Published:Updated:

சரியும் பாகிஸ்தான் பொருளாதாரம்... இம்ரான் கானை லெஃப்டில் அடிக்கும் ராணுவத் தளபதி!

பாகிஸ்தானில், சரிந்துள்ள பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்துவது குறித்துத் தொழிலதிபர்களை அழைத்து, அந்நாட்டின் ராணுவத் தளபதி விவாதித்துள்ளார் என்கிற தகவல்கள், சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாகக் கடந்த பல வாரங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைப்பு, உற்பத்தி நிறுத்தம், வேலையிழப்புகள் எனக் கவலைக்குரிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆட்டோமொபைல், ஜவுளி உள்ளிட்ட துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி சரிந்துள்ளது. இந்த நிலைமை, இந்தியாவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

நம் பக்கத்து நாடான பாகிஸ்தானின் பொருளாதாரமும் கடும் பாதிப்பில் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்துவருகிறது. அது, கடந்த மூன்று ஆண்டுகளில் இன்னும் மோசமான நிலையை அடைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. பாகிஸ்தானின் பட்ஜெட் பற்றாக்குறை என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோர்க்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மோசமான நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில் அந்நாட்டு ராணுவத்தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா இறங்கியிருக்கிறார். பிரதமர் இம்ரான் கான் தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அங்கு நடைபெற்றுவருகிறது. ஆனாலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் காட்டிலும் அதிகாரம் மிகுந்ததாகக் கருதப்படும் ராணுவத்தின் தளபதி, அந்நாட்டின் முக்கியத் தொழிலதிபர்களை அழைத்து பொருளாதார நிலைமைகுறித்து விவாதித்திருக்கிறார். இது, சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா?#SmartInvestorIn100Days
- நாள் 1

கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. அப்போது, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதிகரித்துவரும் ஊழல், குறைந்துவரும் அந்நிய நேரடி முதலீடு போன்ற விஷயங்கள் குறித்து தொழிலதிபர்களுடன் ராணுவத் தளபதி விவாதித்துள்ளார் என்று செய்திகள் வருகின்றன.

பொருளாதாரம் குறித்து ராணுவத் தளபதி ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும், நேரடியாக அவர் ஏன் தொழிலதிபர்களுடன் பேச வேண்டும் என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆனால், தேசப்பாதுகாப்பு என்பது நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது, தேசப் பாதுகாப்புக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்ற வாதத்தை ஒரு தரப்பினர் முன்வைக்கிறார்கள். மேலும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதும், தொழிலதிபர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ராணுவத் தளபதியின் நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர்களும் பொருளாதார ஆய்வாளர்களும், ராணுவத் தளபதியின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறார்கள் என்கிற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

இம்ரான் கான் - பாஜ்வா
இம்ரான் கான் - பாஜ்வா

பொருளாதாரம் குறித்து ராணுவத் தளபதிக்கு சில யோசனைகள் இருக்கலாம் என்று நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே கூறியிருக்கிறார்கள். தவிர, ‘இம்ரான் கான் தலைமையிலான கட்சி இப்போதுதான் முதன்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒப்பிடும்போது, இம்ரான் கான் ஆட்சிக்குப் போதிய அனுபவம் இல்லை’ என்று அவர்கள் சொல்லும் காரணம் அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது.

கார்ப்பரேட் வரிக்குறைப்பு... பொருளாதார மந்தநிலையை சரி செய்யுமா?

ஆனால், தமது அரசும் ராணுவமும் இணைந்து பணியாற்றுவதாக இம்ரான் கான் வெளிப்படையாகக் கூறியுள்ளார். 58 வயதான ராணுவத் தளபதி பாஜ்வாவுக்கு, மூன்றாண்டு காலம் பதவிநீட்டிப்பு வழங்கியுள்ளார் இம்ரான் கான். 1947-ல் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது முதல், ஆட்சியைப் பலமுறை ராணுவம் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தானின் 72 ஆண்டுகால வரலாற்றில், பாதி காலத்தை ராணுவம்தான் ஆட்சிசெய்துள்ளது. அதனால், ஆட்சியை மீண்டும் ராணுவம் பிடிக்கலாம் என்று ஜனநாயகத்தின்மீது ஆர்வம் கொண்டவர்கள் கவலையுடன் பார்க்கிறார்கள்.