Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | முகாமில் நுழைந்த மர்மப் பெண் | பகுதி - 13

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
News
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )

அகதிகள் வாழ்வு சூதாட்டம் போன்றது. எவ்வளவுதான் அப்பாவிகளாக அவர்கள் தேசம்விட்டு வந்தாலும், கரைசேருகின்ற தேசம் அவர்களை ஒரு வகை செய்துவிடுகிறது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | முகாமில் நுழைந்த மர்மப் பெண் | பகுதி - 13

அகதிகள் வாழ்வு சூதாட்டம் போன்றது. எவ்வளவுதான் அப்பாவிகளாக அவர்கள் தேசம்விட்டு வந்தாலும், கரைசேருகின்ற தேசம் அவர்களை ஒரு வகை செய்துவிடுகிறது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
News
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

குயிலனையும் மனைவியையும் பார்ப்பதற்காக அன்று காலையில் `சார்ளி’ கம்பவுண்ட் பக்கம் போயிருந்தான் நீதன். குயிலனின் அறைக்கதவு பூட்டியிருந்தது. எழுந்து வரும்வரைக்கும் பொறுத்திருக்கலாம் என்று தேநீர் போடுவதற்காக, முகாமின் பொதுச் சமையலறைப் பக்கம் போனான்.

முகாம் அப்போதுதான் சாதுவாக விடிந்துகொண்டிருந்தது. `சார்ளி’ கம்பவுண்டின் நடுவில் அமைந்திருந்த பரந்த புற்தரையிலிருந்து பனி விடைபெற்றுக்கொண்டிருந்தது. எவ்வளவு துயரிருந்தாலும் அவற்றைத் தூக்கத்தினால் மறைக்கத் தெரிந்த அகதிகள், இன்னமும் போர்வைக்குள்ளேயே கிடந்தார்கள். முதியவர் ஒருவர் பழைய பாண் துண்டுகளைப் பிய்த்து, பறவைகளுக்கு எறிந்து பசி தீர்த்துக்கொண்டு, ஓரமாய்க் குந்தியிருந்தார். அவரின் மறுகையிலிருந்த சிகரெட், அந்தக் குளிருக்கு விஸா கிடைத்த குதூகலத்தை இதயத்துக்குள் நிறைத்தபடியிருந்தது. சிறகுலத்தியபடி சில மக்-பை பறவைகள் பனிப்புற்களில் வாய் கழுவிக்கொண்டு, பாண் துண்டுகளைக் கொத்திக்கொண்டிருந்தன.

சமையலறைக்குள் காலடிவைத்த சில நொடிகளில், நீதன் அவளைக் கண்டான்.

வெந்நீரை எடுத்துக்கொண்டு, பால் எடுப்பதற்காகக் குளிரூட்டியின் பக்கம் திரும்பியபோது, அவள் அந்த அறையினுள் நுழைந்தாள். பார்த்தவுடனேயே இடது புருவத்துக்கு மேலிருந்த மச்சம் அவளைக் காட்டிக்கொடுத்துவிட்டது,

ராதாவேதான்.

இருவருக்குள் இடி அவிழ்ந்து வீழ்ந்தது. கல்கிஸைக் கடற்கரையில் பொலீஸ் ஜீப் வந்து நின்றது போன்ற அதிர்ச்சி.

சமையலறையின் முன்பாக வந்து நின்று ஒரு மணி நேரமாகப் பேசியபோது, ராதா எப்படியும் மூன்று தடவைக்கு மேல் அழுதாள். கிளிநொச்சி முதல் ஆஸ்திரேலியா வரையிலான பயண வரைபடத்தில், தானும் தனது ஒரே மகளும் அனுபவித்த எல்லாப் பாடுகளையும் நீதனிடம் கொட்டினாள்.

வார்த்துக்கொண்டுவந்த தேநீரை நீதனிடம் கொடுத்துவிட்டு, தான் இன்னொரு தேநீரைப் போட்டுக்கொண்டாள். முகாமின் தெற்கு மூலையிலிருந்த தகரக் கூடாரத்தடிக்கு நீதனை அழைத்துப்போனாள். போர் வெறித்த எல்லா கணங்களையும் கண்கள் கலங்கச் சொன்னாள். பேசியதைவிட அவள் அழுததுதான் அதிகம். முன்புபோல் இல்லாது இளைத்துப்போயிருந்தாள். ஆனாலும் கண்களில் அந்தத் `துறுதுறு’ போகவே இல்லை. கூடவே அந்தப் பேச்சும். சொல்லப்போனால், அவள் இவ்வளவு பேசி இப்போதுதான் நீதன் பார்த்தான்.

அப்போது தூக்கம் விட்டெழுந்த ராதாவின் மகள் அவர்களது அறையிலிருந்து கீழிறங்கி, முகாமின் நடுவில் பரந்துகிடந்த புற்தரையால் தனது பிஞ்சுக்கால்களை விசிறியபடி நடந்து வந்தாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

“அம்மா இஞ்ச நிக்கிறன். இஞ்ச வாங்கோ.”

ராதாவின் குரலைப் பிடித்துக்கொண்டு அந்தக் குட்டி தேவதை, ஒரு கையில் சிறியதொரு பொம்மையோடு நடந்துவந்தாள். அப்படியே ராகவன் மாஸ்டரைப் பார்த்ததுபோலவே இருந்தது. கனநாள்களுக்குப் பிறகு நீதனுக்கு நெஞ்சமெல்லாம் பூரிப்பினால் நிறைந்து வழிந்தது.

ராதாவைப் பார்த்துச் சிரித்துவிட்டு, குழந்தையைப் பார்த்தான். நேரே தாயிடம் வரவும், அவளைக் கைத்தாங்கலாக எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் ராதா. இளைத்துப்போயிருந்த ராதாவின் உருவத்தில், தற்போது புதிய வெளிச்சமொன்று சேர்ந்துவிட்டதைப்போல ஒளிர்ந்தாள் அவள். மகளின் நிழலில் ராதாவின் கண்கள் இன்னும் பிரகாசமாகச் சிரித்தன.

நீதனைக் காண்பித்து, மெதுவாக மகளின் காதுக்குள் ஏதோ சொல்லவும், அவள் தனது கூரான கண்களால் நீதனை இமைவெட்டாமல் பார்த்தாள்.

வெளித்தள்ளிய அவளது முயல் காதுகள் அப்படியே மீண்டும் மீண்டும் ராகவன் மாஸ்டரை நினைவுப்படுத்திக்கொண்டேயிருந்தன.

நீதன் புன்னகைத்தபடி அவளை நோக்கிக் கைகளை நீட்டினான்.

கேட்ட மாத்திரத்திலேயே அலைமீது வழுக்கிய நுரைபோல அவள் பாய்ந்து வந்தாள். நீதன் குளிர்ந்துபோனான். போர் தின்ற தனது தேசம் மீண்டும் உயிர்பெற்று ஈன்ற முதல் குழந்தைபோல, அவளைக் கைகளில் ஏந்தி, தோள்களில் போட்டான். குளிர்ந்த தோட்டா ஒன்று உள்ளே ஊடுருவிப் பாய்ந்ததுபோலிருந்தது. அவனது கைகளில் அவள் தொடர்ந்து சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் இறுக்கி அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டான் நீதன்.

அதுவரை சிரித்துக்கொண்டிருந்தவள், உடனே அவனை முறைத்துப் பார்த்தாள். நீதனின் மீசையைப் பிடித்து இழுத்து, தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தாள்.

ராதா, நீதனைப் பார்த்து ஞாபகங்கள் கலந்த வெட்கத்தோடு புன்னகைத்தாள்.

அப்போதுதான் நீதன் கவனித்தான், ராதா அதே மென் மஞ்சள் நிறத்தில் கழுத்தைச் சுற்றி கறுப்பு வளையம்வைத்துத் தைத்த இறுக்கமான சட்டையைத்தான் அணிந்திருந்தாள்.

அன்று முழுவதும் முகாமின் பரந்துகிடந்த புற்தரையெங்கும் ராதாவின் மகளோடு விளையாடித் திரிந்ததில் நேரம் போனதே தெரியவில்லை நீதனுக்கு. இரவும்கூட பத்து மணிவரை ராதாவோடு அந்தப் புற்தரையிலிருந்து பேசிவிட்டுத்தான் போய்ப் படுத்தான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

ஏதோ ஓர் உணர்வு அதிகாலையிலேயே அவனைப் படுக்கையினால் உந்தித் தள்ளியது. இனியும் தூங்க முடியாது என்ற முழு நம்பிக்கையோடு, குளித்துவிட்டு முகாமின் மூலைப்பக்கமாக உள்ள கூடாரத்தடிக்கு வந்தான் நீதன். வழக்கம்போல வானத்தைப் பார்க்காமல் ராதாவின் அறைப்பக்கமாகப் பார்த்தான்.

அனீஸாவின் ஞாபகமும், இரண்டு பிள்ளைகளின் நினைவுகளும் ஆழத்தில் இரைந்துகொண்டிருப்பது நீதனுக்குள் புதிய அலைவரிசையில் கேட்டது. ஒரு தேசத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று போராடிய நீதனுக்கு, போகும் தேசமெல்லாம் புதிய புதிய வாழ்க்கைகளும் விடுதலையைவிடச் சிக்கலான புதிர்களும் பரந்துகிடந்தன. ஏற்கவும் மறுக்கவும் முடியாத அவனது மனம், ஒவ்வொரு கணமும் சவால்களுக்குத் தயாராகத் தன்னை ஒப்புவிக்கவேண்டியிருந்தது.

இந்தோனேசியக் கடற்கரையின் புதைமணலில், விடைபெற்று வந்த அனீஸாவின் பிரிவும் அந்தக் கதகதப்பான அணைப்பின் வெப்பமும் இன்னமும் அணையாமல் உள்ளுக்குள் கூடுகட்டியிருப்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்துகொண்டிருந்த நீதனுக்கு,

ராதா சிறு கந்தகத் தணலாக நினைவில் திரவமாய் உருண்டு ஓடினாள். நீதனின் வாழ்க்கையை ஐந்தாறு வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றாள்.

கொழும்பின் நெடியையும், துப்பாக்கியின் வாடையையும் மீண்டும் நாசியில் தூவிவிட்டதுபோலிருந்தது. இழப்புகள் எல்லாவற்றையும்விட, மிகப்பெரியதொரு துரோக மேட்டின் மீது நின்றுகொண்டிருக்கிறோமோ என்ற உணர்வு, உயிரைப் பிசைந்தது. இரந்து நிற்கின்ற இந்தத் தேசத்துக்கு இந்த உணர்வுகள் எப்படித்தான் புரியப்போகின்றன என்ற கோபம் வேறு, நீதனின் தனிமையைச் சுரண்டிப் பார்த்தது.

ராகவன் மாஸ்டரின் நினைவுகள் மீண்டும் மீண்டும் நெஞ்சில் தாழ் மேகங்களாகத் தெரிந்தன.

ஆயுதங்களோடு புழங்கியதாலோ என்னவோ, அவனின் அருகாமையை நாடும் பெண்களும்கூட ஆயுத வாசனையோடுதான் வந்து சேர்கிறார்கள் என்பதையும் புன்னகையோடு அசைபோட்டுக்கொண்டான்.

தன்னை ஒருநிலைப்படுத்துவதற்கு அவன் போராடிக்கொண்டிருந்த அந்தக் காலையில், தகரக் கொட்டகைக்கு முன்னாலிருந்த உயரமான மேப்பிள் மரத்திலிருந்து மக்-பை பறவையொன்று அவனையே உற்றுப் பார்த்தது.

ராதாவின் அறைக்கு வெளியில், முகாமின் வெளிக்கொடியில் அந்த மென் மஞ்சள் நிறத்தில் கழுத்தைச் சுற்றி கறுப்பு வளையம் வைத்துத் தைத்த சட்டை துவைத்துக் காயப்போட்டிருந்தது. அதற்கு அருகில் காய்ந்துகொண்டிருந்த சின்னஞ்சிறிய பூப்போட்ட சட்டை இன்னும் அழகாக இருந்தது. அந்தப் பெரிய சட்டை இவ்வளவு காலமாகச் சொரிந்துகொண்டிருந்த எல்லா தொந்தரவுகளையும் இப்போது அந்தச் சிறிய சட்டை முழுதாக விழுங்கியிருந்தது. அந்தச் சட்டைக்கும்கூட முயல் காதுகள் முளைத்துவிட்டதைப்போலத் தெரிந்தது. அந்தச் சிறிய சட்டை இன்னும் இன்னும் அழகாகத் தெரிந்தது.

நீதன் அன்றிரவு கண்கள் நிறைய சொல்லி முடித்த இந்தக் கதைக்குப் பிறகு, அவன் என்னிடம் கேட்ட கேள்விதான் தூக்கிவாரிப்போட்டது.

``அண்ணே, ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையிட்ட என்னைப் பற்றி ராதா ஏதாவது சொல்லியிருப்பாளா?”

அகதிகள் வாழ்வு சூதாட்டம் போன்றது. எவ்வளவுதான் அப்பாவிகளாக அவர்கள் தேசம்விட்டு வந்தாலும், கரைசேருகின்ற தேசம் அவர்களை ஒரு வகை செய்துவிடுகிறது.

தஞ்சம் கோரி வரும் அவர்களை அரசுகள் ஆயுளுக்கும் பகடைக் காய்களாக உருட்டி விளையாட ஆரம்பிக்கிறபோது, அவர்களும், பதிலுக்கு தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். இந்த வரிசையில் ராதாவும் சேர்ந்திருப்பாளோ என்ற அச்சம் நீதனை ஒரே இரவில் ஆழமாகத் தொற்றிக்கொண்டது.

ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினர் கேட்கப்போகிற கேள்விகள் ஒவ்வொன்றிலும் ராதா ஒட்டிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு, முதல் நாள் இரவிலிருந்து நீதனை உருட்டி எடுத்தது. ராதா கிட்டத்தட்ட நீதனின் ஒட்டுமொத்த ஆயுத வாழ்க்கையினதும் தரமான சாட்சி. அவள் மாத்திரம் தனக்கு எதிராக வாய் திறந்திருந்தால், தனது ஆயுள் ஆஸ்திரேலியாவில் பல குழிகளில் வெட்டிப் புதைக்கப்படும் என்பது நீதனுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

தமிழ் அகதிகள், அவ்வப்போது தங்களது கதைகளை ஓய்வாக இருக்கும்போது, என்னிடம் வந்து தாங்களாகவே பகிர்ந்துகொள்வதுண்டு. தங்கள்மீது எனக்கொரு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்கு அப்பால், குடிவரவு அமைச்சு அதிகாரிகளிடம் தங்களது அனுபவத்தைச் சொல்வதற்கான ஒத்திகையாகக்கூட என்னிடம் ஒப்புவிப்பதுண்டு. நான் எந்த பதிலோ கருத்தோ சொல்லாமல், அவர்களது கதைகளைக் கேட்பதுண்டு. அந்தக் கதைகளில் எவ்வளவு விகிதாசாரத்தில் உண்மை, பொய் கலந்திருக்கிறது என்பதை, காலப்போக்கில் என்னாலேயே கண்டுபிடித்துவிடக்கூடியதாயிருந்தது.

ஆனால், நீதனின் கதை எனது மனதின் ஆழ் குழிகளில் போய் விழுந்தது. ஏனோ தெரியவில்லை. அவனது கதையிலிருந்த ஆன்மா, உண்மையை மாத்திரமே பேசுவதாக உணர்ந்தேன். உண்மையும் அதுவாகவே இருந்தது.

``விடுதலையை உண்மையிலேயே தேடிய ஆன்மாக்கள், ஒருபோதும் துரோகத்தை எண்ணாது நீதன்.

ராதா உனக்கு முன்னரே சாவை விரும்பிப்போனவள். அவளது வைராக்கியம் ஒரு கட்டத்தில் உன்னைவிடவும் உறுதியாயிருந்தது என்பது உனக்கே தெரியும்.

அப்படிப்பட்ட மனதிலிருந்து அகால எண்ணங்கள் ஒருபோதும் தோன்ற வாய்ப்பில்லை. மனசைப் போட்டுக் குழப்பாமல் போய்ப் படு.”

அன்றிரவு ஆறுதல் சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள், நீதனுக்கான சந்திப்பு சுமார் ஏழு மணி நேரமாக நடைபெற்றது. நீதனை முகாமின் பிரத்யேக சந்திப்பு அறைக்கு அழைத்துச் சென்ற ஆஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர், மொழிபெயர்ப்பாளர் சகிதம் வாரியெடுத்தார்கள்.

நீதனின் இந்தச் சந்திப்பு நடைபெற்று நான்கு நாள்களுக்குப் பிறகுதான், எனக்கு வேலையிருந்தது. அவனைக் கடைசியாகச் சந்தித்த இரவுபோல் அல்லாமல், அவனில் தளும்பிக்கொண்டிருந்த தடுமாற்றங்கள் நிறையவே வழிந்தோடியிருந்தன.

`ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே...’ என்பதுபோல கட்டைவிரலை உயர்த்திக் கேட்டேன். என்னுடன் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடி வந்தான்.

``அண்ண, சந்திப்பு நடந்து முடிஞ்சுது.”

“எல்லாம் ஓகேதானே”

நடந்துகொண்டே பேசினான்.

``ம்…” எதையோ சொல்லத் தடுமாறினான்.

``ராதாவைப் பற்றியும் கேட்டவங்கள்.” ஒருவிதக் குழப்பத்தோடும் அச்சத்தோடும் குரலைத் தாழ்த்திச் சொன்னான்.

``ராதா..?”

``அவள் எதுவும் என்னைப் பற்றிச் சொன்ன மாதிரித்தெரியேல்ல அண்ணே. ஆனால், எங்கள் இரண்டு பேரைப் பற்றியும் வேற யாரோ மாட்டிவிட்டிருக்கிறாங்கள்.”

என்னை அறியாமலேயே எனது நெற்றி சுருங்கியது.

(தொடரும்)