Published:Updated:

`முக்கியத் தலைவர்கள் கைது; ஓராண்டுக்கு அவசரநிலை!’ மியான்மரில் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆங் சாங் சூகி (கோப்பு படம்)
ஆங் சாங் சூகி (கோப்பு படம்) ( AP )

மியான்மரில் அடுத்த ஓராண்டுக்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவரான ஆங் சாங் சூகி, அதிபர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மரில் கொரோனா சூழலுக்கு மத்தியில், கடந்த நவம்பரில் தேர்தல் நடந்து முடிந்தது. ஆட்சியமைக்கத் தேவையான 322-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டிவந்தது. இந்தநிலையில், கடந்த சில வாரங்களாகவே அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துவந்தது.

ஆங் சாங் சூகி மற்றும் முக்கியத் தலைவர்கள் (கோப்பு படம்)
ஆங் சாங் சூகி மற்றும் முக்கியத் தலைவர்கள் (கோப்பு படம்)
AP

இன்று மியான்மரில் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் மற்றும் முக்கியத் தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிகாலையில் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது. அதோடு, அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும், இந்த எமர்ஜென்சி அடுத்த ஓராண்டுக்குத் தொடரும் என்றும் அந்த நாட்டு ராணுவம் தெரிவித்திருக்கிறது.

Vikatan

இப்படி நடப்பது மியான்மரில் புதிதல்ல. 1948-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து மியான்மர் விடுதலை பெற்றது. விடுதலைக்குப் பிறகு பெரும்பான்மையான நாள்களில் அந்த நாடு ராணுவ ஆட்சியிலேயேதான் கழித்துவந்தது. தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி 15 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டுக் காவலில்தான் இருந்துவந்திருக்கிறார். ராணுவ ஆட்சியை எதிர்த்து அமைதியான முறையில் போராடிவந்த அவருக்குக் கடந்த 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆங் சாங் சூகி
ஆங் சாங் சூகி
AP

தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று தொடர்ந்து ராணுவம் கூறிவந்த நிலையில், தற்போது அங்கு ராணுவப் புரட்சி நடந்திருக்கிறது. நாட்டின் தலைநகரில் தொலைபேசி, இணைய இணைப்பு வசதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆங் சாங் சூகி கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். ஆங் சாங் சூகி மற்றும் அதிபர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் கைதையடுத்து அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு