இங்கிலாந்தில் ஆட்சி செய்யும் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசாங்கத்தின் மந்திரி பதவியில் இருந்து தான் முஸ்லிம் என்ற காரணத்தால் நீக்கப்பட்டதாக, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் உறுப்பினர், மற்றும் பிரிட்டனின் முதல் பெண் இஸ்லாமிய அமைச்சரான 49 வயதாகும் நஸ்ரத் கானி, `சண்டே டைம்ஸ்' பேட்டியில் தெரிவித்துள்ளார்.
``2018-ல் முந்தைய ஆட்சியின் அமைச்சரவையில் எனக்கு போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிப்ரவரி 2020-ல் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பதவியேற்றார்; அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது என் அமைச்சர் பதவியைப் பறித்துவிட்டனர். எனது முஸ்லிம்தன்மை அதற்கான காரணம் என, பாராளுமன்ற ஒழுக்கத்தை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஒருவர் என்னிடம் கூறினார்'' என்று கூறியுள்ள நஸ்ரத் கானி, இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த மறுசீரமைப்புக் கூட்டத்தில், நான் ஒரு முஸ்லிம் என்பது ஒரு பிரச்னையாக எழுப்பப்பட்டது. எனது `முஸ்லிம் பெண் அமைச்சர்' அடையாளமும் அந்தஸ்தும் சக ஊழியர்களை சங்கடப்படுத்துகிறது என்று என்னிடம் கூறப்பட்டது. இவ்வளவு நடந்த பின்னரும், இது கட்சியின் மீதான எனது நம்பிக்கையை அசைக்கவில்லை என்று நான் பொய் சொல்லமாட்டேன். மேலும், எம்.பி.யாக நான் நீடிக்கலாமா என்று நான் சில நேரங்களில் தீவிரமாக யோசித்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி அலுவலகத்தில் இருந்து, நஸ்ரத் கானி குற்றச்சாட்டுகளுக்கு உடனடி பதில் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் தலைமை கொறடாவான மார்க் ஸ்பென்சர், ``இந்தக் குற்றச்சாட்டுகளின் மையம் என்னை நோக்கியே உள்ளதை என்பதை நான் அறிவேன். இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அவதூறானவை'' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்பென்சர் தனது பதிலில், கானி கடந்த மார்ச் மாதம் இந்தப் பிரச்னையை முதன்முதலில் எழுப்பியபோது, இந்த விஷயத்தை முறையான உள் விசாரணைக்கு வைக்க மறுத்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.
நஸ்ரத் கானி முறையான புகார் அளித்தால், அவரது குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டொமினிக் ராப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ``கன்சர்வேட்டிவ் கட்சியில் எந்தவொரு பாகுபாட்டையும், இஸ்லாமிய வெறுப்பையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே சரியாகப் புகாரளிக்கப்பட வேண்டும், பின்னர் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று ராப் ஸ்கை நியூஸிடம் கூறியுள்ளார்.

இஸ்லாமியர் எதிர்ப்பு மனநிலை (Islamophobia) குற்றச்சாட்டுகளை, கன்சர்வேட்டிவ் பார்ட்டி ஏற்கெனவே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மே மாதம் ஓர் அறிக்கை, முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு பற்றிய புகார்களை அக்காட்சி எவ்வாறு கையாள்கிறது என்று விமர்சித்தது. அந்த அறிக்கை, போரிஸ் ஜான்சன் தனது கடந்தகாலத்தில் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்புச் சொற்களுக்கு மன்னிப்புக் கேட்கவும் வைத்தது. குறிப்பாக, செய்தித்தாளில் ஒன்றில், பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்களை `நடமாடும் லெட்டர் பாக்ஸ் போல' என்று அவர் எழுதியது குறித்து மன்னிப்பு கேட்டார்.
நஸ்ரத் கானியின் தற்போதைய குற்றச்சாட்டு எது நோக்கிப் பயணிக்கவிருக்கிறது பார்ப்போம்.
- வைஷ்ணவி