Published:Updated:

பாகிஸ்தான் அரசியல் குழப்பம்: சாமர்த்தியமாக வாக்கெடுப்பைத் தவிர்த்த இம்ரான்... இனி என்ன?

இம்ரான் கான் ( Anjum Naveed )

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறார் பாகிஸ்தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் குவாசிம் சூரி.

பாகிஸ்தான் அரசியல் குழப்பம்: சாமர்த்தியமாக வாக்கெடுப்பைத் தவிர்த்த இம்ரான்... இனி என்ன?

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறார் பாகிஸ்தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் குவாசிம் சூரி.

Published:Updated:
இம்ரான் கான் ( Anjum Naveed )

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறார் அந்நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகர் குவாசிம் சூரி (Qasim Suri). அதேபோல, பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தைக் கலைத்ததோடு, இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை, இம்ரான் கானே பிரதமராக நீடிப்பார் என பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி (Arif Alvi) அதிரடியாக அறிவித்திருக்கிறார். இதனால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சியினர், தங்களுக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது எனக் கூறி, போட்டியாக புதிய பிரதமர், சபாநாயகரை அறிவித்திருப்பது பாகிஸ்தான் அரசியலில் மேலும் குழப்பத்தை அதிகரித்திருக்கிறது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பிரதமர் இம்ரான் கான்: ஆட்சியும்... அதிருப்தியும்...

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இம்ரான் கானின் `பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்- (பி.டி.ஐ)' கட்சி, மொத்தமுள்ள 342 இடங்களில் 149 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. ஆட்சிப் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், சுயேச்சைகள், சிறிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட இம்ரான் கான், 176 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு, பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. சீனா போன்ற நாடுகளிடம் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கி, வட்டிகூட கட்ட முடியாமல் திணறியது. மேலும், கடன்சுமை அதிகரிக்க அதிகரிக்க, தங்கள் நாட்டின் கழுதைகளை விற்று கடனை அடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து. தொடர்ந்து, எண்ணெய், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் தொடங்கி அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்து பொதுமக்களை வாட்டிவதைத்தது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

ஒருபுறம் நாட்டின் நிதிநிலை அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்க, மற்றொரு புறம் ராணுவத்துடன் மோதல், எதிர்க்கட்சிகளின் போராட்டம் என இம்ரான் கானின் ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் அதிகரித்தன. குறிப்பாக, பாகிஸ்தானின் அதிகாரமிக்க உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு தலைவரை நியமிப்பதில், பிரதமர் இம்ரான் கானுக்கும், ராணுவத் தலைமைக்கும் இடையே உரசல் போக்கு உண்டானது. பொதுமக்கள், ராணுவம் ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் இம்ரான் கான் அரசு கடும் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொண்டிருக்க, இதுதான் சரியான சமயம் என்று எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சிகள், ஆட்சிக்கு எதிராகவும், பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் இறங்கின.

பாகிஸ்தான் போராட்டம்
பாகிஸ்தான் போராட்டம்

நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைய, எதிர்க்கட்சியினர், கூட்டணிக்கட்சியினர் மட்டுமல்லாமல் சொந்தக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் இம்ரான் கானுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்றத்தில்... நம்பிக்கையில்லா தீர்மானம்...

இந்த நிலையில், கடந்த மார்ச் 28-ம் தேதி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், 161 எம்.பி-க்களின் ஆதரவோடு இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், இம்ரான் கானுடன் கூட்டணியில் இருந்த முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் - (எம்.க்யூ.எம்), பி.எம்.எல்-க்யூ உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்களும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதனால், இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சி 172 என்ற பெரும்பான்மை அந்தஸ்தை இழந்து, 150-க்கும் குறைவான உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே தக்கவைத்தது. இதனால், இம்ரான் கான் ஆட்சி உறுதியாகக் கவிழும் சூழ்நிலை உருவானது.

ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்

அந்த நிலையில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இம்ரான் கான்
இம்ரான் கான்
அந்நிய நாடுகளின் உதவியோடு எதிர்க்கட்சிகள் எனது ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபடுகின்றன. என்ன நடந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். சண்டையின்றி சரணடைய மாட்டேன். வஞ்சகர்களின் அழுத்தத்துக்காக நான் ஏன் பதவி விலக வேண்டும்?
இம்ரான் கான்

அன்றைய தினம், எப்படியும் ஆட்சி கவிழ்க்கப்படும் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் திரண்டிருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்க்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத் துணை சபாநாயகர் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது,

சபாநாயகர் குவாசிம் சூரி
சபாநாயகர் குவாசிம் சூரி
இம்ரான் கான் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானம், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 5-க்கு எதிரானது; இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படும்! மேலும், இந்தத் தீர்மானத்தில் வெளிநாட்டுச் சதி இருப்பதாகவும் தெரிகிறது. எனவே, இந்தத் தீர்மானத்தை ரத்துசெய்து உத்தரவிடுகிறேன்!
என நாடாளுமன்றத் துணை சபாநாயகர் குவாசிம் சூரி அதிரடியாக அறிவித்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம்

இதனால் பெரும் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், `நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை ஏற்க முடியாது' எனக் கூறி, `எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பை நாட்டின் புதிய பிரதமராக நாங்கள் நியமிக்கிறோம்' என அறிவித்தனர். அதேபோல, புதிய சபாநாயகராக பி.எம்.எல்-என் கட்சியின் எம்.பி.ஆயாஸ் சாதிக்கை நியமிப்பதாகவும் அதிரடியாக அறிவித்தனர். இதை எதிர்த்து ஆளுங்கட்சியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பாகிஸ்தான் நாடாளுமன்றமே போர்க்களம்போலக் காட்சியளித்தது. குழப்பமும் கூச்சலும் நீடித்துக்கொண்டிருந்த நிலையில், வரும் ஏப்ரல் 25-ம் தேதி வரை பாகிஸ்தான் நாடாளுமன்றம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யார் பிரதமர்? : இம்ரான் கான் கடிதம்... அதிபரின் அதிரடி உத்தரவு...

இந்த நிலையில், ``பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்" எனக் கோரி பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியிருக்கிறார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

மேலும், அந்தக் கடிதத்தில், `` நாடாளுமன்ற துணைத் தலைவரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டுச் சதி. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயக முறைப்படி இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" எனவும் கூறியிருக்கிறார்.

அதிபர் ஆரிஃப் ஆல்வி
அதிபர் ஆரிஃப் ஆல்வி

இதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிபர் ஆரிஃப் ஆல்வி, பாகிஸ்தான் (அமைச்சரவை) நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்காலப் பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கானே பாகிஸ்தான் பிரதமராக நீடிப்பார் எனவும் அதிரடியாக உத்தவிட்டிருக்கிறார்.

இன்னும் 90 நாள்களில் பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism