Published:Updated:

`படத்தை விடுத்து எப்படி குழந்தைகளைக் காப்பாற்றலாம்?’ - வடகொரியப் பெண்ணுக்குத் தண்டனை விதித்த அரசு

வட கொரியா தலைவர்கள்
வட கொரியா தலைவர்கள்

வட கொரியப் பெண்மணி ஒருவர் எரியும் தன் வீட்டிலிருந்த அந்நாட்டுத் தலைவர்கள் புகைப்படத்தை விடுத்து குழந்தைகளைக் காப்பாற்றியதால் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு, வட கொரியா நாட்டை ஆண்டுவருகிறது. அந்நாட்டின் மறைந்த தலைவர்களான இரண்டாம் கிம் சங், கிம் ஜோங் இல் போன்றவர்களின் புகைப்படத்தைக் குடிமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்பது சட்டம். இதை அவ்வப்போது கண்காணிப்பதற்குக் காவலர்களையும் நியமத்திருந்தார், அதிபர் கிம் ஜாங் உன். அந்நாட்டு எல்லைப் பகுதிக்கு உட்பட்ட ஹெர்மிட் இராஜிய விதிகளின் படி, கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்மக்கள் அனைவரையும் ஒன்றுபோலவே நடத்த வேண்டும். அவர்களின் புகைப்படத்திற்கு ஏதேனும் ஆனால் கூட, அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

வடகொரியா
வடகொரியா

வட ஹேம்ஹாங் மாகாணத்தில் ஒன்சாங் கவுண்டி எனும் பகுதி சீன எல்லைக்கு அருகில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி இப்பகுதியில் இரண்டு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அந்நேரம் பார்த்து வீட்டில் யாரும் இல்லை குழந்தைகள் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்துள்ளன. இந்த விஷயம் அறிந்தவுடன் உடனடியாக வீட்டுக்கு விரைந்த குடும்பத்தினர், குழந்தைகளைக் காப்பாற்றுவதில் கண்ணாய் இருந்து, அனைவரையும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் வீடு எரிந்துவிட்டது.

அதில் ஒரு வீட்டோடு சேர்ந்து, அந்நாட்டுத் தலைவர்கள் புகைப்படங்களும் எரிந்துள்ளன. இந்தப் புகைச்சலை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது அந்நாட்டு அரசு. உடனே புகைப்படத்தை எரியவிட்ட குற்றத்திற்காக அந்த வீட்டுப் பெண்மணியைக் கைதுசெய்துள்ளனர். பின்னர் அவர் மாகாணக் காவல் அமைச்சகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வடகொரியா
வடகொரியா

ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுங்காவல் தண்டனையோடு சிறையில் கடினமான வேலையும் தரப்படும். ஜாமீனில் வெளிவர முடியாதபடி நெடுநாள்கள் சிறையிலேயே இருக்க வேண்டிவரும். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால், தன்னுடைய குழந்தைகளைச் சந்திக்க மருத்துவமனை கூட செல்ல முடியாத நிலையில் உள்ளார் அந்தத் தாயார்.

Vikatan

காயம் ஏற்பட்ட அந்தக் குழந்தைகள் மருத்துவம் பார்க்கக்கூட ஆளில்லாமல் தனியாகத் தவித்து வருகின்றனர். அருகில் வசிப்பவர்கள் உதவி செய்ய முன்வந்தாலும், இதை அரசியல் குற்றமாகக் கருதும் அந்நாட்டு அரசு. 2005 ஆம் ஆண்டு இந்நாட்டை விட்டுத் தப்பிவந்த ஜுன்-யோ-சங், "எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒரு வீடு நன்றாக எரிந்திருந்தது. அதில் உடல் கருகிய நிலையில் ஒரு குழந்தை, தன் கையில் அந்த இரு தலைவர்களின் புகைப்படத்தை இறுக்கமாகப் பிடித்திருந்தது. இந்த மாதிரியான சம்பவங்கள் வட கொரியாவிற்கே உரித்தானது" என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கிம்ஜாங் உன்
கிம்ஜாங் உன்

வடகொரியாவில் இப்படி நடப்பது இது முதல்முறையல்ல, ஓட்டோ வார்ம்பியர் என்ற அமெரிக்க மாணவன், வடகொரியாவில் உள்ள பியாங்காங் மாகாணத்திற்குச் சென்றிருந்தான். அப்போது தவறுதலாக இரண்டாம் கிம் சங் பெயர் அச்சிட்டிருந்த போஸ்டரைத் தள்ளிவிட்டதற்கு 15 ஆண்டுகள் சிறைவாசம் அளிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு ஹான் ஹியான் காங் என்ற 14 வயதுச் சிறுமியின் வீடு வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது அந்த இரு தலைவர்களின் படத்தைக் காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரையே தியாகம் செய்துவிட்டாள் அந்தச் சிறுமி. அதற்குப் பரிசாக அவள் படித்த பள்ளிக்கு அவள் பெயரையே சூட்டி கௌரவப்படுத்தியது அந்நாட்டு அரசு.

வடகொரியா
வடகொரியா

புகைப்படங்கள் தொங்கவிடுவது தொடர்பாகவே அங்கு பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பொதுவாக அவற்றை வைக்க வேண்டிய இடம், வைக்கப்பட வேண்டிய உயரம் ஆகியவை கூட அரசின் சட்டத்தில் உள்ளன. ஆம், யாருக்கும் எட்டாத இடமாக இருக்க வேண்டுமாம். அதாவது யாருடைய தலையும் அவர்களின் புகைப்படத்தைத் தாண்டிவிடக் கூடாது. சிறு அளவு தூசி இருந்தாலும், அபராதத்துடன் கூடிய தண்டனை அளிக்கப்படும். ஒரு புகைப்படத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட, தன் நாட்டு மக்களுக்குக் கொடுப்பதில்லையே என விசயம் தெரிந்த வேற்று நாட்டவர்கள் பொங்கிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு