Published:Updated:

`ஒபாமா ஆதரவு; எதிரான கருத்துக்கணிப்புகள்!' - கனடா தேர்தலை எதிர்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் தேர்தலைச் சந்திக்கும் அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கனடாவில் பொதுத்தேர்தல் வரும் திங்கள்கிழமை நடைபெற இருக்கிறது. தற்போதைய அதிபரான ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். உலக அளவில் பல்வேறு விவகாரங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ட்ரூடோ, கனடா நாடாளுமன்றத்தில் இந்தமுறை தனது பெரும்பான்மையை இழப்பார் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

இந்த நிலையில், கனடாவின் அதிபராக ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாகத் தேர்வாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒபாமா,``அதிபராக ஜஸ்டின் ட்ரூடோவுடன் பணியாற்றியதற்காகப் பெருமைப்படுகிறேன். கடின உழைப்பாளியான அவர், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காகப் போராடுபவர். இன்றையசூழலில் உலகுக்கு முற்போக்கான அவரது தலைமை தேவை. அண்டைநாட்டு மக்கள் அவர் இரண்டாவது முறையாக அதிபராவதற்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்'' என்று பதிவிட்டிருக்கிறார். ஒபாமாவின் பதிவுக்குப் பதிலளித்துள்ள ட்ரூடோ, ``நன்றி நண்பரே. முன்னேற்றத்தைத் தொடர கடுமையாக உழைக்கிறோம்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

Vikatan

ஒபாமா - ட்ரூடோ நட்பு

அமெரிக்க அதிபராக ஒபாமா, இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு மார்ச்சில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு, கனடா அதிபருக்கு அமெரிக்க அதிபர் மாளிகையில் விருந்துவைத்து கௌரவப்படுத்தினார் ஒபாமா. இருபது ஆண்டுகளில் அமெரிக்க அரசு தரப்பில் இப்படிக் கௌரவிக்கப்பட்ட முதல் கனடா அதிபர் ட்ரூடோதான். அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஒபாமாவும் ட்ரூடோவும் நெருங்கிய நண்பர்களாக நீடித்தனர். கடந்த ஜனவரியில் கனடாவின் ஒட்டாவா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இருவரும் ஒன்றாக உணவருந்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் ட்ரூடோ - ஒபாமா
ஜஸ்டின் ட்ரூடோ - ஒபாமா
Obama Foundation

ஒபாமா ஆதரவு குறித்து கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம்,``அது ஒரு தனிநபரின் கருத்து'' என்று கூறி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆதரவு தெரிவிப்பது கனடாவில் நடைபெறும் தேர்தலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அந்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்திருக்கின்றன. இதுகுறித்து பேசிய கனடா தேர்தல் ஆணைய அதிகாரிகள், ``அதிபர் தேர்தலில் போட்டியிடுபவரின் பிரசாரத்துக்காக பணம் செலவழிக்காத வரையில், இது தேர்தலில் தலையிடுவதாகக் கருத முடியாது'' என்று கூறியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நான் செய்திருக்கக் கூடாது!' - 18 வருடங்களுக்குப் பிறகு இனவெறிக்கு மன்னிப்பு கேட்ட ட்ரூடோ

என்ன சொல்கின்றன கருத்துக்கணிப்புகள்?

சிடிவி மற்றும் மெயில் தினசரி இதழ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 32.5 சதவிகித மக்கள் ஆதரவையும், ட்ரூடோவின் லிபரல்ஸ் கட்சி 31.9 சதவிகித ஆதரவையும் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் டெமாக்ரடிக் கட்சிக்கு 18.8 சதவிகித ஆதரவு இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்ட்ரூ ஸ்ஷீர், ஜக்மீத் சிங், ஜஸ்டின் ட்ரூடோ
ஆண்ட்ரூ ஸ்ஷீர், ஜக்மீத் சிங், ஜஸ்டின் ட்ரூடோ

லிபரல் கட்சி சார்பில் இரண்டாவது முறையாக ட்ரூடோ அதிபர் தேர்தலில் களம்காண்கிறார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், ஆண்ட்ரூ ஸ்ஷீர் மற்றும் நியூ டெமாக்ரடிக் கட்சி சார்பில் அதன் தலைவரான ஜக்மீத் சிங் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். கனடாவில் மொத்தமுள்ள 338 எம்.பி. தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 170 இடங்கள் தேவை. இதில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் டெமாக்ரடிக் கட்சி, ஆட்சியை இழக்கும் என்று பெரும்பான்மையான கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு