Published:Updated:

Lebanon:`போராட்டக்களமான வீதிகள்; வன்முறை!’- என்ன நடக்கிறது லெபனானில்?

லெபனான் மக்கள்

``எங்களுக்கு உதவி செய்வது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை நாங்கள் வழங்கினோம். ஆனால், அவர்கள் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை"

Lebanon:`போராட்டக்களமான வீதிகள்; வன்முறை!’- என்ன நடக்கிறது லெபனானில்?

``எங்களுக்கு உதவி செய்வது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை நாங்கள் வழங்கினோம். ஆனால், அவர்கள் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை"

Published:Updated:
லெபனான் மக்கள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துறைமுகக் கிடங்கில் எந்தவித பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள்தான், இந்த பயங்கர விபத்துக்கு காரணம் என பின்னர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து, தற்போது பல நாடுகளும் தங்களிடம் உள்ள அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

பெய்ரூட் வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சொல்லப்போனால், ஒரு நகரமே இந்த விபத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர பல மாதங்கள் அந்நாட்டுக்கு தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

லெபனான்
லெபனான்

பெய்ரூட்டின் சாலைகளில் 10,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மிகவும் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த போராட்டத்தில், மக்கள் பலரும் இணைந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் வெறும் வெடி விபத்தை மட்டும் மையப்படுத்தி நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்புகள் குறைவு, அரசின் ஊழல், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாகவும் மக்கள் தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். போராட்டக்களங்கள் வன்முறைக் களமாகவும் மாறியுள்ளது. இதனால், அந்நாட்டின் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளனர். போராட்டக்காரர்களும் கற்களால் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போராட்டம் தொடர்பாக லெபானான் மக்கள் பேசும்போது, ``எங்களுக்கு உதவி செய்வது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை நாங்கள் வழங்கினோம். ஆனால், அவர்கள் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை. நாங்கள் அனைவரையும் வெளியேற்ற விரும்புகிறோம்" கூறியுள்ளனர்.

லெபனான் கிறிஸ்தவ மக்களின் தலைவர் அல் ராய், ``நிர்வாக முறையை மாற்ற வேண்டும். அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மட்டும் போதாது. லெபனான் மீண்டு எழ அவர்களால் உதவ முடியவில்லை என்றால் அனைவரும் பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி யூனிஸ், ``காவல்துறையினர் என்னை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அரசாங்கம் முழுவதையும் மாற்றாதது வரை இந்த தாக்குதல்கள் எங்களை நிறுத்தப்போவதில்லை. எங்களை ஒடுக்கும் ஒவ்வொரு தலைவரும் தூக்கிலப்பட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

போராட்டம்
போராட்டம்

வழக்கறிஞர் மாயா ஹபில், `மக்கள் வீதிகளில் தூங்க வேண்டும். அரசாங்கம் வீழ்ச்சி அடையும் வரை அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களின் ஒருவரான மரவுன் சேகதி என்பவர், ``குவைத்தில் 15 ஆண்டுகள் வேலை செய்து பணத்தை சேர்த்து லெபனானில் கிஃப்ட் ஷாப் ஒன்றைத் தொடங்கினேன். ஆனால், அந்தக் கடை வெடி விபத்தில் அழிந்துவிட்டது. ஆட்சியாளர்கள் விலகாதது வரை எதுவும் மாறப்போவதில்லை" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது வரை சில அமைச்சர்கள் அரசின் மீதான அதிருப்தி காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி விலகிய லெபனான் சுற்றுசூழல் அமைச்சர்,``நாட்டில் சீர்திருத்தங்களை செய்வதற்கான பல வாய்ப்புகளை அரசாங்கம் இழந்துவிட்டது" என்று கூறியிருக்கிறார்.

போராட்டக்காரர்கள்
போராட்டக்காரர்கள்

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் பதவி விலகியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள் வன்முறை சம்பவங்களால் பாதிப்படைந்துள்ளனர். ஒரு காவலர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், மக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து இரவு, பகலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், லெபனானில் ஆட்சி கவிழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism