Published:Updated:

`ஐ.நா சறுக்கல்; உதவிக்கு வராத உலக நாடுகள்!' - காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான் கான் போடும் புதுக்கணக்கு

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்க முயன்ற விவகாரத்தில் தோல்வியடைந்தநிலையில், ஐக்கிய நாடுகள் அவைக்கான நிரந்தரத் தூதரை பாகிஸ்தான் மாற்றியிருக்கிறது.

imran khan
imran khan

ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று அந்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாக்கள் இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை, இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

Imran Khan - Donald Trump
Imran Khan - Donald Trump
Twitter
`4 முயற்சிகள்... அனைத்துமே தோல்வி!' - ஐ.நா சபையில் பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்த இந்தியா #UNHRC

அந்த இரு முறையும் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் பேசியிருந்தார். `இது இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகள் இடையிலான விவகாரம். அதைப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்' என்று ட்ரம்ப் கைவிரித்துவிட்ட நிலையில், அதற்கு மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றும் கூறினார். ஆனால், `இது உள்நாட்டு விவகாரம். இதில், மற்ற நாடுகள்' தலையிடுவதை விரும்பவில்லை என்று இந்தியா தரப்பில் உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஐ.நா அவையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அங்கு இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த உரைதான் பாகிஸ்தான் பிரதமரான பின்னர் ஐ.நாவில் அவரின் முதல் உரையாகும்.

Imran Khan
Imran Khan
`கோல்டு மெடல்.. ஜூனியர் கேடர்!'- இம்ரானை கிளீன் போல்டாக்கிய இன்டர்நெட் சென்சேஷன் விதிஷா மைத்ரா யார்?

ஆனால், இம்ரான் கானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா தரப்பில் ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்கப்பட்டது. அதேபோல், பாகிஸ்தான் தூதர்கள் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் இந்தியத் தூதர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்பதை எடுத்துரைத்தனர். அதேபோல், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவசர விவாதம் கோரி பாகிஸ்தான் கொண்டுவர முயன்ற தீர்மானமும் போதிய ஆதரவு இல்லாததால், கவனம் பெறாமலேயே போனது. இதனால், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் உலக அளவில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டது. இது சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐ.நாவுக்கான நிரந்தரத் தூதர் பதவியிலிருந்து மலீஹா லோதியை நீக்கியிருக்கிறது இம்ரான் கான் அரசு. ஐ.நா அவை கூட்டத்தை முடித்துக்கொண்டு இம்ரான் கான், பாகிஸ்தான் திரும்பியவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதிலாக ஐ.நா அவைக்கான நிரந்தரத் தூதராக முன்னாள் தூதரான முனீர் அக்ரம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Maleeha lodhi
Maleeha lodhi
Twitter

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எதற்காக மலீஹா பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்ற எந்தத் தகவலையும் பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஐ.நாவில் பாகிஸ்தான் சமீபத்தில் சந்தித்த சறுக்கல்கள் காரணமாகவே அவரை பாகிஸ்தான் நீக்கியிருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

யார் இந்த முனீர் அக்ரம்?

ஐக்கிய நாடுகள் அவைக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதராகக் கடந்த 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இந்த முனீர் அக்ரம். பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையில் அந்நாடு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போதைய அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரியுடன் முனீர் அக்ரமுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, முனீர் அக்ரமை பதவியிலிருந்து நீக்கினார் ஜர்தாரி.

Munir Akram
Munir Akram
Twitter
`அதை யாரு சொல்றதுன்னு இல்லியா!'- ஐ.நா-வில் பாகிஸ்தானுக்கு பதிலடிகொடுத்த இந்தியா #UNHRC

அதேபோல், கடந்த 2002-ல் பாகிஸ்தானின் தூதராக முனீர் அக்ரம் பணியாற்றியபோது, அவரின் மனைவி மரிஜனா மிஹிக் நியூயார்க்கில் புகார் அளித்தார். தன்னைக் கொடுமைப்படுத்தியதாக மரிஜனா புகார் அளித்தநிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தூதர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் முனீர் அக்ரம் மீது அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

`இந்தியர்களுக்கு வேறு குரல் தேவையில்லை!’ - இம்ரானுக்கு ஐ.நா-வில் பதிலடி கொடுத்த வதிஷா மைத்ரா

கராச்சி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த முனீர், சட்டம் படித்தவர். அதேபோல், அரசியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதேபோல், நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் பாகிஸ்தானுக்காக ஐ.நா தூதராக பணியாற்றியவர் இவர். இவரது அனுபவம் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

Maleeha lodhi, Munir Akram
Maleeha lodhi, Munir Akram
Twitter

இவரைத் தவிர, ஐ.நாவில் செயல்படும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலக இயக்குநராகப் பணியாற்றி வரும் கலீல் அகமதுவை, ஜெனீவாவில் உள்ள ஐ.நா அவையின் நிரந்தரத் தூதராக நியமித்திருக்கிறது பாகிஸ்தான். மேலும், ஹங்கேரி, குவைத், கனடா, வங்கதேசம், ஓமன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான தூதர்களை இம்ரான் கான் அரசு மாற்றியிருக்கிறது.