Published:Updated:

ராணுவ ஆட்சி, இன மோதல்கள், சதித்திட்டங்கள்... மியான்மர் வரலாறு என்ன சொல்கிறது?!

மியான்மர்

சுதந்திரம் பெற்றது முதலே, மியான்மர், ராணுவ ஆட்சி, உள்நாட்டுப் போர், மோசமான நிர்வாகம் மற்றும் பரவலான வறுமை ஆகியவற்றுடன் போராடி வருகிறது. மியான்மர் இப்போது வன்முறையின் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளது...

ராணுவ ஆட்சி, இன மோதல்கள், சதித்திட்டங்கள்... மியான்மர் வரலாறு என்ன சொல்கிறது?!

சுதந்திரம் பெற்றது முதலே, மியான்மர், ராணுவ ஆட்சி, உள்நாட்டுப் போர், மோசமான நிர்வாகம் மற்றும் பரவலான வறுமை ஆகியவற்றுடன் போராடி வருகிறது. மியான்மர் இப்போது வன்முறையின் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளது...

Published:Updated:
மியான்மர்

சுதந்திரம் பெற்றது முதலே, மியான்மர், ராணுவ ஆட்சி, உள்நாட்டுப் போர், மோசமான நிர்வாகம் மற்றும் பரவலான வறுமை ஆகியவற்றுடன் போராடி வருகிறது. மியான்மர் இப்போது வன்முறையின் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளது.

`Tatmadaw’ என்று அழைக்கப்படும் ராணுவம், ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்பே போராடிக்கொண்டிருந்த இன ஆயுத அமைப்புகளிடமிருந்தும், போராளிகளை ஒழுங்கமைத்த சாதாரண குடிமக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. ராணுவ ஆட்சிக்குழுவை எதிர்ப்பதற்கு, முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள் ஒரு நிழல் அரசாங்கத்தை உருவாக்கி, நாடு முழுவதும் போராடும் சக்திகளை அணிதிரட்டியுள்ளனர். இந்தநிலையில் தான் எதிர்ப்புப் படைகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் மிருகத்தனமான ஒடுக்குமுறை மூலம் பதிலடி கொடுத்துள்ளது. ஆனால் இன்னும் நாட்டின் பெரும் பகுதிகளில் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க முடியவில்லை. வரும் காலங்களில் வன்முறை தீவிரமடைவது உறுதி என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

மியான்மர் போராட்டம்
மியான்மர் போராட்டம்
AP

இத்தகைய கிளர்ச்சியால், மியான்மரின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துவருகிறது. இது போக, கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் சுகாதாரத்துறையும் சரிவை சந்தித்துவருகிறது. சுருக்கமாக, மியான்மர் வறுமை, போர், வன்முறை என மீள முடியாத பாதாளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

2021-ல் ஆட்சிக் கவிழ்ப்பு:

2020 தேர்தலில் மக்களாட்சி நடைமுறைக்கு வந்தது. ஆங் சான் சூகி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது . பிப்ரவரி 2021-ல், மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் மற்றும் பிற ராணுவத் தலைவர்கள் ஒரு சதிப்புரட்சியை நடத்தினர். ராணுவத்தின் பினாமி கட்சியாக அறியப்படும் யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மென்ட் பார்ட்டி (USDP) 2020 தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆட்சிக்குழு-அதிகாரப்பூர்வமாக மாநில நிர்வாகக் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. உண்மையான சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகி, ஊழல் மற்றும் பிற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். இது அவரின் கட்சியான தேசிய ஜனநாயக லீக் (NLD) மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல ஆர்வலர்களை வீட்டுக் காவலில் வைத்தது.

மியான்மர்
மியான்மர்

ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு சில வாரங்களில் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் வெடித்தன. சுகாதாரப் பணியாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள், முதலில் ஒரு அமைதியான கீழ்ப்படியாமை/ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தனர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை வேலைக்குச் செல்ல மறுத்துவிட்டனர். இறுதியில், வெளியேற்றப்பட்ட NLD மக்கள் பிரதிநிதிகள், எதிர்ப்புத் தலைவர்கள் மற்றும் பல சிறுபான்மை குழுக்களின் ஆர்வலர்கள் தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) எனப்படும் இணையான அரசாங்கத்தை நிறுவினர். ராணுவ ஆட்சியை எதிர்க்கும் வேறுபட்ட குழுக்களை ஒன்றிணைப்பது, இனக்குழுக்களிடையே அதிக ஒற்றுமையை வளர்ப்பது, ராணுவ ஆட்சிக்கு பிந்தைய மியான்மருக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் ஆதரவை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மியான்மர் ராணுவம்
மியான்மர் ராணுவம்

ராணுவ அரசின் ஒடுக்குமுறைக்கு ஐக்கிய நாடுகள் சபை, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து கண்டனங்கள் குவிந்தன. 2021 இன் பிற்பகுதியில், ராணுவம், தங்கள் மீதான எதிர்ப்பை ஆதரிப்பதாக நம்பப்படும் முழு கிராமங்களையும் அழித்து, பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி போராளிகளை கொன்று குவித்தது. குறைந்தபட்சம் 1,500 பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன. இது குறைவான எண்ணிக்கையாக கூட இருக்கலாம். ஊடகவியலாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் NLD அரசியல்வாதிகள் உட்பட எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ராணுவ ஆட்சிக்குழு கைது செய்துள்ளது.

வன்முறை என்பது மியான்மரின் எல்லையில் சிறுபான்மை இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் அல்ல, மாண்டலே மற்றும் யாங்கூன் போன்ற முக்கிய மத்திய நகரங்களிலும் நிகழ்கிறது. பரவலான வன்முறையால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல நேர்ந்துள்ளது.

மியான்மர் வரலாற்றில் ராணுவ ஆட்சி :

மியான்மர் 1948-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சிக்குழுவால் ஆளப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளைப் போலவே பர்மா ஒன்றியமும் ஒரு நாடாளுமன்ற ஜனநாயகமாகத் தொடங்கியது. ஆனால் ஜனநாயக ஆட்சி 1962 வரை மட்டுமே நீடித்தது. ஜெனரல் நே வின் (Ne Win) ராணுவ சதியால் மக்கள் ஆட்சி கவிழ்ந்து அடுத்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு அதிகாரத்தை ராணுவம் வைத்திருந்தது.

மியான்மர் போராட்டம்
மியான்மர் போராட்டம்
AP

தனிமைப்படுத்தப்பட்ட வெளியுறவுக் கொள்கை மற்றும் பர்மாவின் முக்கிய நிறுவனங்களை தேசியமயமாக்கி ஒரு சோசலிச பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் 1974-ல் நே வின் ஒரு புதிய அரசியலமைப்பை நிறுவினார். பொருளாதார நிலை வேகமாக மோசமடைந்தது, கறுப்புச் சந்தைப் பொருளாதாரம் பிடிபட்டது. 1988 வாக்கில், பரவலான ஊழல், மியான்மரின் நாணயம் தொடர்பான பொருளாதாரக் கொள்கையில் விரைவான மாற்றங்கள் மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவை கடும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தன. ஆகஸ்ட் 1988 -ல், ராணுவம் எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது, குறைந்தது மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களை இடம்பெயர வைத்தது.

மியான்மர்
மியான்மர்

1988 ஒடுக்குமுறைக்குப் பிறகு, நே வின் தனது கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் மற்றொரு ராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தை கைப்பற்றியது. 1989 ஆம் ஆண்டில், புதிய ராணுவ ஆட்சி நாட்டின் பெயரை பர்மா யூனியன் என்பதில் இருந்து மியான்மர் யூனியன் என மாற்றியது, மேலும் தலைநகர் ரங்கூன் யாங்கூன் என மறுபெயரிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில், ராணுவ அரசாங்கம் நிர்வாக தலைநகரை மத்திய மியான்மர் நகரமான நே பை தாவுக்கு மாற்றியது. `பர்மா' என்ற பெயர் பர்மன் இன பெரும்பான்மையினருக்கு சாதகமாக இருந்த காலனித்துவ சகாப்தத்தின் ஒரு சின்னம் என்றும், "மியான்மர்" அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கியது என்றும் ராணுவ ஆட்சிக்குழு வாதிட்டது. அமெரிக்கா இன்னும் பர்மா என்று குறிப்பிடுகிறது, இருப்பினும் பெரும்பாலான நாடுகள் மியான்மர் என்று அழைக்கின்றன.

2007 ஆம் ஆண்டில், சாஃரான் புரட்சி மூண்டது. பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வால் தூண்டப்பட்ட இந்த புரட்சி பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்ட ராணுவ ஆட்சி, சற்று பின்வாங்கினாலும் ஆட்சியை தொடர முடியும் என்று நம்பி கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பித்தது. அது முதலீட்டை ஈர்க்கவும் சீனாவை நம்பியிருப்பதை குறைக்கவும் விரும்பியிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது 2008 இல் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக வழிவகுத்தது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது. அது சிவில் ஆட்சியின் கீழும் ராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது. ராணுவ ஆட்சிக்குழு அதிகாரப்பூர்வமாக 2011 இல் கலைக்கப்பட்டு, ஒரு இடைக்கால காலத்திற்கு ராணுவ மேலாதிக்கம் கொண்ட சிவில் நாடாளுமன்றத்தை நிறுவியது. இதன் போது முன்னாள் ராணுவ அதிகாரியும் பிரதம மந்திரியுமான தெய்ன் செயின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நே வின்
நே வின்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குதல், ஊடக தணிக்கையை தளர்த்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்காக பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட சில சீர்திருத்தங்களை ஜனாதிபதி தெய்ன் செய்ன் முன்னெடுத்தார். 2015-ல், மியான்மர் தனது முதல் நாடு தழுவிய பல கட்சித் தேர்தலை நடத்தியது. ஆங் சான் சூகியின் எதிர்க்கட்சியான என்எல்டி கட்சி அமோக வெற்றி பெற்றது. புதிய பிரதிநிதிகள் சூகியின் நீண்டகால நம்பிக்கைக்குரிய ஹிடின் கியாவை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் உண்மையான அதிகாரம் சூகியின் கைகளில் இருந்தது, அவர் புதிதாக உருவாக்கப்பட்ட மாநில ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டு சிவில் அரசாங்கத்தின் உண்மையான தலைவராக ஆனார். இருப்பினும், உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகளின் பெரும்பாலான அம்சங்கள் மற்றும் உள்நாட்டுக் கொள்கை தொடர்பான பல விஷயங்களில் டாட்மடாவ் இன்னும் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டார். உண்மையில், 2008 அரசியலமைப்பு ராணுவத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான பல விதிகளை உள்ளடக்கியது.

மியான்மர்
மியான்மர்

இப்படியாக தொடங்கிய ஜனநாயக ஆட்சி 2021 பிப்ரவரி அன்று மீண்டும் ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. சில வருடங்கள் சுதந்திரமாக மக்களாட்சியில் ஆசுவாச பட்ட மக்கள் மீண்டும் ராணுவ கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து போராடி வருகின்றனர். இந்த போராட்டங்கள்தான் மக்கள் மற்றும் ராணுவ அரசுக்கு இடையே போர் மூள வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.