Published:Updated:

‘அமெரிக்கர்கள் உள்ளே வரக் கூடாது!’ - தலைகீழான வரலாறு; எல்லையை மூடிய மெக்ஸிகோ மக்கள்

மெக்ஸிகோ
மெக்ஸிகோ ( AP )

அமெரிக்காவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்ஸிகோவுக்குள் நுழையக்கூடாது என மெக்ஸிகோ மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் உறுதிசெய்துள்ளன. இதனால் உலகிலேயே அதிக வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு முறையான சமூக விலகல், துரித மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததே வைரஸ் இவ்வளவு வேகமாகப் பரவியதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மெக்ஸிகோ
மெக்ஸிகோ
AP

இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்ஸிகோ எல்லையில் அந்நாட்டு மக்கள் கடந்த மூன்று நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கர்கள் மெக்ஸிகோவுக்கு வருவதாகவும் இதனால் தங்கள் நாட்டில் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் அமெரிக்காவுடனான மெக்ஸிகோ எல்லையை மூடிவிட்டு ‘அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்’ என்ற பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான மக்கள் முகமூடிகள் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெக்ஸிகோவில் இதுவரை 700-க்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வருபவர்களுக்கு முறையான சோதனை செய்யப்படுவதில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ வரும் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெக்ஸிகோ
மெக்ஸிகோ
AP

“இந்தத் தொற்று நோயைச் சமாளிக்க மெக்ஸிகோ அரசால் எந்தச் சுகாதாரத் திட்டமும் முறையாகச் செய்யப்படவில்லை. அதனால்தான் நாங்கள் இன்று இங்கு நிற்கிறோம். மெக்ஸிகன் ஜனாதிபதிக்கு இங்கு நடக்கும் நிலைமையைப் புரியவைக்கவே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இது அவருக்கு விடுக்கும் எச்சரிக்கை” எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாகப் பிற நாட்டினர் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அந்த மக்களை அனுமதிக்கக் கூடாது என மெக்ஸிகோ அரசைக் கடுமையாக எச்சரித்தார். இதைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் மிக நீண்ட சுவர் கட்டப்படும் என அறிவித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்து மெக்ஸிகோ உட்பட பல நாடுகள் ட்ரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மெக்ஸிகோ
மெக்ஸிகோ
AP

தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என்பது போய் அமெரிக்கர்கள் மெக்ஸிகோவுக்குள் நுழையக்கூடாது என மக்கள் போராட்டம் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு