Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதன் கண்ட ஊழிக்கனவு | பகுதி - 21

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

கானகனைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கிறான் என்பது புரிந்தது. ஆனால், தனக்கு முன்னால் விழுந்துள்ள அந்தப் பொறியை, தன்னிடமுள்ள கடைசி ஆயுதத்தினால் அச்சமின்றித் தாண்டுவதற்கு நீதன் முடிவெடுத்துவிட்டான் என்பது தெரிந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதன் கண்ட ஊழிக்கனவு | பகுதி - 21

கானகனைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கிறான் என்பது புரிந்தது. ஆனால், தனக்கு முன்னால் விழுந்துள்ள அந்தப் பொறியை, தன்னிடமுள்ள கடைசி ஆயுதத்தினால் அச்சமின்றித் தாண்டுவதற்கு நீதன் முடிவெடுத்துவிட்டான் என்பது தெரிந்தது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

பொங்கல் நிகழ்வு நிறைவடையும்வரை மைதானத்தில் நடுநாயகமாக நின்றுகொண்டிருந்த நீதன், எல்லோரும் கலைந்த பிறகு, தனது அறைக்கு வந்தான். கட்டிலின் அருகில் ஒட்டிவைத்திருந்த மனைவி அனீஸாவினதும் மகன் லியோவினதும் படத்தின் முன்பாகத் தன்னை அறியாமலேயே முழந்தாழிட்டு அமர்ந்தான். இழப்பினால் உண்டாகும் காயத்தைவிட, பிரிவினால் உருவாகும் வலிதான் மிகக்கொடியது என்பதை தரையில் விழுந்த அவனது கண்ணீர் துளிகள் சத்தியம் செய்தன.

கொடிய பாவங்களைச் செய்துவிட்டு இங்கு வந்திருப்பவன் தான் மட்டுமே என்பதாய் நீதன் தன்னை உணர்ந்தான்.

இன்னும் இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினரின் அடுத்த கட்டந் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்பது ஒருபுறம் அச்சத்தையும் இன்னொரு புறம் ஆறுதலையும் தந்தது. ஏனெனில், இந்த முகாமிலிருந்து விடுதலையாகித் தனது குடும்பத்தைச் சந்திப்பதற்கு ஒரு விடிவு கிடைக்கவேண்டுமென்றால், அது புலனாய்வுத்துறையினரின் கடைக்கண் பார்வையினால் மட்டுமே சாத்தியம் என்பதை நீதன் தீர்க்கமாக உணர்ந்துகொண்டுவிட்டான்.

நீதனின் மனதில் இப்போது ஓடிக்கொண்டிருப்பது எல்லாம் ஒன்றுதான்.

ஆஸ்திரேலியாவின் இன்னொரு மாநிலத்திலுள்ள ஏதோவொரு முகாமிலிருக்கின்ற அல்லது இந்நேரம் விடுதலையாகிவிட்ட,

கானகன் ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையிடம் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறான் என்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போன தடவை, புலனாய்வுப்பிரிவினர் கேட்ட பல கேள்விகளை வைத்து, இரவிரவாக மீண்டும் மீண்டும் யோசித்துப் பிடித்ததில், கானகன்தான் தன்னைப் போட்டுக்கொடுத்திருக்கிறான் என்பது நீதனுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

கொழும்பிலிருந்த காலப்பகுதியில், வெள்ளவத்தை – தெஹிவளை பாலத்துக்கு அருகில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரின் பாதுகாப்பு அரணுக்கு கிளைமோர் பொதியொன்றைக் கொண்டுபோய் வைப்பதற்கு போட்ட திட்டம் நீதன் பக்கத்தில் பயங்கரமாகச் சறுக்கியது பழைய கதை. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், அந்தச் சம்பவத்தில் நீதன் இராணுவத்திடம் வசமாகப் பிடிபட்டிருக்கவேண்டியவன், கடைசி நேரத்தில் சுதாரித்துக்கொண்டதில், பாலத்துக்குப் பக்கத்திலிருந்த வத்தைக்குள் பாய்ந்து தப்பிவிட்டான். இந்தச் சம்பவத்தில்தான், நீதனின் புகைப்படம் இராணுவத்தினரிடம் வசமாக மாட்டியிருந்தது. கிளைமோரை செயலிழக்கச் செய்த இராணுவத்தினர், நீதனை வலைபோட்டுத் தேடினார்கள். ஆனால், கிளைமோர் சறுக்கிய விடயம், கானகனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதளவுக்கு, கிளிநொச்சிவரைக்கும், அந்தச் சம்பவத்தை மூடிமறைத்திருந்தான் நீதன்.

மெல்பேர்ன் முகாமில் முதன்முதலாக, சந்தித்துப் பேசிய ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறையினர் தெஹிவளைச் சம்பவத்திலிருந்துதான் நீதனை அவிழ்க்கத் தொடங்கினார்கள். முதலில், அதிர்ந்துபோன நீதன், அது எப்படி இவர்களுக்குத் தெரியவந்தது என்பதைக்கூட உணரமுடியாதளவுக்குக் குழம்பிப்போயிருந்தான். இரண்டொரு நாட்களிலேயே கானகனின் கைவரிசையைக் கணக்குப்போட்டு புரிந்துகொண்டான்.

இதிலிருந்து எவ்வாறு, வெட்டி ஓடுவது என்பது நீதனுக்குள் பல இரவுகளில் தீராத யோசனையாகப் பீடித்தது.

ஒரு வீதமேனும் சரணடைவது என்று முடிவெடுத்துக்கொண்ட குழப்பத்தோடு இருப்பவன்,

ஒருபோதும் புலனாய்வுப்போராளியாக வாழமுடியாது. ஏன், சாகக்கூட முடியாது.

ஓரு புலனாய்வுப் போராளி என்று நீதனுக்குள்ளிருந்து பழைய ஓர்மம், படகேறியபோதே வடிந்து வற்றிவிட்டது. இனிப்போய் சேரப்போகும் தேசத்தில், எப்படியானதொரு சூழ்நிலைக் கைதியாகப்போகிறேனோ. ஏன்பது ஓரளவுக்கு முன்கூட்டிய அச்சமாகவே அவனுக்குள் கூடுகட்டியிருந்தது.

ஆனால், பெருந்தொகையில் அகதிகள் வந்து இறங்கிய ஆஸ்திரேலிய தேசம், நீதன் நினைத்ததைவிட மிகவும் சமயோசிதமாகத் தங்கள் பாதுகாப்புத்தரப்பினரை கூர் தீட்டிவைத்திருந்து. நீதனுக்காகவே காத்திருந்ததுபோல, பல தகவல்களைச் சேகரித்துக் காத்திருந்தார்கள். கடலிலே அகதிகள் வந்தாலும் கரையிலே வலையை விரித்துத் தயாராயிருந்ததால், எதிர்பார்த்ததுபோல ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் தரப்பினரிடம் பல மீன்கள் அகப்பட்டுக்கொண்டன.

நீதனின் தனிமையான நினைவுகளும் எவ்வாறு புலனாய்வுத்துறையினரை எதிர்கொள்வது என்ற திட்டங்களும் அவனது அறையைவிட, ஜிம்மில்தான் அதிகம் இரைமீட்டப்பட்டன.

இன்றோ – நாளையோ – சமயோசிதமான பதில்களைச் சொல்லி, புலனாய்வுத்துறையினரை ஏமாற்றி, முகாமைவிட்டு வெளியில் போய்விட்டாலும், இந்த நாட்டில் நிம்மதியாக வசிப்பதென்பது உத்தரவாதமானது அல்ல என்பது நீதனுக்குள் மீண்டும் மீண்டும் அலாரமாய் ஒலித்தது. நாளையே பெரும் பொய் ஒன்றைச் சொல்லி, வெளியேறி அனீஸாவும் பிள்ளைகளும் இங்கு வந்து குடும்பமாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, மீண்டும் வேறு ஆதாரங்களோடு வந்து, தன்னைத் தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள் என்றால் என்ன செய்வது?

மூன்றாம் உலக நாடுகள் எப்போதும் பணத்துக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் இலகுவாக செல்லுபடியாபவை. ஆனால், இங்கு அப்படி எந்தச் செத்தமிளகாயும் இலகுவில் பொரியாது.

கானகன் தன்னைப் பற்றி என்னவெல்லாம் சொல்லிவைத்திருக்கிறான் என்பதைச் சொல்வதற்கு முன்னர், தானாகவே எல்லாவற்றையும் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்புவித்துவிடலாமா என்று யோசித்தான். ஒருவேளை, அப்படிக் காலில் விழுந்துவிட்டால், உனக்குத் தெரிந்த ஏனையவர்களைப் பற்றிய தகவல்களையும் தா என்று, விட்ட இடத்திலிருந்து விசாரணைகளைத் தொடங்கிவிட்டார்கள் என்றால் என்ன செய்வது?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதனுக்கு ஒன்றுமாத்திரம் நிம்மதியாக இருந்தது. புலனாய்வுப்பிரிவினர் நடத்தும் எந்தச் சந்திப்பும் எந்த விசாரணையும் வன்முறைகள் நிறைந்தது இல்லை.

பிளாஸ்திக் பைப்பிற்குள் மண்ணை நிறைத்துவைத்து, தலைகீழாய் தொங்கவிட்டு அடித்து அடித்து கேள்வி கேட்கப்போவதில்லை. நகங்களைப் பிடுங்கப்போவதில்லை.

நீதிமன்றத்திற்கே கொண்டுபோகாமல், விசாரணைகள் நடத்தி சாவடிக்கப்போவதில்லை.

நீதனின் சட்டத்தரணி கரோலின் முதல்நாள் பேசும்போதே சொல்லியிருந்தார். “சகல சந்திப்புக்களிலும் நானும் கூடவே இருக்கலாம். இதுவொன்றும் குற்றவிசாரணை அல்ல. அகதிகளின் நன்நடத்தை குறித்த – நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான – சந்திப்பு. அவ்வளவே. நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்தவர் என்றும் அங்கு வன்முறைகளில் ஈடுபட்டவர் என்றும் ஒப்புக்கொண்டாலும்கூட, உங்களுக்கு இங்கு தண்டனையெல்லாம் வழங்கப்போவதில்லை. சமூகத்தோடு உங்களைப்போன்றவர்களை இணைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் பற்றித்தான் யோசிப்பார்கள்” – என்று சொன்னார்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதன் கண்ட ஊழிக்கனவு | பகுதி - 21

தனியாக இருக்கும் நேரமெல்லாம், நீதனின் புலனாய்வு நரம்புகள்; இமைத்தபடியே இருக்கும். தன் பொறுப்புக்களை நினைத்துப் பொருமியபடியிருக்கும்.

ஒரு சனிக்கிழமையன்று எனக்கு இரவு வேலை. அல்பா கம்பவுண்டிற்கு வெளியே வழக்கம்போல என்னுடனிருந்து பேசவேண்டும் என்றான் நீதன்.

எனக்கு இரவு வேலையுள்ள நாட்களில் நடு நிசிவரைக்கும் கணனியில் பதிவேற்றவேண்டிய அறிக்கைகளிருக்கும். அன்றைய நாளுக்குரிய சம்பவ அறிக்கைகளைச் சேகரித்து, குடிவரவு அமைச்சுக்கு அனுப்பவேண்டியிருக்கும். மூன்று நேரமும் சாப்பிடாதவர்கள் யாராவது உள்ளார்களா என்று முழுமையாகச் சோதனை செய்யவேண்டும். முகாமிலுள்ள அகதிகள் அனைவரும் மூன்று வேளைகள் எண்ணப்பட்டு, யாரும் - அகுனா போல - வேலி பாய்ந்து ஓடிவிடவில்லை என்று உறுதிப்படுத்திய அறிக்கையை குடிவரவு அமைச்சுக்கு அனுப்பவேண்டும். எல்லாவற்றையும் துரிதமாக முடித்துக்கொண்டால், நீதன் அல்லது வேறு யாராவது தமிழ் அகதிகளுடன் அல்பா கம்பவுண்டிற்குள் அல்லது வெளியிலிருந்து பேசுவது வழக்கம்.

பின்னிரவு நிலா, பக்கத்து வளவிலிருந்து எழுந்து வளர்ந்து முகாமுக்குள்ளேயும் படர்ந்திருந்த யூக்கலிப்டஸ் மரத்தில் விழுந்து, வரி வரியாக நடு மைதானத்தில் கோலம் போட்டிருந்தது. மெல்பேர்ன் கோடை, இரவுக்கு மாத்திரம் வெக்கைக்கு விடுமுறை வழங்கியிருந்தது.

சூடான தேனீரோடு மர இருக்கைக்கு வந்த நீதன், என்னிடம் பிளாஸ்திக் குவளையை நீட்டியபடி தானும் அமர்ந்தான்.

“அண்ணே, அடுத்த சந்திப்பில எல்லாத்தையும் சொல்லீடலாம் எண்டு பாக்கிறன்”

அவன் முழுவதுமாய் முடிவெடுத்துவிட்டவனாக, பதற்றமில்லாமல் தேனீரை உறிஞ்சினான். பதிலுக்கு நானும் பதற்றமில்லாமல், அவனது முடிவைக் கேட்கவேண்டிய இடத்திலிருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்கு, நானும் தேனீரைப் பருகினேன். பிளாஸ்திக் குவளையின் விளிம்பு என்னவோ தெரியவில்லை, சாதுவாகக் குளிர்ந்தது.

“எத்தனை நாளுக்கு அண்ண, உள்ளயிருந்து பொய் சொல்லி சொல்லி, குடும்பத்தைப் பார்க்காமல் இருக்கிறது. உண்மையச் சொல்லி, எப்படியாவது, அடுத்த கட்டத்துக்குப் போகப்போறன். எனக்கு குடும்பத்தை பார்க்கவேணும் அண்ண. இரவில பிள்ளையளிண்ட குரல் கேட்குது…”

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதன் கண்ட ஊழிக்கனவு | பகுதி - 21

முகம் தெரியாத அரையிருளிலும் அவன் குரல் உடைந்தது கேட்டது.

இது அவனது வாழ்க்கை. என்னதான் ஒரே மொழி பேசுபவன் என்றாலும், எதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுக்கும் உரிமையில் நானில்லை. அது அவனுக்கும் தெரியும். ஆனால், தான் மனம் விட்டுப்பேசுவதற்கு நம்பிக்கை உடையவனாக அந்த இரவில், அவனருகில் நான் இருந்துகொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு திருப்தியிருந்தது. அதனைப் பயன்படுத்துவதற்கு அவனுக்கான தேவையிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கானகனைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கிறான் என்பது புரிந்தது. ஆனால், தனக்கு முன்னால் விழுந்துள்ள அந்தப் பொறியை, தன்னிடமுள்ள கடைசி ஆயுதத்தினால் அச்சமின்றித் தாண்டுவதற்கு நீதன் முடிவெடுத்துவிட்டான் என்பது தெரிந்தது. கானகனின் உண்மையான பெயர் தெரியாத காரணத்தினால், என்னாலும் கணனியுள்ள பொதுக்கோப்பில் தேடுவதற்கோ, அவன் ஆஸ்திரேலியாவில் வேறு எங்காவது ஒரு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறானா என்பதைக் கண்டறிவதற்கோ முடியவில்லை.

நீதன் சொன்னது எல்லாவற்றுக்கும் “ம்;” சொன்னேன்.

அனீஸாவுடனும் பிள்ளைகளுடனும் இனிமேலும் தன்னால் பேசாமல் இருக்கமுடியாது என்றான். தொலைபேசியில் அழைப்பெடுப்பதற்கு குடிவரவு அமைச்சிடம் அனுமதி பெற்றுத்தரும்படி கேட்டான்.

நீண்டகாலத் தடுப்பில் உள்ளவர்களுக்கு உடனடியாக சர்வதேசத் தொலைபேசித் தொடர்புகள் ஏற்படுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் சர்வதேச மன்னிப்புச் சபையும் முகாமுக்கு வந்து அகதிகளின் கடிதங்களை வாங்கி, அவர்களது உறவினர்களிடம் சேர்ப்பித்துக்கொண்டிருந்தார்கள்.

“இனிமேலும் இந்த முகாமில் எவ்வளவு காலம் வசிக்கவேண்டியிருக்குமோ தெரியாது அண்ணே.

எதுக்கும் குடும்பத்தோட ஒருக்கா கதைச்சால், மனசுக்குத் தெம்பா இருக்கும்”

குடிவரவு அமைச்சுக்கான கோரிக்கைப்படிவத்தை எடுத்துவந்து, அல்பா கம்பவுண்ட் வெளிவிறாந்தை வெளிச்சத்தில் வைத்து நிரப்பினேன். நீதன் கையெழுத்திட்டான். அழைப்பு எடுக்கவேண்டிய இந்தோனேசிய தொலைபேசி இலக்கம் எழுதியது சரியா என்று சரிபார்த்துவிட்டுத் தந்தான். மறுநாள், குடிவரவு அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்பில், சேர்த்துவிடுவதாகக் கூறினேன்.

சகல உணர்வுகளும் நிறைந்த புதிய மனிதனாக நீதன் மாறிவருவது அவனது முகத்தில் தெரிந்தது. எதையும் எதிர்கொள்வதற்குத் தயாராகிவிட்டவன்போல தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தான் சொல்லப்போகும் பதில்கள் தனக்கு எம்மாதிரியான உதிர்காலத்தைத் தந்தாலும், அதனை சவாலாக வாங்கிக்கொள்வதற்கு உறுதியாய் தெரிந்தான்.

அந்த வைராக்கியம், அடுத்தநாள் மாலைவரைக்கும் மாத்திரமே குழப்பமின்றி நீடிக்கும் என்று அவன் அப்போது எதிர்பார்க்கவில்லை. ஏன், நானும்தான் எதிர்பார்க்கவில்லை.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism