Published:Updated:

`1,292 சதுர அடி மனித தோல் தேவை!’ -எரிமலை வெடிப்பால் பாதித்தவர்களுக்காகப் போராடும் நியூசிலாந்து

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 1,292 சதுர அடி மனித தோல் தேவைப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா இடமான வெள்ளைத் தீவில் அமைந்துள்ள எரிமலை, கடந்த திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் வெடித்துள்ளது. எரிமலை வெடிப்பின்போது அந்தப் பகுதியில் சுமார் 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு
AP

தீவில் சிக்கிய மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்தத் தீவு முழுவதும் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் படுகாயமடைந்தவர்களின் நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மருத்துவமனைகளில் உள்ளவர்கள் அனைவரும் 30% தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் எரிமலை வெடிப்பின் புகையைச் சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், `எரிமலை வெடிப்பினால் படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மனித தோல் தேவை' என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள வெள்ளைத் தீவு பகுதியின் சுகாதார அதிகாரி பீட்டர் வாட்சன், ``எரிமலை வெடிப்பினால் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பல சதுர மீட்டர் அளவிலான மனித தோல்கள் தேவைப்படுகின்றன. நியூசிலாந்தில் இருந்து கிடைக்கும் தோல்கள் போதுமானதாக இல்லை. எனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் 1,292 சதுர அடி தோல்கள் தேவை என உதவி கேட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள்
காயமடைந்தவர்கள்
AP

பொதுவாக தீக்காயமடைந்தவர்களின் தோல் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும், எனவே மூளைச் சாவு அடைந்தவர்களின் கனமான தோல் பகுதியை எடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்துவது வழக்கம். எனவே, எரிமலை வெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்குத் தோல் மாற்றம் செய்வதற்காகவே நியூசிலாந்து அரசு பிற நாட்டிடம் தோல் கேட்டுள்ளது. திசு வங்கி, உடல் பாகங்கள் தானம் செய்பவர்கள், இறந்த பிறகு தங்கள் உடலைத் தானம் செய்பவர்கள் போன்றவர்களிடமிருந்து இந்த தோல் சேகரிக்கப்படும்.

``முகமூடி இல்லாமல் வெளியே வராதீர்கள்!" - எரிமலை வெடிப்பால் தவிக்கும் நியூசிலாந்து மக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே தீவில் சுற்றுலாவுக்குச் சென்ற ஹாப்கின்ஸ் என்பவர் எரிமலை வெடிப்பில் சிக்கி அதிர்ஷ்டவசமாகக் குறைந்த காயங்களுடன் மீண்டுள்ளார். தற்போது அவர், வெள்ளைத் தீவில் சிக்கிய பிற பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

எரிமலை விபத்து பற்றிப் பேசியுள்ள அவர், ``நான் என் மகளுடன் வெள்ளைத் தீவு பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றேன். நாங்கள் மலையின் கீழ்ப்பகுதியில் நின்றிருந்தபோது எரிமலையிலிருந்து புகை வந்தது. உடனடியாக அடுத்த சில மணி நேரங்களில் நாங்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டோம்.

எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு
AP

ஆனால், நிறைய மக்கள் தீவில் உள்ள கடல் பகுதியிலும் கரையிலும் விளையாடிக்கொண்டிருந்தனர். மேலும், அங்கு வந்தவர்கள் பெரும்பாலும் சிறிய கால்சட்டையும் டி-சர்ட்டும் அணிந்திருந்தனர். அதனால் அவர்களின் உடலில் எளிதில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக்காயம் ஏற்பட்டதும் பலர் அந்த வலியைத் தாங்க முடியாமல் கதறிய சத்தம் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு