Published:Updated:

`48 மணிநேரத்தில் சீரானது !’- கொரோனா நோயாளியைக் குணமாக்கியதாக அறிவித்த தாய்லாந்து மருத்துவர்கள்

தாய்லாந்து
தாய்லாந்து ( Gemunu Amarasinghe )

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மருந்தைக் கலந்து வழங்கியதால் தற்போது அவரது வைரஸ் தொற்று குணமாகிவிட்டதாகத் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

`கொரோனா’ சமீபகாலமாக உலகை அச்சத்தில் உறையவைக்கும் ஒரு பெயர். சீனாவின் வுகான் நகரில் உருவான இந்த வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை சீனாவில் 361 பேர் உயிரிழந்துள்ளனர், 14,000 பேர் வைரஸ் அறிகுறிகளுடன் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.

தாய்லாந்து
தாய்லாந்து

இந்தியாவைப் பொறுத்தவரைக் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சீனாவிலிருந்து தாயகம் திரும்பிய பின்புலங்களைக் கொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சீன எல்லையைத் தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

`விமானத்தில் ஒரே ஒரு சென்னை மாணவி; நடுக்கடலில் தவிக்கும் கப்பல்!'- உலக மக்களை உறையவைக்கும் கொரோனா

இப்படி மொத்த உலகமும் கொரோனா வைரஸைக் கண்டு அச்சமடைந்திருக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் சற்று மன நிம்மதியைத் தரும் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளனர் தாய்லாந்து மருத்துவர்கள். தாய்லாந்தைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பிற நாடுகளைப் போலவே அங்கும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தாய்லாந்து
தாய்லாந்து

இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 71 வயது பெண் நோயாளி ஒருவருக்குத் தாய்லாந்து மருத்துவர்கள் கொடுத்த மருந்தால் வைரஸ் தொற்று குணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேங்காக் மருத்துவர் கிரியாங்சாக் அதிபோர்ன்வனிச் (Kriangsak Atipornwanich), ``கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டிக்குக் கடந்த சில நாள்களாகத் தீவிர சிகிச்சையளித்து வருகிறோம். முதலில் அவருக்கு ஹெச்ஐவி தடுப்பு மருந்துகள் மட்டுமே கொடுத்து வந்தோம்.

`செர்னோபில் ஹீரோக்கள்; தற்கொலைப் படை!’ - உயிரைப் பணயம் வைக்கும் சீன மருத்துவர்களின் பயணம் #corona

ஆனால், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பிறகு ஹெச்ஐவி மற்றும் ஃபுளூ தொற்றுக்கான மருந்து ஆகிய இரண்டையும் இணைத்துக் கொடுத்தோம். அடுத்த 48 மணி நேரத்தில் அந்த மூதாட்டியின் உடல்நிலை சீராகிவிட்டது. இது எங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது. முதலில் படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது எழுந்து அமர்கிறார், பேசுகிறார்.

தாய்லாந்து
தாய்லாந்து

முன்னதாக அவருக்குச் சோதனை செய்தபோது கொரோனா வைரஸ் பாசிட்டிவாக இருந்தது. ஆனால், நாங்கள் மருந்து கொடுத்து சற்று குணமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் எடுத்த சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது. அந்த மூதாட்டியின் சுவாசப் பகுதியில் எந்த வைரஸ் தொற்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குநர் டாக்டர் ஆண்டனி ஃபாசி கடந்த வாரம் சி.என்.என் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், `கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க தற்போது நிரூபிக்கப்பட்ட பயனுள்ள மருந்துகள் எதுவும் இல்லை’ எனக் கூறியிருந்தார். வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட அதே மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த மருந்துகள் பயனளிக்கிறதா அல்லது வெற்றிகரமானதா என்பதைப் பற்றிய தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பின் செல்ல