Published:Updated:

`சீரியஸ்ஸாதான் பேசுறீங்களா மிஸ்டர்.ட்ரம்ப்...?’ - அதிர்ச்சியில் கிரீன்லாந்து

தினேஷ் ராமையா

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்க, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகின.

Donald Trump
Donald Trump ( AP )

டென்மார்க்கை ஒட்டிய வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பகுதிகளுக்கு இடையில் உள்ள தீவு, கிரீன்லாந்து. பொருளாதாரரீதியாக டென்மார்க்கை சார்ந்திருந்தாலும், கிரீன்லாந்து தன்னாட்சி அதிகாரம்கொண்டது. அதன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை டென்மார்க் பார்த்துக்கொள்ளும். டென்மார்க்கின் கோபன்ஹேஹனில், வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்துகொள்ள இருக்கிறார். அவர், தனது கோபன்ஹேஹன் பயணத்தின்போது, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்களையும் நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார்.

Greenland
Greenland
AP

இந்த நிலையில், கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவதுகுறித்து தன்னுடைய ஆலோசகர்களுடன் ட்ரம்ப் விவாதித்ததாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவலை முதன்முதலில் அமெரிக்க பத்திரிகையான 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' வெளியிட்டது. ட்ரம்ப் பேசியதைக் கேட்ட ஆலோசகர்கள் சிலர், அவர் விளையாட்டாகக் குறிப்பிடுவதாக வாய்விட்டு சிரித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஆலோசகர்கள் சிலர் அதுகுறித்து தீவிரமாக விவாதித்ததாகவும் தெரியவருகிறது.

ட்ரம்ப்பின் டென்மார்க் பயணத்துக்கு முன்பாக இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தங்கள் நாட்டை விலைக்கு வாங்குவதுகுறித்து அமெரிக்க அதிபர் ஆலோசனை நடத்துவதாக வெளியான தகவலை கிரீன்லாந்து மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ரசிக்கவில்லை.

Donald Trump
Donald Trump
AP

இதுகுறித்து 'தி ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் பேசிய கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன் லோன் (Ane Lone), ``எங்கள் கதவுகள் வியாபார வாய்ப்புகளுக்காக எப்போதும் திறந்திருக்கும். ஆனால், எங்கள் நாடு விற்பனைக்கல்ல’’ என்று தெரிவித்திருக்கிறார்.

``கிரீன்லாந்து மக்களில் பெரும்பலானோர், அமெரிக்காவைவிட டென்மார்க்குடன் இருப்பதையே விரும்புவார்கள் என்று நம்புகிறேன்’’ என கிரீன்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய Inuit Ataqatigiit கட்சியின் டென்மார்க் எம்.பி ஆஜா செம்னிஸ்ட் லார்ஸன் (Aaja Chemnitz Larsen) கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து டென்மார்க் பிரதமர் மெட் ஃப்ரிடெரிக்ஸன் (Mette Frederiksen) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெப் கோஃபோட் (Jeppe Kofod) ஆகியோர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல், கோபன்ஹேஹனில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்த விவகாரம், சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ட்ரம்ப் பேசியதைக் கேட்ட ஆலோசகர்கள் சிலர், அவர் விளையாட்டாகக் குறிப்பிடுவதாக வாய்விட்டு சிரித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஆலோசகர்கள் சிலர் அதுகுறித்து தீவிரமாக விவாதித்ததாகவும் தெரியவருகிறது.
-

செப்டம்பர் மாதத்தில் கோபன்ஹேஹன் செல்லும் ட்ரம்ப், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அந்த சந்திப்புகளின்போது, ஆர்ட்டிக் பிரதேசம் குறித்தும் பருவநிலை மாறூபாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது குறித்து அதிகாரபூர்வமாக ட்ரம்ப் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அந்த சந்திப்புகளின்போது, இதுகுறித்து பேசப்படுமா என்பது குறித்தும் தகவல் இல்லை.