Published:Updated:

பாகிஸ்தான் படுகொலை: `என் கணவர் அப்பாவி; நீதி வேண்டும்!’ - இலங்கையில் மனைவி கண்ணீர்

பாகிஸ்தான் படுகொலை
News
பாகிஸ்தான் படுகொலை

பிரியாந்த தியவதன குமாரவைக் கொன்று, அவரின் உடலை எரித்ததற்காக 800 தொழிலாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில், இலங்கையைச் சேர்ந்த பிரியாந்த தியவதன குமார (40) பணி நிமித்தமாகக் கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். 2012-ம் ஆண்டிலிருந்து சியால்கோட் மாவட்டத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பொதுமேலாளராகப் பணியாற்றிவந்தாா். கடந்த டிசம்பர் 3-ம் தேதி அவரின் தொழிற்சாலைக்கு வெளியே மத அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அந்தச் சுவரொட்டியை பிரியாந்த தியவதன குமார கிழித்துக் குப்பையில் எறிந்ததாகக் கூறப்படுகிறது. குப்பையில் வீசப்பட்ட அந்தச் சுவரொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. பிரியாந்த தியவதன குமாரா சுவரொட்டியைக் கிழித்த தகவல் வெளியே பரவியது. இதையடுத்து தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரின் தொழிற்சாலைக்கு எதிரே கூடினர்.

பாகிஸ்தான் படுகொலை: `என் கணவர் அப்பாவி; நீதி வேண்டும்!’ - இலங்கையில் மனைவி கண்ணீர்
Shahid Akram

பின்னர், குர்ஆன் வாசகங்கள் இருந்த சுவரொட்டியைக் கிழித்து குப்பையில் எறிந்ததன் மூலம் இஸ்லாம் மதத்தை பிரியாந்த குமார இழிவுபடுத்தியதாகக் குற்றம்சாட்டிய அவா்கள், தொழிற்சாலையிலிருந்து அவரை வெளியே இழுத்துவந்து கட்டையாலும் கல்லாலும் அடித்துக் கொடூரமாகத் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். மேலும் வெறி தீராத அந்தக் கும்பல், பிரியாந்தா தியாவதன குமார-வின் உடலைத் தீவைத்துக் கொளுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பாகிஸ்தானில் இலங்கை நாட்டவர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் மக்கள், லாகூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன் கொடூரக் கொலைக்கு எதிரான வாசகங்களுடன்கூடிய பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாகிஸ்தான் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தான் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இதைப் பற்றிக் கருத்து தெரிவித்திருக்கும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், "சியால்கோட்டில் கொடூரமான முறையில் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் இந்த நாள் பாகிஸ்தானுக்கு ஓர் அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டுவருகிறேன். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்" என்று பதிவுசெய்திருக்கிறார்.

குமாரவின் மனைவி நிரோஷி தசநாயக்க, கொல்லப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பாகிஸ்தான் மற்றும் இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ``என் கணவர் ஓர் அப்பாவி மனிதர். இவ்வளவு காலம் வெளிநாட்டில் பணியாற்றிய அவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பதைச் செய்தி மூலம் தெரிந்துகொண்டேன். இந்தக் கொலை எவ்வளவு மனிதாபிமானமற்றது என்பதை இணையத்தில் பார்த்தேன். என் கணவருக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் நீதி கிடைக்கும் வகையில் நியாயமான விசாரணையை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என அவர் பிபிசி சிங்களத்திடம் பேசுகையில் கூறினார்.

இதற்கிடையில், இலங்கைச் செய்தி இணையதளமான நியூஸ்வயர், குமாரவின் அஸ்தியை திங்கட்கிழமை சிறப்பு விமானத்தில் லாகூரிலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

பிரியாந்த தியவதன குமாரவைக் கொன்று, அவரது உடலை எரித்ததற்காக 800 தொழிலாளர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிரியாந்த குமாரவை சித்ரவதை செய்து வீடியோ பதிவு செய்தவர்கள் உட்பட 118 பேரை சியால்கோட் போலீஸார் கைதுசெய்தனர்.

பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 302, 297, 201, 427, 431, 157, 149 மற்றும் எதிர்ப்பு தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11WW பிரிவுகளின் கீழ் உகோகி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) Armaghan Maqt-ன் விண்ணப்பத்தின் பேரில் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸின் 800 தொழிலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. தொழிற்சாலை கேமராக்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் வீடியோ க்ளிப்புகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 118 பேரில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களான மொஹமத் தல்ஹா, ஃபர்ஹான் இத்ரீஸ் ஆகியோர் அடங்குவர், மேலும், அவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாத இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சியால்கோட்டில் உள்ள அல்லாமா இக்பால் போதனா மருத்துவமனையில் குமாரவின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. அதன்படி தியாவதனவின் மண்டை ஓட்டிலும் தாடையிலும் ஏற்பட்ட முறிவால் அவருக்கு மரணம் நேரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரல், வயிறு, சிறுநீரகம் உட்பட அவரின் அனைத்து முக்கிய உறுப்புகளும் தாக்குதலால் செயலிழந்ததாகச் சொல்லப்படுகிறது. வன்முறைக் கும்பலால் தியவதன சித்ரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் அவரின் உடல் முழுவதும் உள்ளன. அவரின் முதுகெலும்பு மூன்று இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் படுகொலை: `என் கணவர் அப்பாவி; நீதி வேண்டும்!’ - இலங்கையில் மனைவி கண்ணீர்

மேலும், தீவைக்கப்பட்டதில் அவர் உடல் 99 சதவிகிதம் எரிந்துள்ளது. ஒரு கால் தவிர அவரது உடலின் அனைத்து எலும்புகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன என்று அந்தப் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியால்கோட் துணை ஆணையர் தாஹிர் ஃபரூக் கூறுகையில், "குமாரவின் உடல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரெஸ்க்யூ ஆம்புலன்ஸில் லாகூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சம்பிரதாயங்களை நிறைவேற்றிய பின்னர் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படும்" என்றார்.

பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் புஸ்டாரிடம் இந்தப் படுகொலைகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எஞ்சியுள்ள சந்தேக நபர்களை விரைவில் கைதுசெய்யுமாறும், விசாரணை அறிக்கையை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். புஸ்டார், தனிப்பட்ட முறையில் விசாரணையைக் கண்காணித்துவருவதால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப மாட்டார்கள் என்று உறுதி அளித்திருக்கிறார்.

பிரதமர் இம்ரான் கான், முதல்வர் புஸ்தார் ஆகியோர் இந்த வழக்கை நேரில் கண்காணித்துவருவதாகவும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) பொது இயக்குநரகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.