கடந்த வாரம் வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன்மீது ஷெல் தாக்குதல் நடத்துமாறு ரஷ்ய ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படையினர், கடந்த ஒன்பது நாள்களாகத் தொடர்ந்து உக்ரைனில் தாக்குதல் நடத்திவருகின்றனர். மேலும் இன்றுகூட, ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான, உக்ரைனின் ஜேபரோஜையா அணு உலையில் ரஷ்யப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த அணுமின் நிலையம் வெடித்தால், அது செர்னோபில் அணுமின் நிலையம் விபத்தைவிடவும் 10 மடங்கு பேரழிவைத் தரும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம், ``போரில் இதுவரை ரஷ்யப் படையினர் உக்ரைனில் 160-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை ஷெல் தாக்குதல் மூலம் தகர்த்துள்ளனர்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
