Published:Updated:

`ஷூ பாலிஷர்' டு மூன்றாவது முறையாக பிரேசில் அதிபர் - யார் இந்த லுலா?!

பிரேசில் அதிபர் லுலா ( Andre Penner )

சிலி, கொலம்பியாவைத் தொடர்ந்து, பிரேசிலின் மூலம் மீண்டும் தென் அமெரிக்காவில் இடதுசாரி அலை அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்குக் காரணம் லுலாவின் வெற்றிதான்.

`ஷூ பாலிஷர்' டு மூன்றாவது முறையாக பிரேசில் அதிபர் - யார் இந்த லுலா?!

சிலி, கொலம்பியாவைத் தொடர்ந்து, பிரேசிலின் மூலம் மீண்டும் தென் அமெரிக்காவில் இடதுசாரி அலை அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்குக் காரணம் லுலாவின் வெற்றிதான்.

Published:Updated:
பிரேசில் அதிபர் லுலா ( Andre Penner )

பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரும், முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றிருக்கிறார்.

தற்போது நடந்து முடிந்த பிரேசிலின் அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சனாரோவை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி வாகை சூடி, மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் அமரவிருக்கிறார் `லுலா’ என்றழைக்கப்படும் லுலா டா சில்வா. தற்போது உலகத் தலைவர்கள் பலரும் லுலாவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

யார் இந்த லுலா?

செருப்பு தைத்தவரின் மகன் அதிபரானதை ஆப்ரகாம் லிங்கன் வரலாற்றில் படித்திருப்போம். அதுபோல சிறுவயதில் ஷூவுக்கு பாலிஷ் போட்டு தன் வாழ்க்கையில் நாள்களை நகர்த்தியவர் தற்போது அதிபரான கதைதான் லுலாவின் வரலாறு. இளம் வயதிலேயே வறுமையின் காரணமாகப் பல்வேறு தொழில்களைச் செய்துவந்த லுலா, தனது 19-வது வயதில் வேர்ஹவுஸில் வேலைக்குச் செல்கிறார். அப்போது பிரேசில் தொழில்மயமாகிக்கொண்டிருந்த காலம். ஃபோர்டு, வோல்க்ஸ்வேகன், டொயோட்டா, மெர்சிடிஸ் என்று பல நிறுவனங்கள் பிரேசிலில் தொழிற்சாலைகளை நிறுவின. அப்போதுதான் லுலா தன்னைத் தொழிலாளர்கள் கூட்டணியில் (Workers Union) இணைத்துக்கொள்கிறார்.

பிரேசில் அதிபர் லுலா
பிரேசில் அதிபர் லுலா
Andre Penner

தொடர்ந்து படிப்படியாகக் கூட்டணியில் முன்னேறி, 1975, 1978-ல் தொழிலாளர்கள் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் லுலா. தான் தலைவராக இருந்த நேரத்தில், தொழிற்சாலைகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னின்று நடத்துகிறார். அந்தச் சமயத்தில் பிரேசிலில் ராணுவ ஆட்சி வந்துவிடவே, போராட்டம் செய்கிறவர்களையெல்லாம் உடனடியாகக் கைதுசெய்து சிறையில் வைத்தது பிரேசில் அரசு. அதன்படி லுலா ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார். ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, லுலாவுக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவித்தது அப்போதைய பிரேசில் அரசு.

சிறையிலிருந்து விடுதலையான ஒருசில நாள்களில் கூட்டணித் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தம் நண்பர்கள் என இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி `Partido dos Trabalhadores சுருக்கமாக பி.டி (PT) என்று 1980-ல் ஓர் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார். இதைத் தொழிலாளர்கள் கட்சி (Worker Party) என்று மக்கள் அழைத்தனர். அப்போது பிரேசிலில் அதிபர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை இல்லை. தற்போது இந்தியாவில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதுபோல, அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. அதை 1989-ல் மாற்றியமைத்து, நேரடித் தேர்தல் முறையை அமல்படுத்த வைத்தார் லுலா. அதே ஆண்டில் அதிபர் தேர்தலுக்கும் போட்டியிட்டார். ஆனால், முதல் தேர்தலிலேயே தோல்வியைச் சந்தித்தார்.

பிரேசில் அதிபர் லுலா
பிரேசில் அதிபர் லுலா
Andre Penner

அவரை எதிர்த்து போட்டியிட்ட காலர் வெற்றிபெற்றார். 1992-ல் காலர் தம் பதவியிலிருந்து விலகிவிடவே, லுலாவும் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று அறிவித்தார். ஆனால், அவர் அந்தத் தேர்தலில் நின்றிருந்தால், நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார் என்று பிரேசில் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் நடந்த இரண்டு அதிபர் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவிய லுலா (1994 &1998), 2002-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றிபெற்றார். அதன் பிறகு, 2006-ல் நடந்த அதிபர் தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற்று, தொடர்ந்து இரண்டு முறை பிரேசிலின் அதிபர் பதவியை அலங்கரித்தார்.

லுலாவின் நலத்திட்டங்கள்:

லுலா வெற்றிபெற்ற பிறகு பிரேசிலின் வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். அதில் குறிப்பிடத்தக்கது வறுமை இல்லா திட்டம் (Zero hunger programme). பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கியது இந்த வறுமை ஒழிப்புத் திட்டம். விவசாயத்தில் புரட்சி, இளமைப் பருவத்தில் கர்ப்பத்தடை, வறட்சிப் பகுதியில் நீர் மேலாண்மை செய்வது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு நேரடிப் பண உதவி எனப் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தினார். ஆபத்துகள் அதிகமான மலைப்பகுதியில் வாழும் மக்களுக்காக, 40 பில்லியன் யூரோ செலவில் வீடு கட்டிக்கொடுத்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பிரேசிலில் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு 46 சதவிகிதமாகக் குறைந்தது.

பிரேசில் அதிபர் லுலா
பிரேசில் அதிபர் லுலா

இவரது செயல்களைப் பாராட்டி 2010-ம் ஆண்டு, ஐ.நா இவருக்கு, `உலக வறுமை ஒழிப்பு சாம்பியன்’ என்றொரு விருது கொடுத்தது. (World Champion in fight against hunger). இது தவிர பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் அலவன்ஸ், வறுமை ஒழிப்புக்காகத் தனி அமைச்சகம் போன்ற பல விஷயங்களையும் கொண்டுவந்தார். ஆனாலும் கூட்டணிக் கட்சியின் கெடுபிடியால், தேர்தலில் முன்மொழிந்தவற்றில் பாதியைத்தான் லுலாவால் நிறைவேற்ற முடிந்தது.

பொருளாதார சீரமைப்பு:

லுலா அதிபராவதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது பிரேசில். சொல்லப்போனால், யார் பிரேசிலை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கப்போகிறார் என்பதை மனதில் வைத்துத்தான், அப்போதைய அதிபர் தேர்தலே இருந்தது. லுலா அதிபரான பின்னர் பல விமர்சனங்கள் எழுந்தன. 'ஓர் இடதுசாரிக் கொள்கையை உடையவர், தனியார்மயத்துக்கு எதிராகப் பேசி வருபவர் எப்படி இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைப்பார்?' என்று பல்வேறு பொருளாதார அறிஞர்கள் விமர்சனம் செய்தார்கள். ஆனால் லுலா பதவியேற்ற பிறகு , அதுவரை கடனில் சிக்கித்தவித்த பிரேசில், 2008-ல் முதன்முதலாக மற்ற நாடுகளுக்குக் கடன் கொடுத்தது. வங்கிகள் அனைத்தும் அதுவரை காணாத லாபத்தை லுலாவின் ஆட்சியில் கண்டன. ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டி சர்வதேச நிதிக் கூட்டமைப்பிடம் (IMF) கடன் வாங்கி, 2005-ல் மொத்தக் கடனையும் வட்டியோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பிச் செலுத்தினார் லுலா.

பிரேசில் அதிபர் லுலா
பிரேசில் அதிபர் லுலா

லுலா ஆட்சியின் ஆரம்பத்தில் பொருளாதார அமைச்சராக இருந்த பாலோசி, பல்வேறு ஊழல்கள் செய்ததால், பதவி விலகிவிட, தம்மைப் போன்ற ஒரு தீவிர இடதுசாரி சிந்தனை உள்ள ஒரு பொருளாதார அறிஞரை, பொருளாதார அமைச்சராக்கினார் லுலா. அவர்தான் மான்டிகா. இவர்தான் லுலாவின் இரண்டாவது ஆட்சியில், வளர்ச்சி முன்னேற்ற திட்டத்தைக் கொண்டுவந்து, பிரேசிலின் பொருளாதாரத்திலும், சமூகக் கட்டமைப்பிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். இவர் வகுத்த திட்டங்கள்தான் 2008-ல் உலகப் பொருளாதார நெருக்கடியின்போது, பிரேசிலின் பொருளாதாரம் சரிந்துவிடாமல் இருக்க உதவின.

லுலாவின் மறுபக்கம்:

லுலாவின் ஆட்சியில் பிரேசில் வளர்ச்சிப் பாதையை எட்டினாலும், அவரது அதே ஆட்சியில்தான் பிரேசில் பல்வேறு ஊழல்களையும் சந்தித்தது. லுலாவின் முதல் ஆட்சிக்காலத்தில், அப்போதைய அட்டர்னி ஜெனரல், லுலா உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த 40 பேர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டார். இந்தத் தகவல் வெளிவந்த ஒரு சில நாள்களிலேயே ஊடகச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை பறிக்கப்பட்டன. 2016-ல் லுலாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், அவரது ஆட்சியில் பெட்ரோப்ராஸ் எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

பிரேசில் அதிபர் லுலா
பிரேசில் அதிபர் லுலா
Andre Penner

அதையடுத்து, லுலாவை அப்போதைய அதிபரான ரௌஸெப், பிரேசிலின் தலைமை அதிகாரியாக நியமித்தார். (இது பிரேசில் நாட்டின் பிரதமருக்கு இணையான பதவி). இதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஃபெடரல் கோர்ட் (இந்தியாவின் உச்ச நீதிமன்றம்போல) தலையீட்டால் அந்தப் பதவி பறிக்கப்பட்டு, லுலாவின் மீது விசாரணை தொடங்கப்பட்டது. இறுதியில் 2018-ல் சிறையிலடைக்கப்பட்டு சுமார் 580 நாள்கள் சிறையில் இருந்தார் லுலா. லுலாவைச் சிறையில் அடைத்த நீதிபதி, பின்னாளில் போல்சனாரோ அரசாங்கத்தில் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2019-ல் லுலாவைக் கைதுசெய்தது முறையன்று என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 2021-ல் அவர்மீது சுமத்தப்பட்ட வழக்கு பொய்யானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு லுலா விடுதலை செய்யப்படுகிறார்.

பிரேசில் அதிபர் லுலா
பிரேசில் அதிபர் லுலா
Andre Penner

அதன் பிறகு தற்போது 2022 தேர்தலில் போல்சனாராவுக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவிருக்கிறார் லுலா. தற்போது உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருப்பதால், பிரேசிலின் கரன்சி மதிப்புமே சரிந்து... நாட்டின் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பிரேசிலின் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் லுலா, 'பிரேசிலின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?' என்பது பிரேசில் மக்களிடையே எழும் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.