Published:Updated:

``இலங்கை மன்னார் புதைகுழிகளின் கார்பன் டேட்டிங் தவறானது!” - தடயவியலாளரின் நேரடி அனுபவம்

மன்னார் புதைகுழி
மன்னார் புதைகுழி

155 நாள்கள் நடைபெற்ற ஆய்வில் 325 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் கார்பன் டேட்டிங் அறிக்கையின்படி, அவை கி.பி 1499 முதல் கிபி 1719 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டது.

மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான ஜெனிவா உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் 26 அன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தடயவியல் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் ஒருவர்.

ஐ.நா. சபை
ஐ.நா. சபை

1990 முதல் 2009 வரை இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் புதைகுழிகளின் மர்மம் குறித்தான தனது ஆய்வுகள் குறித்து உச்சி மாநாட்டில் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் பேசியிருந்தார். மன்னார் பகுதியில் 2013 டிசம்பர் 20-ம் நாள் குடிநீர்த் திட்டத்திற்காக நீர்க்குழாய்கள் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் நிலத்தைத் தோண்டியபோது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரத்தினத்தின் உத்தரவின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 155 நாள்கள் நடைபெற்ற ஆய்வில் 325 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் கார்பன் டேட்டிங் அறிக்கையின்படி, அவை கி.பி 1499 முதல் கி.பி 1719 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கணக்கிலிடப்பட்டது. இந்த இலங்கை மன்னார் புதைகுழிகளில் தாம் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம் குறித்தும் மருத்துவர் சேவியர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”அனைத்துலக ஈழத்தமிழர் உரிமைச் சங்கம் அழைப்பின் பெயரில் அவர்களது குழுவுடன் ஒருவருடத்துக்கு முன்பு சென்று போருக்குப் பின் இலங்கையில் உள்ள சூழ்நிலையைப் பற்றிய சமநிலை கண்காணிப்பை நிகழ்த்தினோம். மன்னார் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று மன்னார் புதைகுழி ஆராய்ச்சியைப் பார்வையிட்டோம். மன்னாரில் ஓரிடத்தில் கட்டடம் கட்ட தோண்டப்பட்டபோது மனித உடல் புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு ஆய்வுசெய்யும் நிலை உருவானது.

டாக்டர் சேவியர் செல்வ சுரேஷ்
டாக்டர் சேவியர் செல்வ சுரேஷ்

இது மாதிரியான ஆய்வுக்குக் குறைந்தபட்சம் 10 அடி தூரமாவது எலும்புகள் இல்லை என உறுதியான பின்தான் புதைகுழி ஆய்வு வரைமுறை செய்ய வேண்டும். ஆனால் மன்னாரில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. புதிதாகப் போடப்பட்ட சாலையில் ஒரு பக்கம் ராணுவ முகாம், மறுபக்கம் மனித எலும்புகள் அந்தச் சாலையின் விளிம்பிலேயே வெளியே தெரிகின்றன.

இலங்கை அரசு வெளியிட்டுள்ள கார்பன் டேட்டிங் அறிக்கையும் தவறானது. குற்றம் புரிந்தவர்களே குற்றத்தை விசாரிப்பது உலகத்தில் எங்கும் நடக்காதது. தடயவியல் துறை சார்ந்த ஒருவர், தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒருவர் எனப் பயிற்சியற்ற இருவர் மட்டுமேயான குழு நடத்தும் புலன்விசாரணை நிறுத்தப்பட்டு, ஐ.நா. சபை மூலம் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தடயவியல் முறையில் ஒருவர் பல்லைவைத்தே அவரது பிறந்த தேதியைச் சொல்ல முடியும் எனும்போது இவர்களது அணுகுமுறை வெறும் கண்துடைப்பே. எடுத்த எலும்புகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆறு எலும்புகளை மட்டுமே ஆரய்ச்சிக்கு அனுப்புகிறார்கள். பிரமிடுகளின் வயதைக் கணக்கிடும் தொல்லியல் ஆராய்ச்சி முறையைப் பின்பற்றி, எலும்புகளை ஆராய்ந்து ஓர் எலும்பு 210+/-30 வருடங்கள் என்றும் மற்றோர் எலும்பு 320+/- 30 என்றும் கூறுகிறார்கள்.

எலும்புகள்
எலும்புகள்

குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்படும் ஆபரணங்கள், பிஸ்கட் கவர்கள், குழந்தைகளின் எலும்பைச் சுற்றியுள்ள இரும்புச் சங்கிலிகள் போன்றவை பறைசாற்றுகின்றன.

போஸ்னியா, உகாண்டா போன்ற நாடுகளில் நடந்தது போன்று சர்வதேச விசாரணை நடத்தி இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கப் போராட வேண்டும். இலங்கையில் போராட்டம் காந்தி வழியில் தொடங்கி ஆயுதப் போராட்டத்தில் முடிந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை தவிர்த்து மத்திய அரசிடம் ஈழத்தமிழர்களின் நலனுக்காக அழுத்தம் கொடுக்கவேண்டும். இங்கிருந்து அங்கு நடிகர்கள், பாடகர்களைக் கூட்டிச் சென்று விழா எடுக்கிறோம் என்றில்லாமல் ஈழ மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். இலங்கையில் வடகிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகள் எல்லாம் சீன மயமாகி உள்ளன.

சீன ஆக்கிரமிப்பை அடுத்து, சாலையறியா ஊர்களில் எல்லாம் சாலை போட்டுள்ளது பற்றி ஒரு பல்கலைக்கழக மாணவரிடம் விசாரித்த போது, 'இந்த ரோடு எங்களைத் திட்டமிட்டு அழித்தவர்கள் வருங்காலத்தில் தப்பி ஓடுவதற்காகப் போடப்பட்டது' என்று குமுறுகிறார். தமிழர்களின் நிலங்கள் ராணுவ முகாம்களாக உருமாறியுள்ளன. தமிழ்ப் பெண்கள் போருக்கு முன்பு இரவிலும் பயமின்றி வெளியில் சென்று வந்ததாகவும், போருக்குப் பிறகு பகலில் பேருந்தில் சென்றாலும் ராணுவத்தினர் அருகில் அமர்ந்து தூங்கி விழுவதுபோல் பாசாங்கு செய்யும் கொடுமையும், ராணுவத்தினர் தனியாக வாழும் பெண்களை போன்களில் அழைக்கும் இழிநிலையும் நிலவுவதாகச் சொல்கிறார்கள்.

ஜெனீவா பிரஸ்
ஜெனீவா பிரஸ்

அவர்கள் இந்திய ராணுவம் செய்த பாலியல் வன்முறையை மறக்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாகக் கருதாமல் அவர்கள் தமிழர்கள் என்கிற காரணத்துக்காகவே இலங்கை ராணுவம் கொல்வதை இந்திய அரசு தட்டிக் கேட்காவிட்டால், பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தை இந்தியா இழக்க நேரிடும். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கனடா, சுவிட்சர்லாந்து, லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நல்ல வாழ்வாதாரத்தில் வாழ்கிறார்கள்.

அவர்களின் குழந்தைகளும் தமிழ் மணம் மாறாமல் பேசுகிறார்கள். பிற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நல்லபடியாக இருக்கும்போது தொப்புள் கொடி உறவெனச் சொல்லப்படும் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாகவே உள்ளது.

அகதிகளாய் வந்தவர்கள் அகதிகளாய்த்தான் வாழ்கிறார்கள். உலகச் சமூகம் இந்தக் கருவறுப்புக்கு உதவியுள்ளது. இந்தக் கருவறுப்பு தமிழினத்துக்கு ஏற்பட்டதல்ல. மனிதகுலத்துக்கு ஏற்பட்டது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு