Published:Updated:

``70 வருட போராட்டத்துக்கு அமைதியாக தீர்வு காண வேண்டும்!" - காஷ்மீர் குறித்து மலாலா

சத்யா கோபாலன்

காஷ்மீர் பிரச்னைகள் தொடர்பாக, நோபல் பரிசு பெற்ற மலாலா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மலாலா
மலாலா

இந்தியா - பாகிஸ்தானின் எல்லை மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் ரத்துசெய்து அறிவித்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. கடந்த சில நாள்களாக இந்தியாவில் எங்கு திரும்பினாலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேச்சுக்களே அடிபடுகின்றன.

காஷ்மீர்
காஷ்மீர்

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஐ.நா-வின் அமைதிக்கான தூதருமான மலாலா, காஷ்மீர் பிரச்னை தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடந்த கலவரத்துக்குப் பிறகு இங்கிலாந்தில் வசித்துவரும் மலாலா, அங்கிருந்தபடி இந்தக் கருத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”நான் குழந்தையாக இருக்கும்போது, என் பெற்றோர் குழந்தையாக இருக்கும்போது, என் தாத்தா, பாட்டி இளம் வயதாக இருக்கும் போதிலிருந்து காஷ்மீர் மக்கள் தினமும் மோதல்களைப் பார்த்து வருகின்றனர். சுமார் 70 ஆண்டுகளாகக் காஷ்மீர் குழந்தைகளும் மோதல்களுக்கு மத்தியில்தான் வளர்கின்றனர்.

மலாலா
மலாலா

எனக்கு காஷ்மீர் மீது அக்கறை உள்ளது காரணம் தெற்கு ஆசியாதான் என் வீடு. காஷ்மீர் மக்களையும் சேர்த்து 1.8 பில்லியன் மக்களுடன் என் இல்லத்தை நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். நாம் அனைவரும் வெவ்வேறு கலாச்சாரம், மொழி, மதம், உணவு ஆகியவற்றுடன் வாழ்கிறோம். நாம் அனைவரும் அமைதியாக வாழ்கிறோம் என நம்புகிறேன். நாம் தொடர்ந்து துன்பப்படுவது, ஒருவரை ஒருவர் காயப்படுத்துவது போன்ற எதுவும் தேவையில்லை.

காஷ்மீரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள்தான் இந்த பாதிப்புகளில் அதிகம் பாதிக்கக்கூடியவர்கள். அவர்கள்தான் மோதலினால் ஏற்படும் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை நினைத்து நான் கவலைகொண்டுள்ளேன். தெற்கு ஆசியாவில் உள்ள சர்வதேச சமூக அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.

எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடுவது அவசியமான ஒன்று. 70 வருடப் போராட்டத்துக்கு அமைதியான முறையில் சுமுகமாகத் தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.