Published:Updated:

‘3 நிமிடங்கள் முற்றிலும் உறைந்து போன சீனா’ - கொரோனாவால் இறந்தவர்களுக்கு மாபெரும் அஞ்சலி

சீனா
சீனா ( AP )

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நேற்று சீனாவில் நாடு தழுவிய அஞ்சலி செலுத்தப்பட்டது.

மொத்த மனிதக்குலத்தையும் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ள இந்தக் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 12 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 64,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்த உலகமும் பூட்டப்பட்டிருந்தாலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், முதன்முதலில் வைரஸ் உருவானதாகக் கூறப்படும் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நேற்று நாடு தழுவிய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சீனா
சீனா
AP

சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகர் வுகானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து டிசம்பர் மாதம் இறுதியில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதை அறியாத மக்கள் பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஒன்றிணைந்தபோது மிகவும் வேகமாக நாடு முழுவதும் வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் ஒரே மாதத்தில் இந்த வைரஸால் 80,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 3,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சீன அரசின் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் தற்போது அங்கு வைரஸ் முற்றிலும் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19... இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?

அங்கு நிலையைக் கட்டுக்குள் வந்த பிறகு கடந்த திங்கள் கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் வீதிகளில் நடமாட அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்து, வணிகம், தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு அரங்கங்கள் போன்ற அனைத்துமே திறக்கப்பட்டு சீனா மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. கொரோனா உருவானதுக்கு சீனர்களின் உணவு முறையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது அதனால் அந்நாட்டில் நாய் கறி, பூனை, பாம்பு, தவளை போன்றவை உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா
சீனா
AP

கொரோனாவிலிருந்து சீனா மீண்டுவிட்ட நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேற்று காலை நாடு தழுவிய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட அந்நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகள், பொதுமக்கள் போன்ற அனைவரும் கலந்துகொண்டனர். சீன நேரப்படி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் ஒரே மாதிரியாக சைரன் ஒலி ஒலிக்கப்பட்டது.

அப்போது மக்கள் அனைவரும் தாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலைகளை விடுத்து எழுந்து நின்று தலைகுனிந்தபடி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பலர் இறந்தவர்களின் கல்லறை முன்பு மெழுகுவத்தி ஏற்றினர், சீன கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்த நாடும் மூன்று நிமிடங்கள் உறைந்து இருந்தது. 3 நிமிடங்கள் போக்குவரத்து, தொழிற்சாலை, மக்கள் நடமாட்டம், கப்பல் போக்குவரத்து, விமானச் சேவை போன்ற அனைத்தும் நிறுத்தப்பட்டது. சிக்னல்களில் 3 நிமிடங்கள் சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்தன. நேற்று ஒரு நாள் முழுவதும் அனைத்து பொழுதுபோக்கு அரங்கங்களும் சுற்றுலாத்தலமும் மூடப்பட்டது.

சீனா
சீனா
AP

சீனாவில் வருடத்துக்கு ஒருமுறை இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துத்தும் விழா நடைபெறும், அந்த நாளில் மக்கள் இறந்தவர்களின் கல்லறைக்குச் சென்று அதைத் தூய்மைப் படுத்தி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்துவர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸால் இரண்டு முறை அந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

``சைரன்கள் ஒலி எழுப்பி அணைந்த பிறகு நாட்டில் உள்ள எல்லா இதயங்களும் உடைந்துவிட்டன. இந்த தொற்று நோயால் பல உயிர்கள் பறிபோயுள்ளது. கடந்த 3 மாதங்களாக நாங்கள் அனுபவித்த வலிகளைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்த நாள்கள் மீண்டும் எப்போதும் யாருக்கும் வரக் கூடாது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து பல மக்கள் இன்னும் துன்பத்தில் இருந்து மீழமுடியாமல் உள்ளனர்” என வுகானில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு