`சுயநலவாதி' ட்ரம்ப்; `இந்து தேசிய அரசு' மோடி!’ - அமெரிக்க பில்லியனர் விமர்சனம்

அதிபர் ஆகவேண்டும் என்ற ட்ரம்பின் கற்பனைக் கனவு உண்மையான பிறகு, அவரின் குணம் வேற பரிமாணங்களை அடைந்துவிட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் ஐம்பதாவது உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், பிரபலமானவர்கள், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு உலக நிகழ்வுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தங்கள் கருத்துகள், வாதங்களைத் தெரிவிப்பார்கள். இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் பில்லியனரும் கொடையாளருமான ஜார்ஜ் சோரோஸ் கலந்துகொண்டு அமெரிக்கா உட்படப் பிற நாடுகள் குறித்தும் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றிப் பேசியுள்ள ஜார்ஜ், ``ட்ரம்ப் ஒரு ஏமாற்றுக்காரர், சுயநலவாதி. உலகமே தன்னைச் சுற்றித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என அவர் நினைத்துக்கொண்டுள்ளார். அதிபர் ஆகவேண்டும் என்ற ட்ரம்பின் கற்பனைக் கனவு உண்மையான பிறகு, அவரின் குணம் வேற பரிமாணங்களை அடைந்துவிட்டது. உண்மையில் ஒரு அதிபராக அவர் அரசியலமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறிவிட்டார். இது தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்தியாவின் நிலை பற்றிப் பேசும் போது, ``இந்தியாவில் தேசியவாதம் முன்னேறுவதற்குப் பதிலாக தலைகீழாகிவிட்டது. இந்தியாவுக்கு இது மிகப் பெரிய பயமுறுத்தும் பின்னடைவு. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, இந்து தேசிய அரசை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால்தான் காஷ்மீருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது, மில்லியன் கணக்கான இஸ்லாமிய மக்களைக் குடியுரிமை மூலம் அச்சுறுத்துகிறார்” என்று விமர்சித்துள்ளார். இவரின் பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் சோரோஸ்!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் பிறந்தவர் ஜார்ஜ். இவரது சிறு வயதில் அங்கு உள்நாட்டுச் சண்டை நடந்ததால் அங்கிருந்து லண்டன் சென்று பட்டப்படிப்பு வரை படித்தார். பிறகு நியூயார்க் நகரில் குடியேறி தற்போது அமெரிக்கக் குடிமகனாக வாழ்ந்து வருகிறார். வணிகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் தேர்ந்தவர், பல நாடுகளின் பொருளாதாரச் சீரழிவை முன்கூட்டியே சரியாகக் கணித்தவர். தற்போது இவரின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர். இதுவரை இவர் கொடையாக அளித்தது மட்டும் 32 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.