Published:Updated:

`பணத்தைக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்!’ - முன்னாள் பிரதமர்களுக்கு இம்ரான் வைத்த செக்

இம்ரான் கான்
இம்ரான் கான்

`கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள்' எனப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களுக்கு தற்போதைய பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் தற்போது நிதி நெருக்கடியின் உச்சத்தில் தவித்து வருகிறது. அந்த நாட்டுக்குக் கடன் வழங்குவதாகக் கூறியிருந்த சர்வதேச நிதியமும் தற்போது கடன் தர யோசிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முன்னாள் பிரதமர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான்.

நவாஸ் ஷெரீஃப்
நவாஸ் ஷெரீஃப்

இது தொடர்பாக ஏ.ஆர்.ஒய் என்ற பாகிஸ்தான் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள அவர், ``முன்னாள் பிரதமரான ஆசிப் அலி சர்தாரி மற்றும் நவாஸ் ஷெரீஃப் போன்றவர்களுக்குப் பாகிஸ்தான் அரசு எந்த பொது மன்னிப்பும் வழங்காது. அவர்கள் பாகிஸ்தான் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைத் திரும்பத் தந்துவிட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும்.

இரண்டு பிரதமர்களின் மகன்களும் தங்களின் தந்தைகளை வெளிநாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல, அந்த நாடுகள் மூலம் எங்களுக்கு அழுத்தம் தருகின்றனர். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால், அதற்கு முன்னால் கொள்ளையடித்த பணத்தைத் திரும்பத் தர வேண்டும்.

ஆசிப் அலி சர்தாரி
ஆசிப் அலி சர்தாரி

அப்படித் தரவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானைவிட்டு வெளியேற நான் அனுமதிக்க மாட்டேன். நவாஸ் ஷெரீஃப் பற்றும் ஆசிப் அலி சர்தாரி ஆகிய இருவருக்கும் முஸரஃப் அளித்த என்.ஆர்.ஓ-க்கள் (தேசிய நல்லிணக்க கட்டளை) நாட்டை அழித்தன. பின்னர் இருவரும் தங்களுக்குள் மாற்றி மாற்றி என்.ஆர்.ஓ-க்களை அழித்துக்கொண்டனர்.

நாட்டு மக்களின் பணத்தைச் சுரண்டியவர்கள் தற்போது பாகிஸ்தான் சிறையில் வி.ஐ.பி-க்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சாதாரண சிறையில் அடைக்க வேண்டும் என நான் சட்டத் துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளேன்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தானில் கடத்தல் மற்றும் பண மோசடிகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் உட்பட விரிவான திட்டம் வகுக்கப்படும்” எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு