Published:Updated:

`இம்ரான் அரசு PoK மக்களை விலங்குகள்போல் நடத்துகிறது!’ - ஐ.நா-விடம் உதவி கேட்ட சஜ்ஜாத் ராஜா

சஜ்ஜாத் ராஜா
சஜ்ஜாத் ராஜா

`பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், பாகிஸ்தான் அரசால் விலங்குகளைப்போல நடத்துவதைத் தடுக்குமாறு ஐ.நா சபையிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.’

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir - PoK) பகுதியைச் சேர்ந்த மக்களை பாகிஸ்தான் அரசு மிருகங்களைப்போல, அடிமைகளைப்போல நடத்துவதாக ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் Pok சமூக ஆர்வலர் சஜ்ஜாத் ராஜா புகாரளித்ததோடு ஐ.நா-விடம் உதவியும் கோரியிருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு - காஷ்மீர் மாகாணம், இந்தியா - பாகிஸ்தான் என எந்த நாட்டுடனும் இணையாமல் சுதந்திரமாக இருந்துவந்தது. ஆனால், பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தபோது, இந்தியாவின் உதவியை நாடிய காஷ்மீர் மன்னர் ஹரி சிங், `ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும்’ என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிறகு, இந்திய ராணுவம் களம் இறங்கியது.

அன்று முதல் சிறப்பு அந்தஸ்து கொண்ட இந்திய மாநிலமாக காஷ்மீர் மாறிய நிலையில்., ஒருங்கிணைந்த ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலும் இருந்துவருகின்றன.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் `பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ (Pakistan Occupied Kashmir - Pok) என்று அழைக்கப்படும். ஆசாத் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் சுயாட்சிகொண்ட இரு நிர்வாகப் பிரதேசங்களாக இருந்துவருகின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் விலங்குகளைப்போலவும், அடிமைகளைப்போலவும் நடத்துகிறது என்று சஜ்ஜாத் ராஜா ஐ.நா-வில் குற்றம் சாட்டினார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா சபையின் மனித உரிமை அமைப்பின் 45-வது அமர்வில், Pok பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தேசிய சமத்துவக் கட்சியின் (ஜே.கே.ஜி.பி.எல்) தலைவருமான பேராசிரியர் முகமது சஜ்ஜாத் ராஜா பேசும்போது, ``பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், பாகிஸ்தான் அரசால் விலங்குகளைப்போல நடத்துவதைத் தடுக்குமாறு ஐ.நா சபையிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தல் சட்டம் 2020, எங்கள் அரசியலமைப்பு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. ஐ.நா தீர்மானங்களை அப்பட்டமாக மீறி பாகிஸ்தானுடன் இணைப்பதை எதிர்க்கும் எங்கள் நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானவை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

மேலும், ``நாங்கள் எங்கள் சொந்த வீட்டில் துரோகிகளாகக் கருதப்படுகிறோம். எங்கள் அரசியல் நடவடிக்கைகளை சட்டவிரோதமானது என அறிவிப்பதன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு நம் மக்களைப் படுகொலை செய்வதற்கும், காணாமல்போனவர்களாக அறிவிப்பதற்கும் ஓர் அதிகாரத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

சஜ்ஜாத் ராஜா
சஜ்ஜாத் ராஜா

``ஜம்மு-காஷ்மீரின் எல்லையின் இருபுறமுமுள்ள இளம் மனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் மூளைச்சலவை செய்கிறார்கள்’’ என்று பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக பேராசிரியர் சஜ்ஜாத் ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ``இதனால் இந்தியாவுடனான பினாமி போரில் அவர்களை அடிமைகளாகப் பயன்படுத்துகிறது’’ என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, உலக சிந்தி அமைப்பின் பொதுச்செயலாளர் லகு லுகானா, ``பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால், சிந்தி மக்கள் காணாமல்போவது தொடர்கதையாகியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும 60 பேர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பயங்கரவாதத்தைப் பரப்பும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர்.

பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து ஐ.நா அமைப்பு அவர்களைக் காப்பாற்றி, தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். பாகிஸ்தான் அரசைப் பொறுப்பாக்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு