றார். வேறு டாக்ஸி கிடைக்காததால், அந்த டாக்ஸியிலேயே ஏறினோம். பெட்ரோல் பங்க்குக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ``யாராவது குறுக்கப் புகுந்து பெட்ரோல் போட வந்துட்டா பெரிய சண்டை ஆயிடும் சார். அதான் போலீஸ் பாதுகாப்பு போட்டுருக்காங்க'' என்றார் ஓட்டுநர். ஒரு மணி நேரம் அந்த நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போட்ட பின்னர், கால் ஃபேஸ் பகுதிக்குச் சென்றோம்.

இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைநகர் கொழும்புவிலுள்ள பல உணவகங்களில் உணவு கிடைக்காத போதிலும், போராட்டக் களமான கால் ஃபேஸில் 24 மணி நேரமும் உணவும் தண்ணீரும், தன்னார்வலர்களால் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. பழைய நாடாளுமன்றம் இருக்கும் இடம்தான் கால் ஃபேஸ். அங்கு, தினந்தோறும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணியாக மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள், சிங்களர்கள், இஸ்லாமியர்கள் என லட்சக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடி `கோட்டா கோ ஹோம்' என்று கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான முழக்கத்தோடு போராட்டம் நடத்திவருகின்றனர். இலங்கையின் ரம்புகனை என்ற பகுதியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், லக்‌ஷான் என்ற இளைஞரைச் சுட்டுக் கொன்றது காவல்துறை. அவருக்குக் கால் ஃபேஸ் போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் மொபைல் டார்ச் ஒளி மூலம் அஞ்சலி செலுத்தினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போராட்டக் களத்திலிருந்த ஆனந்த் என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம், ``மூணு மாசம் முன்னாடியே இந்தப் பொருளாதார பிரச்னை தொடங்கிடுச்சு. ஆனா, ஓரளவு அதை சமாளிச்சுட்டிருந்தோம். இப்ப சுத்தமா சமாளிக்க முடியாததால போராட வந்துட்டோம். ராஜபக்சே பதவி விலகி, நாட்டை விட்டே போகணும். அவங்க குடும்பம் இலங்கையிலிருந்து கொள்ளை அடிச்சு, வெளிநாட்டுல சேர்த்து வெச்சுருக்க பணத்தை, மீண்டும் இலங்கைக்கே கொண்டு வரணும். இதான் எங்க கோரிக்கை'' என்றார்.

இலங்கை  - மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்பவர்கள்
இலங்கை - மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்பவர்கள்

மூன்று குழந்தைகள், மனைவியோடு போராட்டக் களத்துக்கு வந்திருந்த ஒருவரிடம் பேசினோம். ``நல்லா இருந்த இலங்கையை ராஜபக்சே குடும்பம் நாசமாக்கிடுச்சு. பள்ளிக்கூடம் மூடிட்டாங்க. பிள்ளைகள் படிப்பே மறந்துட்டாங்க. அவங்க எதிர்காலம் என்ன ஆகுறது'' என்றார். அவர் மனைவியோ, ``காஸ் இல்லாததால, மண்ணெண்ணெயில்தான் சமைக்குறோம். காலைல 5:30 மணிக்கு போய் வரிசைல நின்னா, சாயங்காலம்தான் மண்ணெண்ணெய் கிடைக்கும். இரண்டு வேளைதான் சாப்பாடு. அதுவும் பருப்பும் சோறும்தான். குழந்தைகள் ஆசையா கேட்குற சிக்கன் எல்லாம் கண்ணுலகூட காட்ட முடியாது. சிக்கன் கிலோ ரூ.1,000-த்துக்கு (இலங்கை ரூபாயில்) போயிடுச்சு'' என்றார் பாவமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மிடம் பேசிய கவிதா என்ற தமிழ்ப் பெண், ``எங்க ஓட்டு மலையகத்துல இருக்கிறதால, கொழும்புல எங்க பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியில சேரக்கூட அனுமதியில்லை. என் பிள்ளைகள தனியார் பள்ளியில் சேர்த்துருக்கேன். எங்களுக்குன்னு இந்த அரசாங்கம் எதுவுமே செஞ்சதில்ல. சிங்களர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் ஒண்ணா இருக்கக்கூடாதுனுதான் இந்த அரசாங்கம் நினைச்சது. ஆனா, இந்தப் போராட்டம் எங்கள ஒண்ணு சேர்த்துடுச்சு. நாங்க ஒண்ணா நின்னு ராஜபக்சேவை நாட்டை விட்டு அனுப்புவோம்'' என்று கூறினார்.

போராட்டக் களத்திலிருந்து மேலும் சில இலங்கை மக்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை கீழுள்ள காணொலியில் பார்க்கலாம்!

இன்னொரு இளைஞர் நம்மிடம், ``அஞ்சு மாசத்துக்கு முன்னாடி 30,000 ரூபாயில வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த குடும்பத்துக்கு, இப்போ 75,000 ரூபாய் தேவைப்படுது. எல்லாத்துக்கும் இந்த அரசுதான் காரணம். ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பாமல் இங்க இருந்து போகமாட்டோம்'' என்றார் ஆவேசமாக.

இலங்கை
இலங்கை
இலங்கையில், கலிமுகத் திடல் என்று அழைக்கப்படும் கால் ஃபேஸில் போராடும் ஒட்டுமொத்த மக்களும், ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர். ஆனால், `ராஜபக்சே பதவி விலகிய பின்னர், யார் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும்?' என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. `முதலில் ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்புவோம்; அடுத்து என்னவென்பதை பிறகு பார்ப்போம்' என்கிறார்கள் இலங்கை மக்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism