Published:Updated:

`கூட்டணியில் மோதல்; யாருக்கும் இல்லாமல் போன பதவி!’ - மலேசியாவின் பிரதமராக முஹைதீன் யாசின் நியமனம்

மலேசியா பிரதமர் முஹைதீன் யாசின்
மலேசியா பிரதமர் முஹைதீன் யாசின்

மலேசியாவில் ஆளும் கூட்டணிக் கட்சியில் விரிசல் ஏற்பட்டதால் பிரதமர் பதவியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த முஹைதீன் யாசினுக்கு வழங்கியுள்ளார் அந்நாட்டு மன்னர்.

மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும் அன்வர் இம்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதிக் கட்சியும் பிற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைத்துத் தேர்தலை எதிர்கொண்டன. அந்தத் தேர்தலில் இரு கட்சியினரும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி 2018-ம் ஆண்டு தேர்தலில் இவர்களின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலில் மகாதீர் முகமது பிரதமராகப் பதவியேற்பார், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தப் பதவி அன்வர் இம்ராஹிமுக்கு வழங்கப்படும் என்பதுதான் ஒப்பந்தம்.

மகாதீர் முகமது
மகாதீர் முகமது

இதையே அவர்கள் தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தனர். அவர்களின் கணிப்புப் படியே 2018 தேர்தலில் மகாதீர் - இம்ராஹிம் கூட்டணி அமோக வெற்றி பெற்று மகாதீர் மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் மகாதீர். இவர் பதவியேற்று தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் பிரதமர் பதவியை இம்ராஹிமுக்கு வழங்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கடந்த வாரம் குற்றம் சாட்டினர்.

`தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’ - மலேசியா, இந்தியா இடையே  மூளும் பனிப்போர்

இதற்கு, ஏபெக் மாநாட்டுக்குப் பிறகே பதவி விலக முடியும் என மகாதீர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இதனால் இந்தக் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது. மகாதீர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணியமைக்கப் போவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 24-ம் தேதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர். தன் ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னருக்கு அனுப்பி அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

அன்வர் இப்ராஹிம்
அன்வர் இப்ராஹிம்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் இப்ராஹிம், ``மகாதீர் என்னை ஏமாற்றிவிட்டார். ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் பொறுப்பை எனக்கு வழங்குவதாகக் கூறினார். ஆனால், எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் மீறிவிட்டார்” என்று பேசியிருந்தார். இது மலேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாதீரும், இம்ராஹிமும் தங்களின் பெரும்பான்மையை தனித்தனியாக அந்நாட்டு மன்னருக்கு நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

அதைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சியான மலாய் தேசிய கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் ஆட்சியைக் கைப்பற்றத் தனியாக முயற்சி செய்துகொண்டிருந்தார். இந்த முயற்சியில் யாசினுக்கு அதிக ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. பின்னர் அதிகாரிகளுடன் மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா ஆலோசனை நடத்தி இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி முஹைதீன் யாசினிடம் அதிக பெரும்பான்மையை இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அதனால் அரசியலில் பெரும் அனுபவம் உள்ள அவரே மலேசியாவின் புதிய பிரதமராக இருப்பார் என்றும் கூறியுள்ளார். மலேசியாவின் புதிய பிரதமர் முஹைதீன் யாசின் இன்று பிரதமர் அலுவலகத்தின் பதவியேற்றுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு