Published:Updated:

`ரஷ்யா - வடகொரியா எல்லை மாகாணத்தில் ஊரடங்கு!’ - சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

சீனா
சீனா ( AP )

சீனாவின் ஜிலின் மாகாணத்தின் ஷுலான் நகரில் புதிதாகப் பலருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நகரம் முடக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து முதன்முதலாக உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவிவிட்டது. ஆனால், சீனாவில் இது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். அங்கு அனைத்துவிதமான கடைகள், வணிக வளாகங்கள், சுற்றுலாப் பகுதிகள், பொழுதுபோக்கு இடங்கள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன என்ற தகவல்கள் வருகின்றன.

சீனா
சீனா
AP

இருந்தும் முகமூடிகள் அணிவது, தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனாவிலிருந்து விடுபட்ட சீன மக்கள் சற்று நிம்மதியாக இருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் அங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஷ்யா மற்றும் வட கொரியாவுடன் தங்கள் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள சீனாவின், ஜிலின் (Jilin) என்ற மாகாணத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

`கொரோனா எங்கள் பலவீனத்தை உணர்த்திவிட்டது’ - தங்கள் பிழையை ஒப்புக்கொண்ட சீனா

ஒரு மாதத்துக்குப் பிறகு கடந்த 2 நாள்களாக சீனாவில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் அங்கு 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 பேர் ஜிலின் மாகாணத்தில் உள்ள ஷுலான் பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கு 45 வயதான ஒரு பெண்ணுக்கு முதலில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவரின் மூலம்தான் மற்றவர்களுக்குப் பரவியதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு எப்படி வைரஸ் வந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா
சீனா
AP

ஷுலானில் அதிக வைரஸ் தொற்று இருப்பதால் அந்த நகரம் முழுவதும் மீண்டும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பெரிய உணவகங்கள், மால்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், அந்த நகரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் நடமாடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் நகரம் முழுவதும் அனைத்துவித போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த நகரத்தில் வைரஸின் நிலை பற்றி தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு