Published:Updated:

US Election: `நிறவெறிக்கு எந்தத் தடுப்பூசியும் கிடையாது!’ - ட்ரம்பை விமர்சித்த கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் ( AP | Carolyn Kaster )

``நிறவெறிக்கு எந்தத் தடுப்பூசியும் இல்லை. ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காகவும், பிரியென்னா டெய்லருக்காகவும், நமது குழந்தைகளுக்காகவும், நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காகவும் நாம் உழைக்க வேண்டும்’’ என்று கமலா ஹாரிஸ் பேசினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அதேபோல், துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் தேசிய அளவிலான மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த மாநாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடென் மற்றும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஆகியோரை ஆதரித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் பேசினர்.

கமலா ஹாரிஸ், ஜோ பிடென்
கமலா ஹாரிஸ், ஜோ பிடென்
AP | Carolyn Kaster

ஒபாமா, தனது உரையில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். `அதிபர் பதவிக்கான தகுதியை ட்ரம்ப் வளர்த்துக்கொள்ளவில்லை’ என்று குறிப்பிட்ட ஒபாமா, `உங்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பிடுங்க அனுமதிக்காதீர்கள்’ என மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், வேட்பாளராக, தான் தேர்வு செய்யப்பட்டதையடுத்து நடத்திய ஏற்புரையில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

கமலா ஹாரிஸ் பேசுகையில், ``நிறவெறிக்கு எந்தத் தடுப்பூசியும் இல்லை. ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காகவும், பிரியென்னா டெய்லருக்காகவும் (நிறவெறிக்குப் பலியான அமெரிக்கர்கள்), நமது குழந்தைகளுக்காகவும், நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். `சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற உறுதியை நிறைவேற்ற நாம் உழைக்க வேண்டியிருக்கிறது. நம் அனைவருக்கும் விடுதலை கிடைத்தால் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெற்றதாகக் கருத முடியும்’’ என்று அதிபர் ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்தார்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
AP | Carolyn Kaster

அதேபோல், கமலா ஹாரிஸ் தனது பேச்சில் மேரி சர்ச் டெர்ரெல், மேரி மெக்லியோடு, ஃபேனி லூ ஹாமர், டயானா நாஷ், கான்ஸ்டன்ஸ் பேக்கர் மோட்லி, ஷிர்லி சிஷோம் உள்ளிட்ட பெண் வாக்குரிமைக்காகப் போராடிய பல்வேறு பெண் சமூக செயற்பாட்டாளர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். ``இவர்களின் கதைகள் நமக்கு அடிக்கடி சொல்லப்படுவதில்லை. ஆனால், இவர்களின் தோள்களின் மீதுதான் நாம் இன்று நின்றுகொண்டிருக்கிறோம்’’ என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.

`அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர்' - யார் இந்த கமலா ஹாரிஸ்?

அவர் தனது பேச்சில், தன் தாய் ஷியாமளா கோபாலன், தனது மகளின் சாதனையைப் பார்க்க உயிருடன் இல்லை என்று கூறி நெகிழ்ந்தார். புற்றுநோய் ஆராய்ச்சியாளரான கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா, தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர். அவர், புற்றுநோய் தாக்கத்தாலேயே கடந்த 2008-ம் ஆண்டு உயிரிழந்தார். தாய் ஷியாமளா குறித்து பேசுகையில்,`` `மற்றவர்களுக்கு உதவுவது நமது வாழ்வுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கும்’ என்று எனது தாய் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இந்தத் தருணத்தை நேரில் பார்க்க அவர் இன்று நம்முடன் இல்லை. ஆனால், மேலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பார்’’ என்று கூறி கண்கலங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு