உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா நிற்கவில்லை என்பதையும் கடந்து, இந்தியா வர்த்தகத் தொடர்பை அதிகப்படுத்தியது. இதனால் இந்தியாமீது அமெரிக்கா அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. சமீபத்தில்கூட மனித உரிமைமீறல் இந்தியாவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில், இந்தியா அதற்கு பதிலளித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, ``உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கான முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது” எனக் குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில், ``மத்திய அரசின் அலட்சியப் போக்கால் 40 லட்சம் இந்தியர்கள் வரை உயிரிழந்துள்ளார்கள். இது குறித்து ஏற்கெனவே நான் தெரிவித்துள்ளேன்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று பொய் சொல்கிறார். அவர் உண்மை பேசுவதில்லை. அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்” எனப் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்திக்கும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கும் பதிலளிக்கும்விதமாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உலக சுகாதார அமைப்பு சில நாடுகள் (Tier-1) தரும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான இறப்பு விவரங்களை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் இந்தியா போன்ற சில நாடுகளிடம் (Tier-2) கொரோனா இறப்பு விகிதத்தைக் கணிதவியல் கோட்பாடு அடிப்படையில் அளிக்க வேண்டும் எனக் கேட்கிறது. உலக சுகாதார அமைப்பு ஒரே விஷயத்தை இரண்டு வகையில் பிரித்துப் பார்க்கிறது.
இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டில் கணிதவியல் முறையில் கொரோனா மரணங்களைக் கணக்கிடுவது என்பது சரியான நடைமுறையல்ல. மேலும், கொரோனா மரணங்களைக் கணக்கிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் நடைமுறையை இந்தியா ஏற்றுக் கொள்ளவுமில்லை” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.