Published:Updated:

` விண்வெளியில் நடந்த முதல் குற்றம் இது!' - வங்கிக் கணக்கு குற்றச்சாட்டில் சிக்கிய நாசா வீராங்கனை

சத்யா கோபாலன்

சர்வதேச விண்வெளி மையத்தில் அத்துமீறி செயல்பட்டதாக, நாசா வீராங்கனைமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Anne McClain
Anne McClain ( wikipedia )

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, கனடா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Anne McClain
Anne McClain
Twitter/@AstroAnnimal

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வீராங்கனை, விண்வெளியில் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அவர்மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னே மெக்லைன் ( Anne McClain) என்பவர், இந்த வருடத்தின் தொடக்கத்தில் 203 நாள்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருந்தார். முன்னதாக அமெரிக்க ராணுவத்திலிருந்த அன்னே, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (International Space Station) விமானப் பொறியாளராக இருந்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு, அன்னே மெக்லைன், தன்பாலின ஈர்ப்பாளரான சம்மர் வேர்டன் (summer Worden) என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 2018-ம் ஆண்டு, அதாவது அன்னே விண்வெளிக்குச் செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு, விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் வேர்டன்.

Anne McClain
Anne McClain
Twitter/@AstroAnnimal

இந்நிலையில், அன்னே விண்வெளியிலிருந்தபோது, அவரின் முன்னாள் வாழ்க்கைத் துணையான வேர்டனின் வங்கிக் கணக்கை அனுமதியின்றி திறந்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. அன்னே, தன் தவற்றை ஒப்புக்கொண்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Vikatan

இதுபற்றி பேசியுள்ள வழக்கறிஞர், “ தான் முறையற்ற எதையும் செய்யவில்லை என அன்னே கூறியுள்ளார். அன்னேவும் வேர்டனும் சேர்ந்து வாழ்ந்தபோது, ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். தங்கள் மகனை யார் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை உறுதிசெய்யவே, வங்கிக் கணக்கைத் திறந்ததாகக் கூறினார். அதற்குள் வேர்டன், தன் கணக்கில் உள்ள பணம் காணாமல் போய்விட்டதாக, வர்த்தக ஆணையத்திடமும் நாசாவிடமும் புகார் அளித்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Anne McClain
Anne McClain
Twitter/@AstroAnnimal

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்மீது அமெரிக்கா உட்பட 14 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, `சர்வதேச விண்வெளி நிலையத்தில் முறையற்ற செயல்களை யாரும் செய்யக்கூடாது எனவும், எந்த வீரர் செய்கிறாரோ அதற்கு அந்த நாடே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அன்னே மெக்லைன், “ என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. நான், அதிக மன உளைச்சலில் உள்ளேன். எனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் பாராட்டுகள். இந்த வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி-யை நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

`விண்வெளியில் நடந்த முதல் குற்றமாக இது பார்க்கப்படுகிறது' என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.