அருணாச்சலப் பிரதேசத்தின், தவாங் எல்லைப் பகுதியில் டிசம்பர் 9-ம் தேதியன்று சீன ராணுவப் படை அத்துமீறி நுழைந்ததாக, இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்குமிடையே மோதல் நடைபெற்றது. இது பெரும் பேசுபொருளானது. இது குறித்து உரிய பதில் அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின. அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ``சீனாவுடனான மோதலில் இந்திய, சீன ராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் சீனாவின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது" என மக்களவையில் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், இத்தகைய மோதல் போக்கு குறித்து கருத்து தெரிவித்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா, "சீனாவைவிட இந்தியாவையே நான் அதிகம் விரும்புகிறேன். இது வாழச் சிறந்த இடம். சீனாவுக்குத் திரும்புவதில் எந்தப் பயனும் இல்லை.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நான் இந்தியாவில் காங்க்ராவில் இருக்க வேண்டும் என விரும்பினார். எனவே, எனது நிரந்தரக் குடியிருப்பு இந்தியாவில்தான். தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய - சீனப் படைகள் அவ்வப்போது மோதிவரும் நிலையில், இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசித் தீர்க்க வேண்டும்" என்று கூறினார்.