Published:Updated:

`கூட்டுக் குற்றத்தில் தனி நபருக்குத் தண்டனை விதிக்க முடியாது!’- முஷாரப்பின் மரண தண்டனை ரத்து

முஷாரப்
முஷாரப்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது அரசியலமைப்பை முடக்கியது, தேசத்துரோகம், பெனாசிர் பூட்டோ கொலை விவகாரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 17-ம் தேதி இதில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

முஷாரப்
முஷாரப்

பெஷாவர் நகர் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முஷாரப்பை குற்றவாளி என அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும், `ஒருவேளை தீர்ப்பு நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக முஷாரப் இறந்துவிட்டால் அவரது இறந்த உடலை இழுத்து வந்து, இஸ்லாமாபாத், நாடாளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் மத்திய சதுக்கத்தில் மூன்று நாள்கள் தூக்கில் தொங்கவிட வேண்டும்’ என மூன்று நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பு வழங்கினார். இது பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

`தூக்குக்கு முன் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்’ - முஷாரப்புக்கு பாக்., நீதிமன்றம் விதித்த தண்டனை

நீதிபதியின் இந்தத் தண்டனைக்குப் பாகிஸ்தான் அரசு, ராணுவம் உட்படப் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப் இது பற்றி பேசியபோது, ``என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் பழிவாங்கும் செயல். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது தனது தரப்பில் வாதிட போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும்” எனப் பேசியிருந்தார்.

முஷாரப்
முஷாரப்

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரப் தரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து வாதங்களும் முடிவடைந்த பிறகு, முஷாரப்புக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி, அவரின் மரண தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

`அதிகாரம் கொடுத்த அதிபருக்கே செக்; ராணுவ ஆட்சி!' - தூக்குத்தண்டனைக் கைதியான பர்வேஸ் முஷாரப்

`முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது சட்டவிரோதமானது. இனி முஷாரப் தேடப்படும் நபர் இல்லை. முஷாரப் மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்த தேசத் துரோகம் மற்றும் அவர் அரசியலமைப்பை முடக்கியது போன்றவை ஒரு கூட்டுக் குற்றமாகும். அதைத் தனி ஒரு நபரால் செய்யமுடியாது. எனவே, இந்த வழக்கில் தனி நபரான முஷாரப்புக்குத் தண்டனை விதிக்கமுடியாது’ என்று நீதிபதிகள் பேசியுள்ளனர்.

லாகூர் நீதிமன்றம்
லாகூர் நீதிமன்றம்

தற்போதைய பாகிஸ்தான் அரசில் முஷாரப்பின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். எனவே, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு ரத்தை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை என்று அந்நாட்டின் வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக துபாய் மருத்துவமனையிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முஷாரப்.

அதில் பேசும் அவர், ``இந்தத் தீர்ப்பு தொடர்பாக என்னால் கருத்து கூற முடியவில்லை, ஆனால், மிகவும் சிறந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் அரசியலமைப்பின்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது எனது உடல்நிலை சற்று தேறி வருகிறது. எனக்காகவும் என் உடல் குணமடைவதற்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

முஷாரப்
முஷாரப்

முன்னதாக, `முஷாரப் இறந்தாலும் அவரை இழுத்து வந்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் விமர்சித்திருந்தார். இதற்கு நடுவேதான் தற்போது முஷாரப்புக்கு வழங்கிய தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு