அமெரிக்காவின் பென்சில்வேனியா நெடுஞ்சாலையில், கடும் பனிப்பொழிவின் காரணமாக சாலைகள் பெரும்பாலும் மூடியவண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த திங்களன்று அவ்வழியே சென்ற வாகனங்கள் பல, ஒன்றன் பின் ஒன்றாக மோதி சாலையில் குவிந்துள்ளன. யூடியூபில் வெளியான இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இந்த வீடியோவில், கார், ட்ரக், கன்டெய்னர் போன்ற வாகனங்கள் பணியின் நடுவே சாலையில் மோதி நிற்கின்றன. மேலும், காரும் ட்ரக்கும் ஒன்றையொன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. கன்டெய்னர் ஒன்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

இது குறித்து போலீஸார், ``திங்கள்கிழமை காலை 10:30 மணியளவில், கடும் பனி மூட்டத்தால் இது நிகழ்ந்துள்ளது. இதில், கார், ட்ரக், கன்டெய்னர் உட்பட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதலில் சிக்கின. இதனால் நெடுஞ்சாலையில் பல மைல்களுக்குப் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதன் காரணமாக அவசரகால மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தை அடைவது கடினமாக இருந்தது. இந்த விபத்தில் சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன, பின்னர் அது அணைக்கப்பட்டது. இதில், பலபேர் காயமடைந்தது மட்டுமல்லாமல் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. மேலும் காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
