Published:Updated:

`இந்தியப் பொருளாதார மாற்றத்தின் சிற்பி!' - ஒபாமா நினைவுக் குறிப்பில் மன்மோகன் சிங்

ஒபாமா
ஒபாமா ( Instagram )

மன்மோகன் சிங், தனது சொந்தப் பிரபலத்தின் பலனாக பிரதமராகவில்லை என்றும், அவர் தனது பதவிக் காலத்தில், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும், கண்ணியமான தலைவராகவும் இருந்தார் என்றும் குறிப்பிடுகிறார் ஒபாமா!

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது நினைவுக் குறிப்பில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ``இந்தியப் பொருளாதார மாற்றத்தின் தலைமைச் சிற்பி. அவர் முன்னேற்றத்தின் சின்னம். அடிக்கடி துன்புறுத்தல்களுக்கு ஆளான சீக்கிய மதச் சிறுபான்மை வகுப்பிலிருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர்" என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக 2008 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவிவகித்தவர் பராக் ஒபாமா. இவர், `எ பிராமிஸ்டு லேண்ட்’ என்ற பெயரில் தனது அரசியல் வாழ்க்கையின் நினைவுகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தின் முதல் தொகுதி உலகமெங்கும் நேற்று விற்பனைக்கு வந்திருக்கிறது. 768 பக்கங்கள்கொண்ட ஒபாமா-வின் 'எ பிராமிஸ்டு லேண்ட்' புத்தகத்தில் உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள், திருமண வாழ்க்கை எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து நினைவுகளைப் பகிர்ந்திருக்கும் ஒபாமா, இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்து இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

இதில் 2008-ம் ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடங்கியதிலிருந்து தனது பதவிக்காலம் முடிவடைந்தது வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். `எ பிராமிஸ்ட் லேண்ட்’ புத்தகத்தின் முதல் தொகுதி விற்பனைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு ஊடகங்கள் விமர்சனக் கட்டுரை எழுதி, பரபரப்பை ஏற்படுத்தின.

`எ பிராமிஸ்ட் லேண்ட்' புத்தகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி பராக் ஒபாமா குறிப்பிடுகையில், ``இந்தியப் பொருளாதார மாற்றத்தின் தலைமைச் சிற்பி மன்மோகன் சிங். அவர் முன்னேற்றத்தின் சின்னம். அடிக்கடி துன்புறுத்தல்களுக்கு ஆளான சீக்கிய மதச் சிறுபான்மை வகுப்பிலிருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். அவர் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, ஊழல் செய்யாததற்காக மக்களிடம் நற்பெயரைச் சம்பாதித்தவர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``மன்மோகன் சிங், தனது சொந்தப் பிரபலத்தின் பலனாக பிரதமராகவில்லை. அவர் தனது பதவிக் காலத்தில், தொலைநோக்குப் பார்வைகொண்டவராகவும், கண்ணியமான தலைவராகவும் இருந்தார். நாகரிகமான மனிதரான அவர், சிறந்த அறிவாளி. இந்திய-அமெரிக்க உறவை, அவர் எச்சரிக்கையுடன் கையாண்டார்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

`முஸ்லிம் விரோத உணர்வு அதிகரித்துவருவது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) செல்வாக்கை பலப்படுத்துவதாக அவர் அஞ்சினார்’ எனத் தன்னுடைய நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறர் ஒபாமா.

ஒபாமா
ஒபாமா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றிக் குறிப்பிடும்போதும், ``சோனியா காந்தி பேசுவதைவிட, கேட்பதில் ஆர்வம்காட்டுகிறார். கொள்கை விஷயங்களைப் பற்றிப் பேசுகிறபோதெல்லாம் அதை மன்மோகன் சிங் வசம் தள்ளிவிடுவதில் கவனமாக இருந்தார்” என்றும் ஒபாமா எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு