இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, பல வாரங்களாக இலங்கை மக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், நேற்று திடீரென மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் போராட்டக் களம் கலவரமாக மாறியது. பின்னர், கலவரத்தை அடக்கும் பொருட்டு இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போகப் போக கலவரம் தீவிரமடைய, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ராஜபக்சே, பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறி வேறு வீட்டுக்குச் சென்றார்.
மேலும், நேற்றிரவு கலவரத்தில் ராஜபக்சேவின் பூர்வீக வீடு தீக்கிரையானது. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் ராஜபக்சே வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ராஜபக்சேவின் மகன் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி நொடிக்கு நொடி இலங்கையில் சூழல் பரபரப்பாகிவரும் நிலையில், நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டுமென்று, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
