உக்ரைன் -ரஷ்யா இடையே தொடர்ந்து நீடித்துவரும் போர்c சூழலால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் 20,000 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை முயன்றுவருகிறது.
மத்திய அரசு, இந்தியர்கள் உக்ரைன் நாட்டின் எல்லையைக் கடந்து அண்டை நாட்டை அடைந்தால் அங்கிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ஆபரேஷன் `கங்கா' எனப் பெயர்வைத்து இந்தியர்களை மீட்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் சிக்கியிருக்கும் மாணவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``உக்ரைன் எல்லையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி கிடைக்கவில்லை. நாங்கள் உக்ரைன் எல்லைக்குச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டோம்.
ஆனால், ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவ இரண்டு நபர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தார்கள். இது தொடர்பாக இந்திய தூதரகத்திடம் முறையிட்டபோது அவர்களும் பதிலளிக்கவில்லை. அதற்குப் பின்பு இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பினோம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கு இந்தியர்களைப்போல எந்த அமெரிக்கரும் சிக்கிக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஜோ பைடனுக்கு முன்பே தெரியும். அதனால், அவர் தன் நாட்டுக் குடிமக்களைப் போர்ச் சூழல் வரும் முன்பே தாயகம் அழைத்துக்கொண்டார். இந்தியாவும் ஏன் அதைச் செய்யவில்லை... அந்த நேரத்தில் நமது பிரதமர் எங்கே இருந்தார்? ஒருவேளை உத்தரப்பிரதேசத் தேர்தலில் மும்மரமாக இருந்திருக்கலாம்" எனப் பேசினார்.

பிரதமர் மோடி உக்ரைன் போர் நெருக்கடி தொடர்பாக ஆலோசிக்க உயர்மட்டக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார். இந்தக் கூட்டம் முடிந்த பின்பு மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று, மீட்புப் பணியை ஒருங்கிணைத்து, மாணவர்களுக்கு உதவலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.