Published:Updated:

`எங்கள் ஆட்சி இல்லை; இருந்தும் மகிழ்ச்சியாக உள்ளது!’ -பின்லாந்தை ஆளும் 4 இளம்பெண்கள்

பின்லாந்தின் புதிய பிரதமராக சன்னா மரியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அங்கு ஐந்து பெண்கள் இணைந்து ஆட்சி செய்யவுள்ளனர்.

பின்லாந்து பெண் தலைவர்கள்
பின்லாந்து பெண் தலைவர்கள்

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சமூக ஜனநாயக கட்சி, இடதுசாரி கூட்டணிக் கட்சி, மத்திய கட்சி, கிரீன் லீக், ஸ்வீடிஸ் மக்கள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. அங்கு பிரதமராக இருந்த ஆன்டி ரின்னே (Antti Rinne) தபால்துறை வேலைநிறுத்தத்தைச் சரிவரக் கையாளவில்லை என்பதால் கடந்தவாரம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அதே கட்சியைச் சேர்ந்த சன்னா மரியா என்ற பெண் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சன்னா மரியா
சன்னா மரியா

34 வயதான சன்னா மரியா, உலகின் இளவயது பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார். பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகத் தேர்வாகியுள்ள சன்னாவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. பின்லாந்தின் பிரதமராக சன்னா மரியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்நாடு முழுவதும் பெண்கள் மட்டுமே வழிநடத்தும் அரசாக மாறியுள்ளது.

அங்கு ஆளும்கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களும் பெண்கள் என்பதால் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர். அதிலும், அந்த ஐந்து பேரில் 4 பெண்கள் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது தனிச் சிறப்பு. தங்கள் நாட்டுப் பெண் ஆட்சியாளர்கள் பற்றி பின்லாந்தின் முன்னாள் பிரதமர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

``நாட்டை ஆளும் கூட்டணியில் என் கட்சி இல்லை, ஆனால், ஐந்து கட்சிகளைச் சேர்ந்த பெண்களும் இணைந்து நாட்டை ஆளவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இது, பின்லாந்து ஒரு நவீன மற்றும் முற்போக்கான நாடு என்பதைக் காட்டுகிறது. அரசாங்கத்திலும் பெரும்பான்மையாக பெண்களே உள்ளனர். ஒருநாள், பாலினம் என்பது அரசாங்கத்தில் பெரிய விஷயம் இல்லை என மாறும். அதற்கு இவர்கள் அனைவரும் முன்னோடிகளாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ட்விட்டர் பதிவு சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சன்னா மரியா - பின்லாந்து பிரதமர்

2010-ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்த சன்னா மரியா 2012-ம் ஆண்டு அக்கட்சியின் இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு தன் ஊரில் நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்றதன் மூலம் முழுநேர அரசியலுக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து, 2015-ம் ஆண்டு பின்லாந்தின் நாடாளுமன்றத்தில் கால்பதித்த அவர், இந்த ஆண்டு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தொடர்ந்து, தன் 34 வயதில் பின்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லி ஆண்டர்சன்
லி ஆண்டர்சன்

லி ஆண்டர்சன் - இடதுசாரி கூட்டணிக் கட்சி

1987-ம் ஆண்டு பிறந்த லி ஆண்டர்சன், சமூக அறிவியல் மற்றும் சட்டம் பயின்றுள்ளார். தன் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த இவர் 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை இடதுசாரி இளைஞர் கூட்டணியின் தலைவராக இருந்தார். பின்னர் 2015 ஆண்டு இடதுசாரி கூட்டணிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நடக்கும் ஆட்சியில் 32 வயதான ஆண்டர்சன் கல்வித்துறை அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார்.

`27 வயதில் அரசியல் என்ட்ரி; 34 வயதில் நாட்டின் தலைவர்!' - உலகின் இளம் பிரதமராகிறார் சன்னா மரின்

மரியா ஓஹிசலோ - கிரீன் லீக் கட்சி

மரியா ஓஹியா ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருந்து விளையாட்டு ஆர்வலராகச் செயல்பட்டு வந்துள்ளார். பின்நாள்களில் ஜிம்னாஸ்டிக்குடன் சேர்த்து சமூக அறிவியலும் கற்றுத் தேர்ந்து 2008 -ம் ஆண்டு கிரீன் லீக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். 34 வயதான இவர் தற்போது கிரீன் லீக் கட்சியின் தலைவராகவும் பின்லாந்தின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

கேட்ரி குல்முனி - பின்லாந்து மத்திய கட்சி

சமூக அறிவியலில் பட்டம் பெற்றுள்ள கேட்ரி, மத்திய கட்சி மூலமாக 2015-ம் ஆண்டு ஃபின்லாந்தின் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். 32 வயதான இவர் தற்போது ஃபின்லாந்தின் துணைப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அந்நாட்டின் நிதித்துறை அமைச்சராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.

அன்னா மஜா ஹென்ரிக்சன் - ஸ்வீடிஸ் மக்கள் கட்சி

சட்டம் படித்துத் தேர்ந்த அன்னா, 1996-ம் ஆண்டு ஸ்வீடிஸ் மக்கள் கட்சியின் உறுப்பினராக இணைந்துள்ளார். பின்னர் 2007-ம் ஆண்டு முதல் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2011-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் சட்டத்துறை அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். பின்னர் 2016-ம் ஆண்டு கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வீடிஸ் மக்கள் கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.