Published:Updated:

தாலிபன்: முக்கியப் பங்காளி சீனா; இந்தியாவுக்கு எந்த வகையில் பின்னடைவு?

இந்தியா - சீனா

ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றியிருப்பதால், முந்தைய அரசை நம்பி இந்தியா ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பெரும் தொகையை இழந்து நிற்கிறது. அதேசமயம் சீனா, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தாலிபன்களுடன் உறவைத் தொடங்கியிருக்கிறது. பெரிய அளவில் முதலீடு செய்யவிருக்கிறது.

தாலிபன்: முக்கியப் பங்காளி சீனா; இந்தியாவுக்கு எந்த வகையில் பின்னடைவு?

ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றியிருப்பதால், முந்தைய அரசை நம்பி இந்தியா ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பெரும் தொகையை இழந்து நிற்கிறது. அதேசமயம் சீனா, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தாலிபன்களுடன் உறவைத் தொடங்கியிருக்கிறது. பெரிய அளவில் முதலீடு செய்யவிருக்கிறது.

Published:Updated:
இந்தியா - சீனா

ஆப்கனைவிட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிக்கொண்டிருந்த சமயம்... தாலிபன்களின் காபூல் நகரைக் கைப்பற்றும் இறுதிப்போர் உச்சத்தில் இருக்கும்போதே, தாலிபன்களின் ஒன்பது தலைவர்களை தங்கள் நாட்டுக்கே அழைத்துப்பேசியது சீனா. தாலிபன்கள், தாங்கள் சீனாவையே நம்பியிருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்தார்கள். பின்னர், தாலிபன்கள், ஆப்கன் முழுவதையும் கைப்பற்றிய உடனே தாலிபன்களின் ஆட்சியை தாராளமாக ஏற்கிறோம் என்று சொல்லி, முதல் ஆளாக முன்னின்றது சீனா. அந்தவகையில் இப்போது, `சீனாதான் எங்களின் முக்கியப் பங்காளி' என தாலிபன்களே சொல்லும் அளவுக்கு இவர்களின் நட்புறவு பின்னிப் பிணைந்திருக்கிறது.

சீனா-தாலிபன் இருவருக்குமான நட்புக்கரங்களின் இறுக்கமான பிடியின் இடையே, சிக்கித் தவித்துக்கொண்டிருப்பது என்னவோ நம் இந்தியாதான்!

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தாலிபன்கள்
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தாலிபன்கள்

காரணம் புதிதல்ல என்றாலும், நிகழ்கின்ற காட்சிகள் புதியவை! அமெரிக்காவுடன் நட்புறவும், அமெரிக்க ஆதரவில் முன்பிருந்த ஆப்கன் அரசுடன் ஏகோபித்த புரிந்துணர்வும்கொண்டிருந்தது இந்திய அரசாங்கம். இதனாலே, சுமார் 23,000 கோடியை ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்காக வாரி வழங்கியது இந்தியா. 1,000 கோடி ரூபாய்க்கு நாடாளுமன்றல் கட்டடம், 2,000 கோடி ரூபாய்க்கு சல்மா அணை, சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என ஆப்கனின் உட்கட்டமைப்புக்காக 60-க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அங்கு ஏற்படுத்தித் தந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் இன்று தாலிபன்களின் பிடிக்குள் இருக்கிறது. ஆட்சி மாற, காட்சி மாற இனி அங்கு இந்தியா செய்த முதலீடுகளெல்லாம் என்னவாகும் என்ற கேள்விக்கு விடையில்லாமலேயே போய்விட்டது. விழலுக்கு இரைத்த நீரோ!

ஆப்கன் நாடாளுமன்ற கட்டடத்தைத் திறந்துவைக்கும் மோடி
ஆப்கன் நாடாளுமன்ற கட்டடத்தைத் திறந்துவைக்கும் மோடி

மறுபுறம், இந்தியாவைப் பரம எதிரியாகவும், முதன்மைப் போட்டியாளனாகவும் கருதிக்கொண்டிருக்கும் சீனாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு தாலிபன்களை தங்கள் தோள்களில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. அப்போதே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``இதுவரை ஆப்கானிஸ்தானைக் கட்டிப்போட்டிருந்த அடிமைச் சங்கிலியை தாலிபன்கள் உடைத்துவிட்டனர்'' என்றார். சீனாவோ, முதல் ஆதரவை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ``ஆப்கானிஸ்தான் மக்களின் சொந்த விதியைச் சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம். தொடர்ந்து, நட்புரீதியிலான உறவை வளர்க்கவும் தயாராக இருக்கிறோம்" எனச் சிவப்புக் கம்பளம் விரித்தது. இப்போது மிகவேகமாக முன்னே சென்று, ஆப்கானிஸ்தானிலிருக்கும் அத்தனை வளங்களின் மீதும் முதலீடு செய்யவிருக்கிறது சீனா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இந்தியாவோ ``தாலிபன்கள் அரசை ஏற்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இன்னும் இருக்கிறது". இந்தியாவுக்கு இப்போது இருக்கும் கவலையெல்லாம் இழந்த முதலீடுகளைப் பற்றி அல்ல; எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதைப் பற்றித்தான்! ஏற்கெனவே, ஆப்கனில் 1996-ம் ஆண்டு முதல் 2001 வரை தாலிபன்கள் ஆட்சி முதன்முறையாக அமைந்தபோதுதான், காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் வேகமாக அதிகரித்தது. மேலும், 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய ஹர்கத்-உல்-முஜாஹிதீன் எனும் பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர், அந்த விமானத்தை தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கனில்தான் தரையிறக்கி வைத்திருந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தாலிபன்கள். எனவே, இந்தமுறையும் இரண்டாவது தடவையாக ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சி அமைந்திருப்பதால் இந்தியா கலக்கத்தில் இருக்கிறது. மிக முக்கியமாக, தாலிபன்களுடனான சீனா, பாகிஸ்தானின் கூட்டணியால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது இந்தியா.

பாகிஸ்தான், சீனா
பாகிஸ்தான், சீனா

இக்கட்டான இந்தச் சூழ்நிலையில்தான், இந்தியா முதல் முயற்சியாக தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில், ``ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்காக எந்த வகையிலும் பயன்படுத்திவிடக் கூடாது" என இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தாலிபன் தரப்பும் இதற்கு நேர்மறையான பதில் தந்திருப்பதாகவே கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

இந்தியாவின் எதிர்பார்ப்போ, தேசப் பாதுகாப்பு. ஆனால் அதற்கு நேர்மாறாக சீனா ஆப்கானிஸ்தானிடம் எதிர்பார்ப்பது, கனிமப் பொருளாதார வளங்களும், தான் வலுவாகக் காலூன்ற அகண்ட தளங்களுமே! ஆப்கானிஸ்தான், உலகிலேயே அதிக அளவு லித்தியம் இருக்கக்கூடிய கனிமவள நாடாக இருக்கிறது. சீனாவோ, மின்சாரக்கம்பிகள், மொபைல்போன்கள், எலெக்ட்ரிக் சாதனப் பொருள்களின் முக்கிய மூலதாரமாக விளங்கும் லித்தியம் பேட்டரிகளை உலகத்துக்கே விற்பனை செய்யும் நாடாக இருக்கிறது. அதேபோல், 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாமிர வளங்கள் நிரம்பிய சுரங்கங்களும் ஆப்கனில் இருக்கின்றன. சீனா தாமிர ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது. இதுமட்டுமல்லாமல், தங்கம், இரும்பு, பெட்ரோலியம் எனப் பல்வேறு வளங்களும் ஆப்கன் மண்ணில் புதைந்துகிடக்கின்றன. இதுபோதாதா... சீனாவின் உதவிக்(!) கரங்கள் ஆப்கன் நாட்டை ஆரத்தழுவுவதற்கு..! பூலோக அரசியலுக்காக அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் போர்க்குண்டுகள் மட்டுமே துளைத்துவந்த ஆப்கானிஸ்தான் மண்ணை, தற்போது வணிக அரசியல் செய்யும் சீனாவின் ராட்சத இயந்திரங்கள் துளைத்தெடுக்கவிருக்கின்றன.

தாலிபன்களுடனான சீனாவின் நட்புறவுக்கு வணிகநலன் ஒருபுறமிருந்தாலும், அரசியல்நலனும்கூட பிரதான பங்கு வகிக்கின்றன. சீனாவின் பட்டுப்பாதை மேலும் விரிவடைகிறது. ஏற்கெனவே பாகிஸ்தானுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் போடப்பட்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை வலுவடைகிறது. அது, காஷ்மீரின் தலைமீது ஏறி, இந்தியாவின் பாரத்தை மேலும் கூட்டவிருக்கிறது. இன்னொருபுறம் கடல்வழி முத்துமாலை திட்டத்துக்காகவும், ராணுவ கடற்படைத் தளமாகப் பயன்படுத்தவும் பாகிஸ்தானிடமிருந்து குத்தகைக்கு எடுத்த குவாடர் துறைமுகமும், இலங்கையின் இரு துறைமுகங்களும் சீனா வசம் உள்ளன. இப்படிக் கடல்வழியாலும், நிலவழியாலும் இந்தியாவைக் கட்டிப்போட எத்தனிக்கும் சீனாவுக்கு தற்போது வான்வழித் தளத்தை வழங்கப்போகும் நாடு, ஆப்கானிஸ்தான். ஆம், ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாக்ரம் விமானப்படைத் தளத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியையும் கையிலெடுத்திருக்கிறது சீனா.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இது குறித்துப் பேசிய ஐ.நா-வுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹேலி,

``சீனா ஆப்கானிஸ்தானின் சில இடங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தும், பாகிஸ்தானைப் பயன்படுத்தியும் இந்தியாவுக்கு எதிராக வலிமை பெற முயல்கிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானிலுள்ள பாக்ரம் விமானப் படை தளத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதற்கு பாகிஸ்தானையும் சீனா பயன்படுத்திக் கொள்ளக்கூடும்."
நிக் ஹேலி, அமெரிக்க முன்னாள் தூதர்

என பகிரங்கமாக எச்சரிக்கிறார்.

ஆப்கனில் தாலிபன்கள் பெற்ற வெற்றியையடுத்து உத்வேகம் பெற்ற அல்-கொய்தா அமைப்பினர், ``உலகெங்கிலும் அடிமைச்சிறைக்குள் இருக்கும் இஸ்லாமிய நிலங்களையும் விடுவிக்க வேண்டும்" என்றார்கள். குறிப்பாக, இவர்கள் சொன்ன பட்டியலில் காஷ்மீர் விடுதலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் - லடாக்
ஜம்மு காஷ்மீர் - லடாக்
Maps of India

இன்னொரு பக்கம் சீனா இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். காரணம், தாலிபன்களுடனான இணக்கம். மேலும், இதில் சீனாவின் இன்னொரு லாபியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது, உய்குர் இஸ்லாமியர் பிரச்னை. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். சீனாவின் உய்குர் மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்தும், உய்குர் மக்களுக்கு தனிநாடு கேட்டும் கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) ஆயுதவழியில் போராடுகிறது.

உய்குர் இஸ்லாமிய மக்கள் போராட்டம்
உய்குர் இஸ்லாமிய மக்கள் போராட்டம்

சீனாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்த இயக்கத்தின் பிரதான தளமாக இருப்பது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பதக்‌ஷான் பகுதி. ஆப்கானிஸ்தான் சீனாவுடன் பகிர்ந்துகொள்ளும் 70 கி.மீ குறுகிய எல்லைப் பகுதிதான் ஜின்ஜியாங் மாகாணத்துக்கும் பதக்‌ஷான் பகுதிக்குமான உறவுப்பாலம். தாலிபன்களிடம் இந்தப் பிரச்னையை முன்வைத்த சீனா,``ஜின்ஜியான் மாகாணத்தில் அமைதியின்மைக்குக் காரணம், கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்தான். எனவே, இந்த இயக்கம் ஆப்கனிலிருந்து செயல்படுவதைத் தடுக்க வேண்டும்" எனக் கோரிக்கையும் வைத்திருக்கிறது.

இந்தியா, தாலிபன்களுடனான பேச்சுவார்த்தைக்கே தடுமாறிக்கொண்டிருக்கும் சூழலில், சீனா புயல்வேகத்தில் தனது நட்புறவை வளர்த்துக்கொண்டு செல்கிறது. வர்த்தகநலன், பொருளாதாரநலன், அரசியல்நலன் என அடுத்தடுத்து தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆப்கனை வாரி அணைத்துக்கொள்கிறது. இதில், தாலிபன்களின் சுயநலமும் இல்லாமல் இல்லை. உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தன்னை, சீனா போன்ற நாட்டின் ஆதரவுடன் வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும், உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ளவும் நினைக்கிறது.

சீனாவுடனான நட்புறவு குறித்துப் பேசிய தாலிபன் செய்தித் தொடர்பாளார் ஜபிஹுல்லா முஜாஹித்,

``எங்கள் தேசத்தை மீள் கட்டமைப்பு செய்வதில் சீனாதான் எங்களின் முக்கியப் பங்காளி. சீனாவுடனான இணக்கமானப் போக்கு, உலக அரங்கில் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைத் திறந்துவைக்கும். சீனா, எங்கள் நாட்டில் முதலீடு செய்யவும், எங்கள் தேசத்தை மீள் கட்டமைப்பு செய்யவும் தயாராக இருக்கிறது. இங்கு, வளமான தாமிரச் சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் இவற்றை மீண்டும் இயக்க முடியும். சீனா இந்தச் சுரங்கங்களை நவீனப்படுத்தும். இதனால், நாங்கள் சீனாவின் வழியாக உலகச் சந்தையை அடைவோம்."
ஜபிஹுல்லா முஜாஹித், தாலிபன் செய்தித் தொடர்பாளார்

எனத் தெரிவித்திருக்கிறார்.

தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்
தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்
`` தலிபன்கள் ஆட்சியை இந்திய அரசு அங்கீகரிக்கிறதா என்பது பற்றி பதிலளிக்க முடியாது. தோஹாவில் நாங்கள் தலிபான்களுடன் ஒரு சந்திப்பு நடத்தியிருக்கிறோம் அவ்வளவுதான். இது பற்றி விரிவாக எதுவும் கூற முடியாது. தாலிபன் தீவிரவாத அமைப்பா, இல்லையா என்பது எங்கள் நோக்கமல்ல. எங்களைப் பொறுத்தவரை ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த நாட்டைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாத செயல்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். அதில்தான் கவனமாக இருக்கிறோம்."
அரிந்தம் பக்‌ஷி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்

என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியா-சீனா: இவர்களில் ‘பிக் பாஸ்’ யார்?
இந்தியா-சீனா: இவர்களில் ‘பிக் பாஸ்’ யார்?

தற்போதைய சூழலில் தாலிபன்களுடனான இந்தியா, சீனாவின் உறவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எல்லாவகையிலும் சீனாவின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது.

குறிப்பாக,

ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றியிருப்பதால், முந்தைய அரசை நம்பி இந்தியா ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பெரும் தொகையை இழந்து நிற்கிறது. அதேசமயம் சீனா, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தாலிபன்களுடன் உறவைத் தொடங்கியிருக்கிறது. பெரிய அளவில் முதலீடு செய்யவிருக்கிறது. இது சீனாவுக்கு லாபம், இந்தியாவுக்குப் பின்னடைவு.

முல்லா அப்துல் கானி பராதருடன் வாங் லீ
முல்லா அப்துல் கானி பராதருடன் வாங் லீ

முன்னர் இந்தியாவின் நட்பு நாடுகளாக இருந்த இலங்கை, ஆப்கன் போன்ற நாடுகள், அங்கு நடந்த ஆட்சிமாற்றத்தால் தற்போது சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளன. மேலும், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் அண்டைநாடுகளான பாக்., இலங்கை, ஆப்கன் போன்ற நாடுகளை சீனா அணிதிரட்டியிருப்பது ராணுவ, பொருளாதாரரீதியில் இந்தியாவுக்கான நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது.

மேலும், ஆப்கனில் தாலிபன்களின் வெற்றியாலும், சீனாவின் தாலிபன்கள் ஆட்சி மீதான ஆதரவாலும் ஏனைய தீவிரவாதக் குழுக்களுக்கும் புது உத்வேகம் கிடைத்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்குள்ளாகவும் வெளியிலிருந்தும் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கவும், தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இது போன்ற பல காரணங்கள், பலவகையில் இந்தியாவுக்குப் பாதகமாகவே அமைந்திருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழலில் சீன தரப்பு அடித்தாடும் (Offence) இடத்திலும், இந்தியா தடுத்தாடும் (Defence) நிலையிலும் இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இனி இந்தியா எடுக்கப்போகும் அரசியல் நிலைப்பாட்டுக்கும், சாதுர்ய நடவடிக்கைகளுக்கும்தான் ஆட்டத்தை மாற்றும் சக்தி இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்!