Published:Updated:

`இப்படியொரு அவலம் வேறெங்கும் நடந்ததில்லை!' - சர்ச்சையில் இம்ரான் கான்

சத்யா கோபாலன்

இம்ரான் கானின் செயல் பாகிஸ்தான் நாட்டுக்கே அவமானம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிரதமரான பிறகு அந்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வரவுள்ளதாகவும் அரசு அதிகாரிகளுக்கு அரசு செலவில் மேற்கொள்ளப்படும் ஆடம்பரச் செலவுகள் தவிர்க்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இம்ரான் கான் கலந்துக்கொண்ட திருமணம்
இம்ரான் கான் கலந்துக்கொண்ட திருமணம்
Twitter/ @Sidrah Memon

மேலும், `தான் பிரதமர் இல்லத்தில் தங்கப்போவதில்லை, அதற்குப் பதிலாக இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவச் செயலர் வீட்டில் தங்கிக்கொள்வேன், பிரதமர் இல்லம் கல்வி தொடர்பான விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்படும். எனக்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே போதும்' எனக் கூறி பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது கல்விக்காகப் பயன்படுத்தப்படும் என கூறப்பட்ட பிரதமரின் வீடு திருமண மண்டபமாக மாறியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 3-ம் தேதி பிரதம மந்திரியின் ராணுவச் செயலர் வசீம் இப்திகர் சீமாவின் (Waseem Iftikhar Cheema ) மகள் திருமணம் நடைபெற்றது. அதுவும் பிரதமர் இல்லத்தில் மிகவும் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி அரங்கேறியது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் இம்ரான் கான் உட்பட மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணப் பத்திரிகை
திருமணப் பத்திரிகை
Twitter/ @Sidrah Memon

வசீம் இப்திகர் சீமா மகளின் திருமண அழைப்பிதழும் அந்தத் திருமணத்தில் இம்ரான் கலந்துகொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. ` தான் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராக நடந்துகொள்கிறார் இம்ரான் கான். பிரதமரின் இல்லத்தை வாடகைக்கு விடும் அவலநிலை வேறு எங்கும் நடந்ததில்லை’ என பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளன.